×

18 ஆண்டுகால மக்களின் கனவு இசிஆர் 6 வழிச்சாலை விரிவாக்க பணி மும்முரம்: 8 மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வர தீவிரம்; திருவான்மியூர் – உத்தண்டி மேம்பாலப் பணியும் விறுவிறுப்பு

* சிறப்பு செய்தி
இசிஆர் சாலை என்ற கிழக்கு கடற்கரை சாலையானது, சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி, சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி உடன் இணைக்கும் முக்கிய சாலையாக (மா.நெ.49) உள்ளது. இதில் திருவான்மியூர் முதல் அக்கரை வரை, 10.5 கி.மீ., தூரம் கொண்டது. இது இடத்தைப் பொறுத்து, 60 முதல் 80 அடி வரை அகலத்தில், நான்கு வழிச் சாலையாக உள்ளது. இந்த சாலையில், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இச்சாலைப் பகுதியில் 17 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. எனவே, இச்சாலையை கடக்க சுமார் 45 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை ஆகிறது. சாலையில் தற்பொழுது 69,000 வாகனங்கள் நாளொன்றுக்கு செல்கின்றன.

திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான 15 கிலோமீட்டர் தூரத்தில், சாலையின் இரு புறத்திலும் 347 சிறுசாலைகள், தெருக்கள் உள்ளன. எனவே இச்சாலையை எவ்வளவு அகலப்படுத்தினாலும் நேராக செல்லும் வாகன போக்குவரத்துக்கும் இச்சிறு சாலைகளில் செல்லும் வாகன போக்குவரத்திற்கும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆண்டுதோறும் 7.5 சதவீத வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் மாமல்லபுரம் செல்ல இசிஆர் சாலையை தான் பயன்படுத்துகின்றனர். இதனால் இசிஆர் சாலை எப்போதுமே கடும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். எனவே இந்த சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.

கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த கலைஞர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களால் அதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் 2012ம் ஆண்டு பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு பணியானது மீண்டும் தொடங்கப்பட்டது. இதையடுத்து, முதல் கட்ட நிலம் எடுப்பு பணிக்காக ரூ.940 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் பல இடங்களில் விறுவிறுப்பாகவும் முடிந்தது. அதேபோல் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்ட சாலை மேம்பாலம் கட்டுவது குறித்து 2024-25ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதியோடு, அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து, இப்பணிக்கான சாத்தியக்கூறு அறிக்கை நெடுஞ்சாலைத் துறையினால் தயாரிக்கப்பட்டு வருகிறது. திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான சாலை 15 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இதனை கருத்தில் கொண்டு திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை செல்லும் வகையிலான உயர்மட்ட சாலை அமைப்பதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் டைடல் பூங்கா சந்திப்பில் துவங்கி எல்பி சாலை சந்திப்பு, கொட்டிவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் அக்கரை வழியாக உத்தண்டியில் முடிவடைகிறது.

இப்பகுதிவாழ் பொதுமக்களின் தேவை கருதி, எல்பி சாலை சந்திப்பு, திருவான்மியூர் ஆர்டிஓ ஆபீஸ், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் அக்கரை சந்திப்பில் பாலத்தில் ஏறி அல்லது இறங்கி செல்லும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இப்பாலத்தின் மூலம் இப்பகுதியை 20 நிமிடங்களில் கடக்க இயலும். தற்போதைய ஆறு வழிச்சாலை அமைக்க நில எடுப்பு செய்யப்பட்டு வருகிறது. கூடுதல் நில எடுப்பு ஏதும் மேற்கொள்ளாமல், 18 மாதங்களுக்குள் இந்த சாலை மேம்பாலத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: சாலையின் இருபுறமும் மேற்கொள்ளப்படும் பணியின் காரணமாக சாலையில் மண் ஆங்காங்கே சேர்ந்து விடுகிறது. இதனால் சாலை இருச்சக்கர வாகனங்கள் செல்லும் போது எதிர்பாராத விபத்துகள் ஏற்படுகிறது. அதேபோல் சாலை ஓரங்களில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளுக்கான பள்ளங்கள் உள்ளதால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. எனவே இதனை முறையாக கையாள வேண்டும். பொதுவாக இசிஆர் சாலையில் கடைகள் உள்ளதால் அதற்காக செல்லும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக நிறுத்துமிடங்கள் இல்லை என்பதால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: இசிஆர் சாலையை 6 வழிச்சாலையாக மேற்கொள்ளப்படும் பணிகள் மிகவும் முக்கியமானதாக உள்ளது. கிட்டதட்ட 14 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. முன்பை விட, வாகனங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. பல நேரம், சாலையைக் கடக்க முடியாத அளவுக்கு நெரிசல் உள்ளது. 5 ஆண்டுகளில் பணி முடிக்க வேண்டிய திட்டம். அதிகாரிகளின் அலட்சியம், அரசியல்வாதிகளின் தலையீடு, ஆக்கிரமிப்பாளர்கள், நிலம் வழங்குவோரின் அக்கறையின்மை ஆகிய காரணங்களால், இவ்வளவு காலம் ஆகியும் ஒரு கி.மீ., தூரம் வரை பணி முழுமை பெறவில்லை. இந்தநிலையில் அடுத்தாண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவது இப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

அதேபோல் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை மேம்பாலம் அமைக்கப்படும் திட்டத்திற்கான முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் 6 வழிச்சாலையை விரிவாக்கம் செய்யும் பணியுடன் மேம்பாலத்திற்கான பணிகளுக்கான திட்டத்தை வகுத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் ஏற்கனவே சாலையின் இருப்புறங்களில் நிலம் கையெடுப்பு நிறைவடைந்துவிட்டது. மேலும் நிலங்கள் கையப்படுத்துதல் இன்றி உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாலை விரிவாக்கத்திற்கு மையப்பகுதியில் அமைக்கப்படும் சாலைத்தடுப்புகள் இடையே தூண்கள் அமைத்து பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளையில் தற்போது சாலையை மையப்பகுதியில்தான் மின்விளக்கு கம்பங்கள், சில மின்சார கம்பிகள் செல்கிறது. இந்த பணிக்காக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் உயர்மட்ட மேம்பாலத்தின் கட்டுமான திட்டத் திட்டத்துடன், விரிவாக்க பணியை ஒப்பிட்டு மேற்கொள்ள வேண்டும். மேலும் முதல்வர் தலையிட்டு, பணியை வேகப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சாலை விரிவாக்கப் பணி துவங்கி 14 ஆண்டுகளை கடந்த பின்னர் தற்போதே பணிகள் முழு வீச்சுடன் நடைபெறுகிறது. மேலும் நிலம் கையகப்படுத்துதல் முடிந்தால்தான், சாலையை விரிவாக்கம் செய்ய முடியும். அதன்படி திருவான்மியூர் முதல் அக்கரை வரை 60 சதவீத நில கையப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணியை வருவாய்த் துறையும், சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையும் செய்கின்றன.

மொத்தமுள்ள, 10.5 கி.மீ., தூரத்தில் ஆக்கிரமிப்புகள், பட்டா மற்றும் நத்தம் புறம்போக்கு இடங்கள் உள்ளன. வருவாய் கிராமம் வாரியாக, பட்டாதாரர்களுக்கு இழப்பீடு வழங்கி, நிலம் கையகப்படுத்தப்படுகிறது. நிலம் எடுப்புக்கு, சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில், 25 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. குறிப்பாக திருவான்மியூர் பகுதிகளில் கடந்தாண்டு வரை பிரச்னைக்குரியதாகவே இருந்தது. தற்போது ஒரு சில பகுதிகளில் நிலம் கையகப்படுத்தி, சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதில், விரிவாக்கப் பணி இம்மாதம் துவங்கும். வருவாய்த் துறையின் துரித நடவடிக்கையை பொறுத்துதான், எங்கள் பணி அமையும்.

நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், நிலம் எடுப்பு குழுவில், தாசில்தார்கள், சர்வேயர்கள் அயல் பணி என்ற அடிப்படையில் சேர்ந்துள்ளனர். அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் விரிவாக்கப் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது எதிர்ப்புகள் இருந்தாலும் எதிர்க்காலங்களில் பாராட்டும் அளவிற்கு நிலைத்து நிற்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். திருவான்மியூர் முதல் அக்கரை வரை 10.5 கி.மீ., தூரத்தில் 17 சிக்னல்கள் உள்ளன. இதனால் சாலையை கடக்க சுமார் 45 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை ஆகிறது. தினமும் 69 ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன.

வேகமெடுத்துள்ள பணிகளால் பொதுமக்கள் மகிழ்ச்சி
* கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் உள்ள கட்டிடங்களை இடிக்கும் பணியை நெடுஞ்சாலை துறை தொடங்கியதால் ஆறு வழிச்சாலை அமைக்கும் திட்டம் வேகமெடுத்துள்ளது. இதனால் பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
* இசிஆர் சாலை 6 வழிச்சாலையாக மாற்றப்பட்டால் பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதோடு, விபத்துகள் ஏற்படுவதும் தடுக்கப்படும். இதனால் சென்னைவாசிகள் மட்டுமல்ல, சுற்றுலாவாசிகளும் இந்த திட்டத்தால் மிகுந்த பயனடைவர்.
* திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லுார் ஆகிய 6 கிராமங்கள் இந்நில எடுப்பு பணியில் 15 பகுதிகளாக பிரிக்கப்பட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம் மற்றும் நீலாங்கரை முதல் அக்கரை வரை என 4 கட்டங்களாக பிரிக்கப்பட்டு கொட்டிவாக்கம், பாலவாக்கம் மற்றும் நீலாங்கரை முதல் அக்கரை வரை 3 கட்டங்களில் நடைபெறுகிறது.
* கிழக்கு கடற்கரைச் சாலையை ஆறுவழித்தடமாக அகலப்படுத்துவதற்கு கொட்டிவாக்கம் பகுதியில் ரூ.19 கோடி, பாலவாக்கம் பகுதியில் ரூ.18 கோடி, நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லுார் பகுதிகளில் ரூ.135 கோடியில் பணிகள் நடைபெறுகிறது.
* சாலையின் மையத்தில் 1.2 மீட்டர் அகலத்திற்கு மைய தடுப்புச் சுவர், தடுப்புச் சுவரின் இருபுறமும் 11 மீட்டர் அகலத்திற்கு தார் தளம், 1.65 மீட்டர் அகலத்திற்கு பேவர் பிளாக் தளம் மற்றும் 2 மீட்டர் அகலத்திற்கு மழைநீர் வடிக்கால்வாய் மற்றும் நடைபாதை அமைக்கப்பட உள்ளது.
* நில எடுப்பு செய்த இடங்களில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிவுற்ற இடங்களில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பயன்பாட்டு உபகரணங்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெறுகிறது.
* மின்சார உபகரணங்கள் மாற்றி அமைக்கப்பட்டவுடன், சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் குடிநீர் குழாய் மற்றும் பாதாள கழிவு நீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் இருபுறமும் நடைபெறும். அதன் பின் சாலை விரிவாக்கம் பணிகள் முடிவடையும்.

The post 18 ஆண்டுகால மக்களின் கனவு இசிஆர் 6 வழிச்சாலை விரிவாக்க பணி மும்முரம்: 8 மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வர தீவிரம்; திருவான்மியூர் – உத்தண்டி மேம்பாலப் பணியும் விறுவிறுப்பு appeared first on Dinakaran.

Tags :
× RELATED வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை...