×

நாட்டில் பெரும் சவாலாக இருப்பது வேலையில்லா திண்டாட்டம்: குஜராத், உ.பி. நிகழ்வை மேற்கோள்காட்டி மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு!!

டெல்லி : 2.9 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் வேலை கிடைக்கும் என நம்பிக்கை இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்த நிதி அமைச்சருக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நிதி அமைச்சர் படித்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 30, 31 பக்கங்களில் உள்ள சிறந்த யோசனைகளை நிதி அமைச்சர் எடுத்து கையாண்டிருப்பது மகிழ்ச்சி அடைய செய்கிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ஆளும்கட்சி உறுப்பினர்கள் வாசித்தும் பார்க்க வேண்டும்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இருந்து மேலும் பல யோசனைகளை எடுத்து பயன்படுத்த வலியுறுத்த முடியும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள யோசனைகளை மேலும் பயன்படுத்தினால் மிகவும் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். காப்பி அடிப்பது இந்த அவையில் தடை செய்யப்பட்ட விஷயம் அல்ல. அவை ஊக்குவிக்கப்படும், பாராட்டப்படும். நாட்டில் பெரும் சவாலாக இருப்பது வேலையில்லா திண்டாட்டம் ஆகும். இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் ஜூன் மாத நிலவரப்படி 9%ஆக உள்ளதாக ஆய்வறிக்கை கூறியுள்ளது. ஏற்கனவே ஒன்றிய அரசு செயல்படுத்திய உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தால் பயன் கிடைக்கவில்லை என தெரிகிறது.

முந்தைய திட்டத்தில் பயன் கிடைக்காததால் தற்போது வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தால் கிடைத்த பயன் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தால் என்ன பயன் கிடைத்தது என தெரிந்தால் தற்போதைய திட்டத்தை அறிய முடியும். வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டத்துடன் 5 அம்ச திட்டத்துக்கு 500 நிறுவனங்களை தேர்வு செய்தது பொருத்தமாக இல்லை. 2.9 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் வேலை கிடைக்கும் என நம்பிக்கை இல்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற வெற்று அறிவிப்பு போல இந்த திட்டமும் இருந்து விடக் கூடாது.

உத்தரப் பிரதேச அரசு 60,244 காவல் பணியிடங்களுக்கான தேர்வை அறிவித்தபோது 48 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். 2 தினங்களுக்கு முன் அந்த அறிவிப்பை உத்தரப் பிரதேச அரசு ரத்து செய்துவிட்டது. ஏர் இந்தியா நிறுவனம் 2,260 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்தபோது 25,000 இளைஞர்கள் கூடிவிட்டனர். குஜராத்தில் தனியார் நிறுவனம் ஒன்று 5 பணியிடங்களை நிரப்ப ஆள் எடுத்தபோது 4,999 பேர் திரண்டுவிட்டனர். ம.பி.யில் 15 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டபோது 4,000 பேர் விண்ணப்பித்தனர். ஆனால் இந்தியாவில் வேலையின்மை, நெருக்கடி தரும் நிலையில் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வேலையின்மை, பணவீக்க பிரச்சனையை ஒன்றிய அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.பணவீக்க பாதிப்பு பற்றி முறையாக அறியாததால்தான் 10 வார்த்தைகளில் நிதி அமைச்சர் பேசியுள்ளார்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post நாட்டில் பெரும் சவாலாக இருப்பது வேலையில்லா திண்டாட்டம்: குஜராத், உ.பி. நிகழ்வை மேற்கோள்காட்டி மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு!! appeared first on Dinakaran.

Tags : Gujarat, U. B. ,Delhi ,Former ,Congress ,Finance Minister ,P. Chidambaram ,States ,Senior President ,p. ,talk ,
× RELATED ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம்...