×

வில்லிவாக்கம் பாடி மேம்பாலம் அருகே ஆசியாவில் மிகப்பெரிய வண்ண மீன்கள் விற்பனை கூடம்

சிறப்பு செய்தி
வில்லிவாக்கம் பாடி மேம்பாலம் அருகே, ஆசியாவில் மிகப்பெரிய வண்ண மீன்கள் விற்பனை கூடம் கட்டுமான பணிகள், ₹53.50 கோடி மதிப்பீட்டில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம்
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விஷயங்களில் அதிக ஈடுபாடு இருக்கும். பெரும்பாலானோர் வீடுகளில் செடி, கொடிகளை வளர்ப்பது, நாய்க்குட்டி, பூனை, கிளி, புறா உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்ப்பது, படம் வரைவது, வண்ண மீன்களை வளர்ப்பது உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஒரு காலத்தில் வசதியானவர்கள் வீட்டில் மட்டுமே பார்க்கப்பட்ட வண்ண மீன்கள் தற்போது நடுத்தர மற்றும் எளிய மக்கள் வீட்டில் கூட பார்க்க முடிகிறது. கண்களுக்கும், மனதிற்கும் எப்போதும் மகிழ்ச்சியை தரும் இந்த வண்ண மீன்கள் வளர்ப்பதில் சமீப காலமாக பொதுமக்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன் மூலம் வண்ண மீன்களின் வியாபாரம் கடந்த 10 ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த வண்ண மீன்கள், இதற்கான கடைகள் மற்றும் வார சந்தையில் அதிக அளவில் கிடைக்கின்றன. சென்னையில் மட்டுமல்லாது ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ண மீன் சந்தை கொளத்தூரில் உள்ளது.

பெரும்பாலானவர்கள் கொளத்தூரில் உள்ள மீன் சந்தை தான் சென்னையிலேயே மிகப்பெரிய சந்தை என நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஆசியாவிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய வண்ண மீன் சந்தை இங்குதான் உள்ளது, என்பது பலருக்கும் தெரியாது. உள்நாட்டு வியாபாரம் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து, வண்ண மீன்கள் சந்தையில் கொளத்தூர் தனி முத்திரை பதித்து வருகிறது.

கொளத்தூர் கங்கா திரையரங்கம் அருகில் பள்ளி சாலை தெரு மற்றும் தெற்கு மாட வீதி ஆகிய 2 தெருக்கள் முழுவதும் வண்ண மீன்கள் விற்கும் இடமாகவும், மீன் வளர்க்க தேவையான பொருட்கள் விற்கும் இடமாகவும் விளங்குகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த வண்ண மீன்கள் வளர்ப்பு மற்றும் விற்பனை தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது.

ஆரம்பத்தில் இங்கு வளர்க்கப்பட்ட மீன்கள் சென்ட்ரல் அருகே மூர் மார்க்கெட் பகுதியில் கொண்டு சென்று விற்று வந்தனர். பிறகு 1998ம் ஆண்டு முதல் கொளத்தூர் பகுதியில் வண்ண மீன்களை விற்க தொடங்கினர். தற்போது குறிப்பிட்ட இந்த 2 தெருக்கள் மட்டுமல்லாது, கொளத்தூர் பகுதியில் மேலும் சில இடங்களிலும் இந்த வண்ண மீன்கள் விற்பனை பெரிய அளவில் நடந்து வருகிறது.

இங்கிருந்து தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு வண்ண மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பல்வேறு பகுதிகளிலிருந்து வண்ண மீன் வியாபாரிகள் இங்கு வந்து மொத்தமாக ஆர்டர் கொடுத்து, அவர்களுக்கு தேவையான வண்ண மீன்களை இங்கிருந்து ரயில்கள் மூலமாகவும், பேருந்துகள் மூலமாகவும் வாங்கி செல்கின்றனர். இந்த பகுதியில் 125 மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் என சுமார் 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இந்த தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு கோல்டு, ஷார்க், ஏஞ்சல், மாலிக் ஸ்பைடர் உள்ளிட்ட மீன்களை பெரும்பாலும் பொதுமக்கள் வீடுகளில் வாங்கி வளர்த்து வருகின்றனர்‌. மீன்கள் அவற்றின் வகைகளுக்கு ஏற்றார் போல் 5 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.

குறிப்பாக அரோனா போன்ற வாஸ்து மீன்கள் 10 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. பொய்க்காப் போன்ற மீன்கள் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. இந்த வகை மீன்கள் தாய்லாந்து நாட்டில் மிகவும் பிரசித்த பெற்றவை. பெரும்பாலும் வண்ண மீன்கள் வளர்க்க தேவைப்படும் பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. மீன் தொட்டி, அதில் பயன்படுத்தப்படும் அழகு சாதனங்கள் மற்றும் மீன் சுவாசிப்பதற்கு பயன்படுத்தப்படும் மோட்டார் உள்ளிட்ட பல உதிரிபாகங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்த கொளத்தூர் பகுதியில் இருந்து மட்டும் ஒரு நாளைக்கு 3,000 மீன் பெட்டிகள் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு நாளைக்கு ₹30 லட்சம் வரை வண்ண மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கொளத்தூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் வண்ண மீன்கள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. வெளிநாடுகளில் 2000 வகையான வண்ண மீன்கள் இருந்தாலும், இந்தியாவில் 500 வகையான வண்ண மீன்கள் கிடைக்கின்றன. இதில் கொளத்தூர் பகுதியில் மட்டும் 300 வகையான மீன்கள் கிடைக்கின்றன. தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா ஆகிய பகுதிகளில் இருந்தும் வண்ண மீன்கள் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன.

இவ்வாறு கடந்த 40 வருடங்களாக பல்வேறு கட்டங்களை தாண்டி வண்ண மீன் வளர்ப்பில் கொளத்தூர் தனி முத்திரை பதித்து வருகிறது. இப்பகுதி வியாபாரிகளின் நீண்ட நாள் கோரிக்கை நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.முதல்வர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தபோது இங்குள்ள வண்ண மீன் வியாபாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். அதில் அனைத்து வியாபாரிகளும் ஒன்று சேர்ந்து தங்களுக்கு உலகதரத்தில் ஒரு வண்ண மீன் சந்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி அவர் சட்டசபையில் பேசினார். அதன் பின்பு முதல்வர் ஆனதும் உடனடியாக மீண்டும் வியாபாரிகளை சந்தித்து அதற்கான ஆரம்பகட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் சென்னை வில்லிவாக்கம் பாடி மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள சிவசக்தி காலனியில் சுமார் 3.93 ஏக்கர் பரப்பளவில், ₹53.50 கோடி மதிப்பில், ஒரு லட்சத்து 25,402 சதுர அடி கட்டிட பரப்பளவில் உலக தரத்திலான வண்ண மீன்கள் வர்த்தக மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதன் மூலம் கொளத்தூர் பகுதியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 12,000 பேர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த தொழில் விரிவடைந்து பலருக்கும் வேலை வாய்ப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இதனை வரவேற்பதாகவும் அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

1 ரூபாய் முதல் 1 லட்சம் வரை
கொளத்தூரில் வண்ண மீன்கள் விற்பனை செய்யப்பட்டாலும், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, தேவம்பேடு ஆகிய பகுதிகளில் குட்டைகளில் இந்த மீன்கள் வளர்க்கப்படுகின்றன. அந்த பகுதியில் மட்டும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மண் குட்டைகள் அமைக்கப்பட்டு அதில் வண்ண மீன்கள் வளர்க்கப்படுகின்றன. கொளத்தூர் பகுதியில் மட்டும் இந்த தொழிலை நம்பி 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். இங்கு ஒரு ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை வண்ண மீன்கள் விற்கப்படுகின்றன. தமிழ்நாடு வண்ண மீன் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் நல சங்க தலைவர் ராஜராஜன் கூறுகையில், ‘‘தற்போதைய முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஒரு கோரிக்கை வைத்தோம் அதனை முதல்வர் ஆனவுடன் நிறைவேற்றியுள்ளார். இதற்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் வண்ண மீன் பூங்கா அமைத்துக் கொடுத்தால் மீன்கள் வளர்ப்பதற்கு எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதன்மூலம், வருங்காலத்தில் இந்த தொழிலை நம்பி ஏராளமானவர்கள் உள்ளே வருவார்கள். தற்போது நாங்கள் கடை வைத்துள்ள பகுதியில் வாடகை, முன்பணம் மிக அதிகம். தற்போது எங்களுக்கு புதிய இடத்திற்கு செல்லும்போது வாடகை குறைவாகிறது இதன் மூலம் லாபமும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்,’’ என்றார்.

முறையாக ஒதுக்கீடு வேண்டும்
தமிழ்நாடு தங்க மீன் வளர்ப்போர் மற்றும் விற்பனையாளர் சங்க தலைவர் பாபு கூறுகையில், ‘‘நாங்கள் வண்ண மீன்கள் வளர்ப்பு குறித்து தெரிந்து கொள்வதற்காக அவ்வப்போது வெளிநாடுகளுக்கு செல்வோம். அப்போது அங்குள்ள வண்ண மீன் சந்தைகளை பார்த்து ஆச்சரியப்படுவோம். நமது ஊரில் இது போன்ற சந்தை அமைத்து தர மாட்டார்களா என்ற எங்களது ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. கொளத்தூர் வியாபாரிகளின் நீண்ட நாள் கனவு இது.

தற்போது கட்டப்பட உள்ள கடைகளில் கொளத்தூர் பகுதியில் கடை வைத்துள்ள வண்ண மீன் வியாபாரிகளுக்கு முறையாக வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. வெளிநாடுகளில் வண்ண மீன்களை வாங்க செல்லும்போது அதற்கு தேவையான அனைத்து பொருட்களும் அதே இடத்தில் கிடைக்கும் அளவிற்கு ஒரு சந்தை வடிவமைக்கப்பட்டிருக்கும். அதுபோன்ற சந்தை தற்போது நமக்கும் கிடைத்துள்ளது.

அடுத்த கட்டத்தை நோக்கி
சென்னை வண்ண மீன் மேம்பாடு மற்றும் வர்த்தகர்கள் சங்க தலைவர் செல்வராஜ் கூறுகையில், ‘‘40 வருடங்களுக்கு முன்பு சென்ட்ரல் அருகே உள்ள மூர் மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தோம். அதன் பிறகு கொளத்தூர் படிப்படியாக வளர்ச்சி கண்ட பின், கொளத்தூரில் எங்களது வியாபாரத்தை தொடர்ந்தோம். வண்ண மீன்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்றதால் இந்த தெருவில் நிறைய இடங்களில் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

மீன் விற்பனை செய்யும் தெருக்களில் காரில் கூட செல்ல முடியாத அளவிற்கு நெரிசல் ஏற்பட தொடங்கிவிட்டது. மேலும், வெளி மாநிலங்களில் இருந்து ஒரு நாளைக்கு 100 பேராவது இங்கு வருவார்கள் அதே நேரத்தில் உள்ளூர் வியாபாரிகள் ஆயிரம் பேர் வருவார்கள். இவர்கள் வந்து செல்லும்போது இவர்களுக்கு தேவையான கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல வசதிகள் இதுவரை இல்லாமல் இருந்தது. இப்போது அந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால் வண்ண மீன்கள் விற்பனை தொழில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல தயாராகி விட்டது. புதிதாக தயார் செய்து தரப்பட உள்ள வண்ண மீன் சந்தையில், மீன் வியாபாரிகளுக்கு கடை வாடகை குறைத்து கொடுத்தால் அது பயனுள்ளதாக இருக்கும்,’’ என்றார்.

அன்றே சொன்னது தினகரன்
11-4-2021 அன்று வெளிவந்த தினகரன் நாளிதழில் ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய வண்ண மீன்கள் விற்பனை கூடமாக திகழும் கொளத்தூர் சந்தை என்ற தலைப்பில், வண்ண மீன்கள் வளர்ப்பு குறித்தும், இதற்கு உலக தரத்தில் சந்தை அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் விரிவாக செய்தி வெளியிட்டு இருந்தோம். தற்போது அதன்பேரில், உலக தரத்தில் வண்ண மீன்களுக்கான சந்தை அமையப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post வில்லிவாக்கம் பாடி மேம்பாலம் அருகே ஆசியாவில் மிகப்பெரிய வண்ண மீன்கள் விற்பனை கூடம் appeared first on Dinakaran.

Tags : Asia ,Villivakkam Badi ,Villivakkam Padi ,Dinakaran ,
× RELATED ஆசியாவில் உள்ள தங்கள் நிறுவன...