×

சுகாதார அமைச்சகத்திற்கு ரூ.91,000 கோடி நிதி ஒதுக்கீடு

பட்ஜெட்டில் ஒன்றிய சுகாதார அமைச்சகத்திற்கு ரூ.90,958.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2023-24ம் நிதியாண்டில் திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீடான ரூ.80,517.62 கோடியைவிட 12.96 சதவீதம் அதிகம். ஆயுஷ் அமைச்சகத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.3,000 கோடியில் இருந்து ரூ.3,712.49 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.90,958.63 கோடியில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறைக்கு ரூ.87,656.90 கோடியும், சுகாதார ஆராய்ச்சி துறைக்கு ரூ.3,301.73 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய நிதி ஆண்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கான ஒதுக்கீடு ரூ.77,624.79 கோடியாக இருந்த நிலையில் தற்போது சுமார் ரூ.10,000 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் நிதி உதவி திட்டங்களான தேசிய சுகாதாரத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு ரூ.36,000 கோடியாகவும் (2023-24ல் ரூ.31,550.87 கோடி), பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்திற்கு ரூ.7,300 கோடியாகவும் (2023-24ல் ரூ.6,800 கோடி), தேசிய டெலி மனநல மருத்துவ திட்டத்திற்கு ரூ.90 கோடியாகவும் (2023-24ல் ரூ.65 கோடி) அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷனுக்கு மீண்டும் ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தன்னாட்சி மருத்துவ அமைப்புகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.18,013.62 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஒதுக்கீடு ரூ.4,278 கோடியில் இருந்து ரூ.4,523 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கான ஒதுக்கீடு ரூ.2295.12 கோடியில் இருந்து ரூ.2,732.13 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

The post சுகாதார அமைச்சகத்திற்கு ரூ.91,000 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Health Ministry ,Union Health Ministry ,Ministry of AYUSH ,health ,Dinakaran ,
× RELATED உறுப்பு தானம், திசு மாற்று அறுவை...