×

முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை மாணவர்களுக்கு விரைவில் தேர்ச்சி கடிதத்தை வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முனைவர் ஆராய்ச்சிப் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்குவதற்கான முதல்வரின் ஆராய்ச்சி உதவி தொகை திட்டத்தின்படி தகுதியான மாணவர்கள் போட்டித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்ட நிலையில், அதன்பின் 4 மாதங்களாகியும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தேர்ச்சிக் கடிதம் இன்று வரை வழங்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் கலைப் பிரிவில் 60 மாணவர்கள், அறிவியல் பிரிவில் 60 மாணவர்கள் என மொத்தம் 120 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அவர்களுக்கு ஆராய்ச்சிப் படிப்புக்கான உதவியாக மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் வீதமும், எதிர்பாரா செலவினங்களுக்காக கலைப்பிரிவு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரமும், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட 120 மாணவ, மாணவியரின் பட்டியலும் வெளியிடப்பட்டது. ஆனால், அதன்பின் 4 மாதங்களாகியும் அவர்களுக்கு தேர்ச்சிக் கடிதம் வழங்கப்படவில்லை. மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது. விரைவில் தேர்ச்சி கடிதம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை மாணவர்களுக்கு விரைவில் தேர்ச்சி கடிதத்தை வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : CM ,Anbumani ,CHENNAI ,BAMA ,President ,Dinakaran ,
× RELATED நெல் கொள்முதல் விலையை உயர்த்தி...