×

நடிகைகள் அவர்களுக்கு ஒரு சரக்கு மட்டுமே மலையாள நடிகர்கள் சங்கத்திற்கு தலையும் கிடையாது முதுகெலும்பும் கிடையாது: நடிகை பத்மப்பிரியா ஆவேசம்

மலையாள சினிமாவில் பவர் குரூப் இருப்பது உண்மைதான் என்றும், நடிகர்கள் சங்கத்திற்கு முதுகெலும்பு கிடையாது என்றும் நடிகை பத்மப்பிரியா கூறினார். தமிழில் தவமாய் தவமிருந்து, சத்தம் போடாதே, பட்டியல், மிருகம், பொக்கிஷம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் பத்மபிரியா. மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் அமைக்கப்பட்ட உமன்ஸ் இன் சினிமா கலெக்டிவ் என்ற அமைப்பை உருவாக்குவதற்கு இவரும் ஒரு காரணமாக இருந்தார். பத்மப்பிரியா, ரேவதி, ரம்யா நம்பீசன், மஞ்சு வாரியர் உட்பட நடிகைகள் நேரில் சென்று முதல்வர் பினராயி விஜயனிடம் அளித்த கோரிக்கையை ஏற்றுத் தான் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் நடிகை பத்மப்பிரியா அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: நானும் அங்கமாக உள்ள அமைப்பு கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த பின்னர் தான் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. அதில் மகிழ்ச்சியாக இருந்தாலும் கடந்த நான்கரை வருடங்களுக்கு மேலாக அந்த அறிக்கையை மறைத்து வைத்தது ஏன்? என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இதன் பிறகு பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க அரசு ஒரு சிறப்பு போலீஸ் குழுவை மட்டும் அமைத்துள்ளது. இதனால் மட்டும் இந்த விவகாரத்தில் முழு தீர்வை காண முடியாது. நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்த மலையாள நடிகர்கள் சங்கத்திற்கு தலையும் கிடையாது, முதுகெலும்பும் கிடையாது. ராஜினாமா செய்ததன் மூலம் அனைவரும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளனர்.

மலையாள சினிமாவில் பவர் குரூப் இருக்கிறது. யார் மறுத்தாலும் அதுதான் உண்மையாகும். தங்கள் கைகளில் அதிகாரம் இருப்பதால்தான் அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக யாரும் வாயைத் திறக்க மறுக்கின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள விவகாரத்தை ஒரு பாலியல் பிரச்னையாக மட்டுமே சினிமா துறையினர் பார்க்கின்றனர். அவர்களுக்கு நடிகைகள் அனைவரும் ஒரு சரக்கு மட்டுமே. எனக்கு மலையாளத்தில் வாய்ப்புகள் திடீரென குறைந்துவிட்டது. அதற்கு என்ன காரணம் என்று எனக்கு நன்றாகவே தெரியும். எனக்கு 26 வயது இருக்கும்போது, வயதாகி விட்டதே, நடிப்பதை நிறுத்தக் கூடாதா என்று ஒரு தயாரிப்பு நிர்வாகி கேட்டது எனக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

* தெலுங்கு சினிமாவிலும் பாலியல் புகாருக்கு கமிட்டி தேவை: நடிகை அனுஷ்கா விருப்பம்
‘பாகுபலி’, ‘பாகுபலி 2’, ‘அருந்ததி’, ‘லிங்கா’, ‘என்னை அறிந்தால்’, ‘வேட்டைக்காரன்’ உள்பட பல படங்களில் நடித்தவர் அனுஷ்கா ஷெட்டி. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:
மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி கொண்டு வந்த கேரள அரசுக்கு நன்றி. இதன் மூலம் திரையுலகில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இதற்கு மூல காரணமாக இருந்த தி வாய்ஸ் ஆஃப் உமன் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். இதேபோல் 2019ம் ஆண்டு தெலுங்கு சினிமாவிலும் பெண்கள் குழு உருவானது. இந்த குழுவும் திரையுலகில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்க கோரி வருகிறது. தெலங்கானா அரசு இதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் இன்றி நடவடிக்கைகள் எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அனுஷ்கா கூறியுள்ளார்.

* கேரவனில் ரகசிய கேமரா விவகாரம்: என்னிடம் தகவலை கேட்டார் மோகன்லால்; நடிகை ராதிகா தகவல்
ஒரு மலையாள சினிமா படப்பிடிப்பில் இருந்தபோது கேரவனில் ரகசிய கேமரா வைக்கப்பட்டு நடிகைகள் உடைமாற்றும் காட்சிகளை சிலர் பார்த்து ரசித்ததாக நடிகை ராதிகா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோகன்லால், திலீப் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் ராதிகா மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இதனால் எந்த நடிகரின் படத்தில் கேரவனில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது என்ற பரபரப்பு மலையாள சினிமா உலகில் ஏற்பட்டது. நடிகை ராதிகாவும் இது தொடர்பாக விளக்கமாக எதுவும் சொல்லவில்லை. இந்தநிலையில் ராதிகா கூறியது: ஒரு மலையாளப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது கேரவனில் ரகசிய கேமராவை வைத்து நடிகைகள் உடைமாற்றும் காட்சிகளை சிலர் பார்த்துக் கொண்டிருந்ததை நான் கவனித்தேன்.

அப்போது முன்னணி நடிகர்கள் யாரும் அங்கு கிடையாது. உடனடியாக நான் சப்தம் போட்டு அந்தக் காட்சிகளை அழித்து விடுமாறு கூறினேன். தயாரிப்பு நிர்வாகிகளை அழைத்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை இப்போது கூறி ஏன் பிரச்னையாக்குகிறீர்கள் என்று சிலர் என்னிடம் கேட்கின்றனர். என்னுடைய வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட பிரச்னைகளுக்கு உடனுக்குடன் நான் தீர்வு கண்டுள்ளேன். தேவையில்லாத விவாதங்களை ஏற்படுத்த நான் முயற்சிக்கவில்லை. கேரவனில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்த விவகாரத்தில் இப்போது சட்ட நடவடிக்கைக்கு செல்ல விரும்பவில்லை என்றார். இதற்கிடையே என்னுடைய படத்தின் செட்டிலா கேமரா வைக்கப்பட்டு இருந்தது என்று நடிகர் மோகன்லால் தன்னிடம் கேட்டு தெரிந்து கொண்டதாக நடிகர் ராதிகா கூறினார்.

* ஹேமா கமிட்டி அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய கேரள அரசு முடிவு
ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி கடந்த வாரம் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், செப்டம்பர் 9ம் தேதிக்குள் ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவிட்டது.
முழு அறிக்கையையும் தாக்கல் செய்தால் பல திடுக்கிடும் விவரங்கள் வெளியாகலாம் என்பதால் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அப்பீல் செய்ய கேரள அரசு ஆலோசித்து வந்தது. இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது. இந்நிலையில் ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கேரள அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி முழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால் மேலும் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* பிரபல நடிகர் நிவின் பாலி மீது கூட்டு பலாத்கார வழக்கு
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான இவர் நேரம், பிரேமம் உள்பட ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் நேரம் மற்றும் ரிச்சி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் மீதும் பாலியல் புகார் செய்யப்பட்டுள்ளது. சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி துபாயில் வைத்து தன்னை நிவின் பாலி, தயாரிப்பாளர் சுனில் உட்பட 5 பேர் பலாத்காரம் செய்ததாக எர்ணாகுளம் அருகே உள்ள நேரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் எர்ணாகுளம் ஊன்னுகல் போலீசில் புகார் செய்துள்ளார்.

கடந்த வருடம் தான் ஒரு வேலை விஷயமாக துபாய்க்கு சென்றபோது அங்கு வைத்து தன்னுடைய தோழி ஒருவர் நடிகர் நிவின் பாலியை அறிமுகம் செய்து வைத்ததாகவும், அப்போது சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி நிவின் பாலி, தயாரிப்பாளர் சுனில் உள்பட 5 பேர் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து நடிகர் நிவின் பாலி, தயாரிப்பாளர் சுனில் மற்றும் புகார் கொடுத்த இளம் பெண்ணின் தோழி உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். என் மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகாரில் எந்த உண்மையும் கிடையாது. இதில் சதி உள்ளது. புகார் கொடுத்த பெண்ணை எனக்குத் தெரியாது. நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன் என்று நடிகர் நிவின் பாலி கொச்சியில் நிருபர்களிடம் கூறினார்.

* வீட்டுக்கு வரவழைத்து நடிகை பலாத்காரம் நடிகர் பாபுராஜ் மீது வழக்கு
நடிகர்கள், டைரக்டர்கள் உள்பட மலையாள சினிமாத் துறையினர் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில் மலையாள முன்னணி நடிகரான பாபுராஜ் மீதும் பாலியல் பலாத்கார வழக்கு பதியப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அந்த நடிகை சிறப்பு விசாரணைக் குழு டிஐஜி அஜிதா பேகத்திற்கு இமெயில் மூலம் அளித்த புகாரில் கூறியிருப்பது: நான் டிகிரி படித்து முடித்த பின்னர் நடிகர் பாபுராஜின் மூணாறில் உள்ள ரிசார்ட்டில் பணிபுரிந்து வந்தேன். அப்போது ஒரு நாள் அங்கு வந்த பாபுராஜை நான் சந்தித்தபோது நடிக்க வாய்ப்பு தருமாறு கேட்டேன். தொடர்ந்து கூதாசா என்ற படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.

அதன்பிறகு கடந்த 2019ல் வேறு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும், அது தொடர்பாக பேச வேண்டும் என்றும் கூறி கொச்சி ஆலுவாவில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்தார். அங்கு சென்ற என்னை அவர் மிரட்டி பலாத்காரம் செய்தார். அன்று இரவு முழுவதும் என்னை அங்கு தங்க வைத்து மறுநாள் தான் வீட்டுக்கு அனுப்பினார். இவ்வாறு அவர் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக தற்போது ஆலுவா போலீசார் நடிகர் பாபுராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இவர் பிரபல நடிகை வாணி விஸ்வநாத்தின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post நடிகைகள் அவர்களுக்கு ஒரு சரக்கு மட்டுமே மலையாள நடிகர்கள் சங்கத்திற்கு தலையும் கிடையாது முதுகெலும்பும் கிடையாது: நடிகை பத்மப்பிரியா ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Padmapriya Awesam ,Padmapiriya ,Malayalam Actors Association ,Padmapriya Avesam ,
× RELATED ஹேமா கமிட்டி அறிக்கையால் புயல் மலையாள...