×

கள்ளச்சாராயத்திற்கு எதிரான வேட்டை தொடங்கியது; வடக்கு மண்டலத்தில் 466 கள்ளச்சாராய வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்


வடக்கு மண்டலம் முழுவதும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான வேட்டையில் 466 சாராய வியாபாரிகளின் வங்கி கணக்குகளை முடக்கி வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் அவர்களின் சொத்துக்களை முடக்கும் வகையில் பட்டியலும் எடுக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் மெத்தனால் கலந்து சாராயத்தை குடித்து பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் கண்பார்வைகள் இழந்தனர்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கையால் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளர் அதிடியாக மாற்றப்பட்டது. மேலும், கள்ளச்சாராய விற்பனை மற்றும் மெத்தனால் விற்பனை செய்த மொத்த வியாபாரிகள் அனைவரும் கூண்டோடு கைது செய்யப்பட்டனர்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக கள்ளச்சாராயத்திற்கு எதிரான அதிரடி வேட்டை நடத்தில் சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டது. பல லட்சம் லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டது.

மேலும், தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்தத்தையும் முதல்வர் கொண்டு வந்தார். அதன்படி இனி கள்ளச்சாராயம் குடித்து யாரேனும் உயிரிழந்தால் சம்பந்தப்பட்ட சாராயத்தை விற்பனை செய்யும் நபர் மற்றும் காய்ச்சும் நபர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் மதுவிலக்கிற்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்பட்டது.

இதற்கிடையே செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தான் கடந்த 3 ஆண்டுகளில் கள்ளச்சாராய இறப்புகள் நடந்துள்ளது. இதனால் வடக்கு மண்டலத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து மதுவிலக்கு அமலாக்கத்துறை செய்து வருகிறது.அதேநேரம் வடக்கு மண்டல ஐஜியாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டார். அஸ்ரா கார்க் போதை பொருட்கள் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளார்.

குறிப்பாக தெற்கு மண்டல ஐஜியாக அஸ்ரா கார்க் பணியில் இருந்த போது தான், தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல்கள் மூலம் போதை பொருட்கள் கடத்தப்படுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டது. போதை பொருட்களுக்கு எதிரான அஸ்ரா கார்க் எடுத்த சிறப்பான பணியை மதுரை உயர் நீதிமன்ற கிளையும் பாராட்டியுள்ளது. போதை பொளுக்கு எதிரான சிறப்பான நடவடிக்கை எடுத்ததால் பதக்கங்களும் வழங்கப்பட்டது.

அதன் பிறகு சென்னை பெருநகர காவல்துறையில் கஞ்சா போதை பொருட்கள் முற்றிலும் ஒழிக்கும் வகையில் சென்னை பெருநகர வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டார். இவரது சிறப்பான நடவடிக்கையால் ஆந்திரா மற்றும் ஒடிசாவில் இருந்து ரயில்கள் மற்றும் சரக்கு வாரங்கள் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பெருமளவு ஒழிக்கப்பட்டது. அதோடு இல்லாமல் உற்பத்தி செய்யப்படும் ஆந்திரா மாநிலத்திற்கு சென்று போலீசார் கஞ்சா வியாபாரிகள் கைது செய்தும் மற்றும் கஞ்சா ஆயில் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டன.

இந்நிலையில் வடக்கு மண்டல ஐஜியாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்ட பிறகு, போதை பொருட்கள் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிராக பல அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். கடந்த 10 நாட்களாக வடக்கு மண்டலத்தில் உள்ள கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இரவு நேரத்தில் நேரில் சென்று மதுவிலக்கு போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாருடன் இணைந்து அதிரடி வேட்டை நடத்தினர். அதில் கள்ளச்சாராய வியாபாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர். சாராய ஊரல்களும் அழிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக 10 மாவட்டங்களில் கள்ளச்சாராயம் வழக்கில் கைது செய்யப்பட்ட வியாபாரிகளின் 466 வங்கி கணக்குகள் முடக்கி வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நடவடிக்கை எடுத்துள்ளார். அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 98 வியாபாரிகளின் வங்கி கணக்குகள் மற்றும் குறைந்தபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 12 சாராய வியாபாரிகளின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.அதோடு இல்லாமல் கள்ளச்சாராய வியாபாரிகளின் அசையா மற்றும் அசையும் சொத்துக்களின் முடக்க ஏதுவாக கணக்கெடுக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால் பல ஆண்டுகளாக வடக்கு மண்டலத்தில் நீடித்து வந்த கள்ளச்சாராம் விற்பனை மற்றும் காய்ச்சுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.

 

The post கள்ளச்சாராயத்திற்கு எதிரான வேட்டை தொடங்கியது; வடக்கு மண்டலத்தில் 466 கள்ளச்சாராய வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம் appeared first on Dinakaran.

Tags : Northern Zone ,Northern Zone IG Asra Cork ,Kalalakurichi ,Dinakaran ,
× RELATED கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக பதிவு...