×

மேட்டுப்பாளையத்தில் சிறுத்தை நடமாட்டம்: கேமராக்கள் பொருத்தி வனத்துறை கண்காணிப்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரக பகுதிகளில் ஏராளமான காட்டு யானை, மான், காட்டு மாடு, சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வகை வன விலங்குகள் உள்ளன. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில், சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம்-வெள்ளிப்பாளையம் சாலையில் உள்ள கருப்பராயன் கோவில் அருகே சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பது அங்குள்ள விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளை ஒட்டியுள்ள விளைநிலங்களில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ள வெள்ளிப்பாளையம் சாலை கருப்பராயன் கோவில் அருகே இரு இடங்களில் சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி அதன் நடவடிக்கையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் கூறுகையில்,‘‘மேட்டுப்பாளையம்-வெள்ளிப்பாளையம் சாலையில் உள்ள கருப்பராயன் கோவில் அருகே சிறுத்தையின் நடமாட்டம் இருப்பது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் தெரியவந்தது. இதனையடுத்து அப்பகுதியில் தற்போது இரு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

The post மேட்டுப்பாளையத்தில் சிறுத்தை நடமாட்டம்: கேமராக்கள் பொருத்தி வனத்துறை கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Leopard movement in ,Mettupalayam ,Forest department ,Sirumugai ,Leopard movement ,department ,
× RELATED மேட்டூர் அருகே 5 இடங்களில் கூண்டு...