புதுடெல்லி: பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார கொலை வழக்கில் புதிய நிலை அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், கடந்த மாதம் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இதுதொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னார்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் மருத்துவர் கொலை வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்நிலையில் இன்று இவ்வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் இதுவரை வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல மேற்கு வங்காள அரசின் சுகாதார துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மருத்துவர்கள் போராட்டத்தால் 25 நோயாளிகள் இறந்துள்ளனர். இறந்த பெண் மருத்துவரின் ஜீன்ஸ் பேன்ட் நீக்கப்பட்டிருந்தது. உடலில் காயங்கள் இருந்தது. அவர் அரை நிர்வாணமாக காணப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தார்’ என்றார். மாநில அரசின் தரப்பில், ‘5 பெண் மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாவட்ட நீதிபதி முன் பெண் மருத்துவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவமனை பாதுகாப்புக்காக 3 கம்பெனி படைகள் உள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுத்துள்ளோம். அவர்களுக்கும் ஒன்றிய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த 2 அறிக்கையை வைத்து சுப்ரீம் கோர்ட்டு விசாரணையை தொடங்கியது. அப்போது பெண் பயிற்சி டாக்டரின் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து எப்போது பதிவு செய்யப்பட்டது என்று சிபிஐ, மேற்கு வங்க அரசிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். பிற்பகல் 2.55 மணிக்கு பதிவு செய்யப்பட்டது என்று, இறப்பு சான்றிதழ் 1.45 மணிக்கு வழங்கப்பட்டது என்றும் மேற்கு வங்காள அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கபில்சிபில் தெரிவித்தார். வீடியோ பதிவுகள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதா? என்றும் தலைமை நீதிபதி கேட்டார்.சிபிஐ. தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது ‘பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடர்பான தடயவியல் மாதிரிகள் மேற்கு வங்காளத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தடயவியல் மாதிரிகளை அனுப்ப விசாரணை நிறுவனமான சிபிஐ முடிவு செய்துள்ளது என்றார்.
தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘வரும் செவ்வாய்க்கிழமைக்குள் (செப். 17) புதிய நிலை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிடுகிறோம். இதற்கிடையே இவ்வழக்கில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்’ என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது.
The post பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார கொலை வழக்கு : மருத்துவர்கள் நாளை மாலைக்குள் பணிக்கு திரும்ப உத்தரவு!! appeared first on Dinakaran.