×

அறைஹட்டி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்

 

ஊட்டி, ஜூலை 27: ஊட்டி அருகே உள்ள அறைஹட்டி, கீழ் டெரமியா மற்றும் தூதூர் மட்டம் பகுதியில் யானை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தற்போது பல்வேறு பகுதிகளிலும் வனவிலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, யானைகள் காட்டு மாடுகள் புலி சிறுத்தை கரடி உட்பட அனைத்து விலங்குகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இவை உணவு மற்றும் தண்ணீரை தேடி மக்கள் வாழும் பகுதிக்கு வரும் போது மனித விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதைத்தடுப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் சில சமயங்களில் வனவிலங்குகள் தாக்கி பொதுமக்கள் உயிர் இழப்பது வாடிக்கையாக உள்ளது. தற்போது, ஊட்டி அருகே உள்ள குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட பீச் வர்த் காப்புக்காடு மற்றும் குப்பை தோட்டத்தில் ஐந்து காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த காட்டு யானைகளின் நடமாட்டத்தை குந்தா வனச்சரக ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். எனினும் இவை எந்த நேரத்திலும் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது. இதேபோல் மக்கள் வாழும் பகுதிக்கும் செல்ல வாய்ப்புள்ளது. எனவே, குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட மேல் டெராமியா, கீழ்டெரமியா, அறையட்டி, கெரடாலீஸ், தூதூர் மட்டம், மகாலிங்கம் லீஸ், கிரேக் மோர் எஸ்டேட் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்க வனத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

The post அறைஹட்டி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Forest department ,Chamkhatti ,Ooty ,Lower Teramia ,Tudur ,Nilgiris district ,Chachahatti ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையத்தில் சிறுத்தை...