×

மெகா குட்கா 2 ஊழல்: குட்கா கும்பலை குறிவைத்த சிபிஐ, ஐடி: ஜெயலலிதா ரியாக்‌ஷன் என்ன? அமைச்சர்கள், அதிகாரிகளை சிக்க வைத்த டைரி

2014ம் ஆண்டு மார்ச் மாதம்… சென்னை சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகம் வழக்கம் போல் இயங்கிக்கொண்டு இருக்கிறது. அங்குள்ள உயர் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம். தமிழ்நாடு குட்கா உள்ளிட்ட போதைப்பொருளின் கூடாரமாக மாறிவிட்டது. சென்னையில் இந்த இந்த இடங்களில் எல்லாம் குட்கா குடோன்கள் செயல்படுகின்றன. இதன் உரிமையாளர்கள் பெயர்கள் எல்லாம் பட்டியலிட்டு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதோடு அந்த குடோன்களில் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா தயாரிக்கப்படுவதாகவும், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கையை பிசைந்து நின்றது சிபிஐ. அப்போது தமிழ்நாடு முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ். வேறு வழியில்லை, இப்போது போல் தட்டித்தூக்கினால் ஜெயலலிதாவின் கோபம் நம் மேல் பட்டுவிடும். எனவே லோக்கல் போலீஸ்தான் விசாரிக்க வேண்டும் என்று கூறி அந்த கடிதத்தில் இருந்த தகவல்களை குறிப்பிட்டு சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜூக்கு அறிக்கை அனுப்பி விட்டு வேடிக்கை பார்த்தது சிபிஐ.

சிபிஐயிடம் இருந்து வந்த கடிதம்… வேறு வழியில்லை கமிஷனர் ஜார்ஜ் நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். சென்னை காவல்துறை மத்திய குற்றப்பிரிவு அதிகாரி ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டார் ஜார்ஜ். சிபிஐக்கு கடிதம் வந்தது மார்ச் மாதம். சிபிஐ ஆலோசித்து சென்னை போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுத, அவர் ஆலோசித்து ஒரு குழு அமைக்க 3 மாதங்கள் கடந்து விட்டது. ஜூன் மாதம் தான் சென்னை செங்குன்றத்தில் உள்ள 3 குடோன்களை குறிவைத்து சிறப்பு படை அதிரடி சோதனை நடத்தியது. எம்டிஎம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த அந்த குடோனில் குட்கா பாக்கெட்டுகள், குட்கா தயாரிக்கும் மூலப்பொருட்கள் டன் கணக்கில் கைப்பற்றப்பட்டன.

விசாரணையில் தொழில்அதிபர்கள் மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோருக்கு சொந்தமான குடோன்கள் என்பதும், அவர்கள் தான் இந்த குடோன்களில் வைத்து குட்கா தயாரித்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதிரடி விசாரணைகள், பறிமுதல்கள் நடந்து கொண்டு இருந்த போது ரெய்டு நடத்திய அந்த அதிகாரிக்கு திடீரென வந்தது ஒரு போன் கால். அத்தனை சோதனையும், அதிரடி நடவடிக்கைகளும் அத்துடன் முடிக்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட குட்கா பொருட்கள், பாக்கெட்டுகள் அத்தனையும் செங்குன்றம் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டன.

சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்ட சிறப்பு குழுவிடம் இருந்த குட்கா விசாரணை செங்குன்றம் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. அத்துடன் குட்கா பரபரப்பு அடங்கியது. சாதாரண சோதனை அளவில் முடிவுக்கு வந்தது அப்போதைய குட்கா பரபரப்பு. வெளி உலகிற்கு எந்தவித தகவலும் வெளிவராமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. 2016 மே மாதம் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகிறார் ஜெயலலிதா. ஆனால் ஜூலை 8ம் தேதி சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள 5 இடங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது.

தமிழ்நாடு, ஆந்திராவை சேர்ந்த சிலகுட்கா தயாரிப்பாளர்கள் ரூ.330 கோடி அளவுக்கு வரிஏய்ப்பு செய்ததாக வந்த தகவல் அடிப்படையில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சென்னை செங்குன்றம் அருகே உள்ள தீர்த்தங்கரைபட்டு, சோத்துப்பாக்கம் சாலை, கோட்டூர் செல்லும் சாலையில் உள்ள 5 குட்கா குடோன்களில் இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் அங்கு சோதனை நடத்தப்பட்டது. பல கோடி மதிப்பில் மீண்டும் குட்கா பாக்கெட்டுகள், மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு லட்சக்கணக்கில் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த குடோன்களை வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்கு கிடைத்த சில ஆவணங்கள் அடிப்படையில் சென்னையில் உள்ள தொழில் அதிபர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் மற்றும் குட்கா தயாரித்து விற்ற எம்டிஎம் நிறுவனத்தின் ஆடிட்டர் யோகேஸ்வரி ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் ஆடிட்டர் யோகேஸ்வரி வீட்டில் ஒரு டைரி சிக்கியது. அந்த டைரியில் இருந்த விவரங்கள் அத்தனையும் அதிர்ச்சி ரகம்.
தமிழ்நாடு அரசால் சட்டப்பேரவையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்களை ரகசியமாக விற்பனை செய்ய யார், யாருக்கு எப்போது, எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற முழுத்தகவல் அனைத்தும் அந்த டைரியில் இடம் பெற்று இருந்தது.

பொதுச்செலவுகள் என்ற பெயரில் அமைச்சர்கள், டிஜிபிக்கள், ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகள் பெயர்கள் அதில் இடம் பெற்று இருந்தன. அதோடு மாதாமாதம் அவர்களுக்கு கொடுக்கும் தொகை எவ்வளவு என்ற பட்டியலும் இருந்தது. அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், 2011 முதல் 2016 வரை வணிகவரித்துறை அமைச்சராக இருந்த பிவி ரமணா, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்று இருந்தன. அப்போது குட்காகுடோன்கள், குட்கா தயாரிப்பு பற்றிய கடிதம் வந்ததும், அதை படித்து பார்த்த பின்னர் சிபிஐக்கு குழப்பம்.

இப்போது டைரியை பார்த்ததும் வருமானவரித்துறைக்கு குழப்பம். என்ன செய்வது ஜெயலலிதா ஆட்சியல்லவா நடக்கிறது? பல முறை ஆலோசித்து, சரி சிபிஐ போல் நாமும் மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதுவோம் என்ற முடிவுக்கு வந்தது வருமானவரித்துறை. அப்போது வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு முதன்மை இயக்குனராக இருந்த பாலகிருஷ்ணன் 2016 ஆக.12ல் அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகன்ராவுக்கு நடந்த அனைத்தையும் விளக்கி விரிவாக ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் சில டெலிபோன் டேப்புகளும் இணைத்து அனுப்பி வைக்கப்பட்டன. இன்னொரு கடிதம் தமிழ்நாடு சட்டம், ஒழுங்கு டிஜிபியாக இருந்த அசோக்குமாருக்கும் சென்றது.

வருமானவரித்துறையிடம் இருந்து வந்த கடிதத்தை பார்த்ததும், அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகன்ராவ் என்ன செய்தார் என்பது தெரியாது. ஆனால் டிஜிபி அசோக்குமார் அதிரடி விசாரணையில் இறங்கி விட்டார். குட்கா குறித்து அத்தனை தகவல்களையும் விசாரித்து அறிக்கை அளிக்கும்படி அப்போதைய சென்னை குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் அருணாச்சலத்திற்கு உத்தரவிட்டார். அவரும் குட்கா தயாரிப்பு, விற்பனை, குடோன்கள், லஞ்சப்பணம் விநியோகம், யார்,யார் பணம் பெற்றது, எவ்வளவு பணம் பெற்றார்கள் என்ற அத்தனைவிவரங்களையும் அதிரடியாக திரட்டி, முழு அறிக்கை தயாரித்து டிஜிபி அசோக்குமாருக்கு அறிக்கை அளித்தார்.

அந்த அறிக்கையை டிஜிபி அசோக்குமார், முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைக்கிறார். 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் சிறிது சிறிதாக தமிழ்நாட்டில் வந்த குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அமைச்சர்கள், காவல்துறை, ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகள் உதவியுடன் அசுர வளர்ச்சி பெற்று இருப்பதும், குட்கா கும்பலிடம் இருந்து அவர்கள் லஞ்சப்பணம் பெற்று இருப்பதும் அதில் இடம் பெற்று இருந்தன. அந்த அறிக்கையை பார்த்ததும் என்ன செய்திருப்பார் ஜெயலலிதா. நாளை பார்க்கலாம்…

* ரூ.40 கோடி லஞ்சம் பெற்ற சென்னை போலீசார்
குட்கா வழக்கில் சிக்கிய அந்த டைரியில் மாதாமாதம் வழங்கும் லஞ்சப்பணம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்று இருந்தன. அதில் சென்னை காவல்துறைக்கு மட்டும் ஒரு ஆண்டில் ரூ.40 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் சென்னை போலீஸ் கமிஷனருக்கு ரூ.60 லட்சம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த சமயத்தில் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தவர் டி.கே. ராஜேந்திரன்.

* குட்கா ஆண்டு வருமானம் ரூ.126 கோடி
அமைச்சர்கள், அதிகாரிகள், போலீசாருக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் குட்கா நிறுவனம் தரப்பில் வழங்கப்பட்டு வந்துள்ளது. குட்கா உரிமையாளர்கள் மாதவராவிடம் இருந்து லஞ்சப்பணத்தை வாங்கி போலீசார், சுகாதாரத்துறை, மாநகராட்சி, ஒன்றிய கலால்துறை அதிகாரிகளுக்கு புரோக்கர்கள் நந்தகுமார், ராஜேந்திரன் ஆகியோர் வழங்கி வந்துள்ளனர். இவ்வளவு கோடி லஞ்சம் கொடுத்த பிறகும் குட்கா நிறுவனத்தின் ஆண்டு நிகர வருமானம் ரூ.126 கோடி என்று கணக்கிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

* ஜெயலலிதா கொண்டு வந்த சட்டம்
2011 சட்டப்பேரவை தேர்தலில் வென்று ஜெயலலிதா முதல்வரான பிறகு தான் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தமிழ்நாட்டில் நுழைந்துள்ளன. ஆங்காங்கே பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்கள் குறித்த தகவலை முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் அறிந்துள்ளார். அதனால் தான் 2013 மே 8ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும், விநியோகம் செய்யவும் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டார். ஜூலை மாதம் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அமைச்சர்கள், அதிகாரிகள் துணையோடு குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வியாபாரம் கொடிகட்டி பறந்தது.

The post மெகா குட்கா 2 ஊழல்: குட்கா கும்பலை குறிவைத்த சிபிஐ, ஐடி: ஜெயலலிதா ரியாக்‌ஷன் என்ன? அமைச்சர்கள், அதிகாரிகளை சிக்க வைத்த டைரி appeared first on Dinakaran.

Tags : CBI ,Jayalalithaa ,Shastri Bhavan, Chennai ,Tamil Nadu ,Chennai ,Jayalalitha ,Dinakaran ,
× RELATED சிலை கடத்தல் வழக்கு பொன் மாணிக்கவேல் கோரிக்கை நிராகரிப்பு