×

2-ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் தர 4 ஆண்டுகள் தாமதிப்பதற்கு நாடாளுமன்றத்தில் திமுக கண்டனம்!!

டெல்லி : 2-ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் தர 4 ஆண்டுகள் தாமதிப்பதற்கு நாடாளுமன்றத்தில் திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி.ராஜேஷ்குமார், “2-ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் தர 4 ஆண்டு ஒன்றிய அரசு கால தாமதம் செய்கிறது. 2-ம் கட்ட திட்டத்துக்கு கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார். ஆனால் ஒன்றிய உள்துறை அமைச்சரே அடிக்கல் நாட்டியபோதும், திட்டத்துக்கு ஒப்புதல் தர ஒன்றிய அரசு தாமதப்படுத்துகிறது.

மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு செய்வதாக 2021 பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். 2021 ஆக. 17-ம் தேதி பொதுத்துறை முதலீட்டு வாரிய பரித்துரைப்படி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் கூறியிருந்தார். ஆனாலும் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 3 ஆண்டாக பொருளாதார விவகார அமைச்சரவை குழு ஒப்புதலுக்கு காத்திருக்கிறது.ஒப்புதல் தரப்படாததால் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கான மொத்த செலவையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. ஒன்றிய அரசு ஒப்புதல் தர தாமதிப்பதால் மாநில அரசின் நிதிச்சுமை மிகவும் அதிகரித்து உள்ளது.

2-ம் கட்ட மெட்ரோ குறித்து ஒன்றிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினேன். 118 கி.மீ. நீளமுள்ள 2-வது சென்னை மெட்ரோ ரயில் திட்டம் -பரிசீலனையில் இருப்பதாக ஒன்றிய அமைச்சர் தகவல் அளித்தார். திட்டத்தின் சாத்தியக்கூறை ஆராய்ந்து அனுமதி வழங்கப்படும் என்றுஅமைச்சர் பதில் அளித்துள்ளார். சென்னை பெருநகரத்தின் தற்போதைய மக்கள் தொகை 1.2 கோடியாகும். மக்கள் தொகை பெருக்கத்தால் சென்னை நகர போக்குவரத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 26,000 பேர் வசிக்கின்றனர்.

சென்னை போல மக்கள் நெருக்கமுள்ள டெல்லி, பெங்களூரில் மிகச் சிறந்த மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. தினமும் சென்னைக்கு வந்துசெல்லும் மக்கள் குறைந்தது 25 கி.மீ. தூரம் பயணம் செய்கின்றனர். ஆகவே போக்குவரத்து நெரிசலை குறைக்க, மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு விரைந்து ஒப்புதல் தர பிரதமர் நடவடிக்கை எடுக்க பிப்ரவரியில் முதல்வர் கடிதம் எழுதி இருந்தார். ஆனாலும் ஒன்றிய அரசு தாமதம் செய்து வருகிறது. எனவே மெட்ரோ 2ம் கட்ட பணிகளுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று அவை வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறேன்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post 2-ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் தர 4 ஆண்டுகள் தாமதிப்பதற்கு நாடாளுமன்றத்தில் திமுக கண்டனம்!! appeared first on Dinakaran.

Tags : Parliament ,Chennai ,Delhi ,Dimuka ,M. B. Rajesh Kumar ,
× RELATED செபி தலைவர் மாதவி புச்சுக்கு எதிராக நாடாளுமன்ற குழு விசாரணை!!