×

வரிச்சலுகை பெறுவதற்கு ஆப்பு வீட்டு வாடகை வருவாயை இனி சொத்து வருவாயாக காட்ட வேண்டும்: விதிகளில் திருத்தம் செய்ய முடிவு

புதுடெல்லி: வீட்டு வாடகை வருவாயை இனி சொத்து வருவாயாக மட்டுமே காட்ட வேண்டும் என, பட்ஜெட்டில் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், வணிக வருவாயாக காட்டி வரிச்சலுகை பெறுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பழைய வருமான வரி முறையில் மருத்துவ மற்றும் காப்பீட்டு திட்டங்கள், வீட்டு வாடகை, வீட்டுக் கடன் வட்டி போன்ற இனங்களில் வரிச்சலுகை பெறலாம். இதுபோல், வீட்டை வாடகைக்கு விடுபவர்கள், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வணிக வருமானமாக காட்டி சலுகை பெற்று வந்தனர். இனி இவ்வாறு சலுகை பெற முடியாது.

இதுதொடர்பாக வருமான வரிச் சட்டத்தில் முக்கிய திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருமானமானது, கடந்த காலங்களில் வணிகம் அல்லது தொழில் மூலம் கிடைக்கும் வருமானமாக கணக்கில் கொள்ளப்பட்டது. இனிமேல் இதனை சொத்து வருவாயாகத்தான் காட்ட வேண்டும். வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருவாய்க்கு வரி செலுத்துவோர், வணிகம் அல்லது தொழிலில் இருந்து வருவாய் கிடைத்ததாக கணக்கு காட்டுகின்றனர். இதன் மூலம் வீட்டு பராமரிப்பு செலவுகள், பழுதுபார்ப்பு, தேய்மானம் செலவுகளை கணக்கு காட்டி வருமான வரிச் சலுகை பெறுகின்றனர்.

இதனை தடுக்கும் வகையில், வருமான வரிச் சட்டத்தின் 28வது பிரிவில் திருத்தும் மேற்கொள்ளப்படும். அதன் பிறகு வரி செலுத்துவோர் தங்களது வாடகை வருமானத்தை வணிக வருமானமாக காட்ட முடியாது. அதற்கு பதிலாக வீட்டுச் சொத்து அடிப்படையில் கிடைக்கும் வருமானமாக கணக்கு காட்ட வேண்டும். சொத்து மூலம் கிடைக்கும் வருவாய் என காட்டும்போது அதில் வரி விலக்குகள் மிகவும் குறைவு. பொதுவாக, இந்த வகையின் கீழ், பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புக்காக வாடகை வருமானத்தில் 30 சதவீதம் நிலையான விலக்கு பெற அனுமதிக்கப்படுகிறது. மற்ற செலவுகளுக்கு எந்த விலக்கும், வரிச்சலுகையும் கோர முடியாது.

இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரையில், ‘‘உரிமையாளரால் ஒரு வீடு அல்லது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விடுவதன் மூலம் ஈட்டும் வருமானம், ‘வணிகம் அல்லது தொழில் மூலம் கிடைக்கும் லாபம் மற்றும் ஆதாயங்கள்’ என்ற பிரிவில் குறிப்பிடப்பட முடியாது. ‘வீட்டுச் சொத்து மூலம் கிடைக்கும் வருவாய்’ என்ற பிரிவில் மட்டுமே குறிப்பிட வேண்டும். இதன் அடிப்படையில் வரி விதிக்கப்படும்’’, என்றார். இதன் மூலம் வரி செலுத்துவோர் வணிக வருவாய் மீதான வரியை குறைக்க இனி பயன்படுத்த முடியாது. இந்த புதிய திருத்த விதி ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும். வீட்டு வாடகை மூலம் வருமானம் பெறுவோர், இனிமேல் குறைவான வரியை செலுத்தி கணக்கு காட்டுவதை தடுக்க முடியும். இதனால் வீட்டு உரிமையாளர்கள் இனிமேல் முறையாக வரியை செலுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சுமையை ஈடுகட்ட வீட்டு வாடகை உயர்த்தப்படும் அபாயம் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

The post வரிச்சலுகை பெறுவதற்கு ஆப்பு வீட்டு வாடகை வருவாயை இனி சொத்து வருவாயாக காட்ட வேண்டும்: விதிகளில் திருத்தம் செய்ய முடிவு appeared first on Dinakaran.

Tags : Wedge ,New Delhi ,Union Government ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசின் அனுமதியின்றி தேசிய...