×

அக்னிபாத் குறித்து கருத்து கார்கில் தினத்திலும் அரசியல் செய்வதா?பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி


புதுடெல்லி: கார்கில் 25வது ஆண்டு வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி,’ அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டம் ராணுவம் மேற்கொண்ட தேவையான சீர்திருத்தங்களுக்கு ஒரு உதாரணம். ஆயுதப்படைகளில் சராசரி வயதைக் குறைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன’ என்றார். பிரதமரின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ‘கார்கில் தினம் அன்று தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவது போன்ற நிகழ்வுகளிலும் பிரதமர் மோடி அற்ப அரசியல் செய்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, வருந்தத்தக்கது. இதற்கு முன் எந்தப் பிரதமரும் இதைச் செய்ததில்லை. ராணுவத்தின் விருப்பத்தின் பேரில் அக்னிபாத் திட்டத்தை தனது அரசு செயல்படுத்தியதாக மோடி கூறுகிறார். இது அப்பட்டமான பொய். நமது வீரம் மிக்க ஆயுதப்படைகளுக்கு மன்னிக்க முடியாத அவமானம். மோடி ஜி, நீங்கள்தான் பொய்களைப் பரப்புகிறீர்கள்.

பல ஓய்வுபெற்ற அதிகாரிகள் இந்தத் திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். அக்னிபாத் திட்டம் தேசிய பாதுகாப்பு மற்றும் கிராமப்புற இளைஞர்களின் அபிலாஷைகளுக்கு ஆபத்தை விளைவிக்கிறது. இவை அனைத்தும் பதிவாகி உள்ளது. இத்திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்பி டோலா சென்,’ராணுவம் எப்போதுமே இளமையாக இருக்கிறது.

ஒருவேளை பிரதமருக்குத் தெரியாமல் இருக்கலாம். அவர்கள் இளமையாக இருக்கும்போது விருப்ப ஓய்வு பெறுகிறார்கள். அவர்கள் தேசத்திற்கு சேவை செய்கிறார்கள், நாங்கள் அவர்களை மதிக்கிறோம்’ என்றார். சமாஜ்வாடி கட்சித் தலைவர் தர்மேந்திர யாதவ் கூறுகையில், ‘பழைய ஆள்சேர்ப்பு முறையே சிறந்தது, இது ராணுவ வீரர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களது குடும்பங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது’ என்றார்.

The post அக்னிபாத் குறித்து கருத்து கார்கில் தினத்திலும் அரசியல் செய்வதா?பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Agnibad ,Kargil Day ,Modi ,New Delhi ,Kargil ,PM ,Dinakaran ,
× RELATED திறன் மேம்பாடு குறித்து சிங்கப்பூர்...