×

40 வயது ஆசாமியுடன் சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: கேரளாவில் பரபரப்பு


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பழங்குடி இனத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை 40 வயது வாலிபருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்த சம்பவத்தில் மணமகன், புரோக்கர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு நம் நாட்டின் சட்ட, திட்டங்கள் குறித்து அதிகமாக தெரியாது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சிலர் அவர்களை ஏமாற்றி வருகின்றனர். இந்தநிலையில் 16 வயது சிறுமி ஒருவரின் வயதை திருத்தி கோழிக்கோட்டை சேர்ந்த 40 வயது வாலிபருக்கு திருமணம் செய்து வைத்த தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் கோழிக்கோடு மாவட்டம் வடகரை பகுதியிலுள்ள ஒரு கோயிலில் வைத்து இந்த பகுதியைச் சேர்ந்த சுஜித் (40) என்பவருக்கும், வயநாடு மாவட்டம் மீனங்காடி என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த சிறுமி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். இதுகுறித்து சில தினங்களுக்கு முன் மீனங்காடி போலீசுக்குத் தகவல் கிடைத்தது. போலீஸ் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டது. மேலும், இதுதொடர்பான விசாரணையில், திருமணத்திற்கு புரோக்கராக செயல்பட்ட சுனில்குமார் (36) என்பவர் ஆதார் கார்டின் நகலில் சிறுமியின் வயதைத் திருத்தியது தெரியவந்தது.

தொடர்ந்து சிறுமியை திருமணம் செய்த சுஜித், புரோக்கர் சுனில்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு 2 பேரும் சுல்தான் பத்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post 40 வயது ஆசாமியுடன் சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: கேரளாவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Kozhikode ,
× RELATED கேரள சட்டசபை கூட்டம் நாளை தொடங்குகிறது