×

ரயில்வேக்கு ரூ.2.62 லட்சம் கோடி ஒதுக்கீடு: சொல்கிறார் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ஒன்றிய பட்ஜெட்டில் ரயில்வேக்கு ரூ.2.62 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது,’ ரயில்வேக்கு ரூ.2,62,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டில் ஒரு பெரிய பகுதியாக ரூ. 1,08,795 கோடி, பழைய பாதைகளை புதியதாக மாற்றுதல், சிக்னல், மேம்பாலம் அமைக்கும் பணிகள், சுரங்கப்பாதைகள் கட்டுதல் மற்றும் கவாச் நிறுவுதல் போன்ற பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கவாச்சின் பாகங்களில் ஒன்றான ஆப்டிகல் பைபர் கேபிள் 4,275 கி.மீ.க்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரங்கள், டிராக் ஆர்.எப்.ஐ.டி சாதனம், ஸ்டேஷன் கவாச். லோகோ கவாச் போன்ற பிற உதிரிபாகங்களும் விரைவான வேகத்தில் நிறுவப்பட்டு வருகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு சுமார் 35,000 கோடி ரூபாய் மட்டுமே ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டது. இன்று அது ரூ. 2.62 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த பட்ஜெட் பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் கடின உழைப்பையும், கவனம் செலுத்திய அணுகுமுறையையும் முன்னெடுத்துச் செல்கிறது. பொதுப் பெட்டிகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், நடப்பு நிதியாண்டில் 2,500 கூடுதல் பொதுப் பெட்டிகளைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப மேலும் 10,000 பொதுப் பெட்டிகள் தயாரிக்கப்படும். வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, 10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ரயில்வேயில் 4.11 லட்சம் வேலைகள் வழங்கப்பட்டன. அதேசமயம் மோடி ஆட்சியின் 10 ஆண்டுகளில், 5 லட்சம் வேலைகள் வழங்கப்பட்டன. இது 20 சதவீதம் அதிகம்’ என்றார்.

* சிபிஐக்கு ரூ.951 கோடி
நாட்டின் முதன்மையான புலனாய்வு நிறுவனமான சிபிஐக்கு ஒன்றிய பட்ஜெட்டில் ரூ.951 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விட 1.79 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு சிபிஐக்கு ரூ.968.86 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

* ரூ.50 லட்சம் சொத்துக்கு 1% டிடிஎஸ் பற்றி விளக்கம்
வருமான வரிச்சட்டம் பிரிவு 194-1ஏன்படி, விவசாய நிலங்களை தவிர்த்து, ரூ.50 லட்சத்திற்கு அதிகமான அசையா சொத்தை விற்பனை செய்யும் போது 1 சதவீதம் டிடிஎஸ் வரி செலுத்த வேண்டும். ஆனால் சிலர் ரூ.50 லட்சத்திற்கான சொத்தை வாங்கினாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட வாங்குபவர்களை காட்டி 1 சதவீத டிடிஎஸ் செலுத்தாமல் இருக்கின்றனர். இது தவறான புரிதல் என பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தி உள்ளார். அசையா சொத்தின் மதிப்பு மற்றும் முத்திரைத்தாள் மதிப்பு ரூ.50 லட்சத்தை தாண்டினால், எத்தனை பேர் வாங்குபவராக இருந்தாலும், விற்பவர்கள் எத்தனை பேர் இருந்தாலும் 1 சதவீத டிடிஎஸ் வரி செலுத்த வேண்டும் என சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

* மின் நிறுவனங்களுக்கு ரூ.67,000 கோடி
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25 நிதிநிலை அறிக்கையில், “2023-24ம் நிதியாண்டில் ஆற்றல் மிக்க 8 அரசு மின் துறை நிறுவனங்களின் ஆண்டு முதலீடு ரூ.60,805.22 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது.
இது 2024-25ம் நிதியாண்டில் ரூ.67,286.01 கோடி மூலதன முதலீடு என 14 சதவீதம் உயர்வு அடைந்துள்ளது.

* மாநிலங்களுக்கு ரூ.1.5 லட்சம் கோடி வட்டியில்லா கடன்
மாநிலங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு உதவும் வகையில் நீண்டகால வட்டியில்லா கடனாக ரூ.1.5 லட்சம் கோடி வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பிற்கான வலுவான நிதி ஆதரவை வழங்குவதே அரசின் முயற்சி என குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், ரூ.26,000 கோடி செலவில் சாலை இணைப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் கூறினார். அமிர்தசரஸ்-கொல்கத்தா தொழில்துறை வழித்தடத்தில் பீகாரின் கயாவில் தொழில்துறை முனையம் உருவாக்கப்படும் என்றார்.

* நீர் வளம், கங்கை புனரமைப்புக்கு ரூ.30,233 கோடி ஒதுக்கீடு
நீர் வளம், நதி மேம்பாடு, கங்கை புனரமைப்பு உள்ளிட்டவற்றுக்காக ரூ.30,233கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதற்காக ரூ.19,516.92கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு 55சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் பாராக்கா தடுப்பணை திட்டத்துக்கு கடந்த ஆண்டு ரூ. 70.92கோடி அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரூ.127கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் தேசிய கங்கை திட்டத்துக்கான ஒதுக்கீடு கடந்த முறை இருந்த ரூ.2400கோடியில் இருந்து ரூ.3,345கோடியாக அதிகரித்துள்ளது. அடல் புஜல் யோஜனா திட்டத்துக்கு கடந்த ஆண்டு ரூ.1000கோடி ஒதுக்கிய நிலையில் இந்த முறை ரூ.1,778கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்துக்கான நிதியானது ரூ.432 கோடியில் இருந்து ரூ.592கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

* கல்வித் துறைக்கு ரூ.9,000 கோடி நிதி குறைப்பு
பட்ஜெட்டில் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த நிதியாண்டைக் காட்டிலும் ரூ.9,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் ரூ.1.29 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை ரூ.1.20 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, பல்கலைக்கழக மானிய குழுவினற்கான நிதி முந்தைய ஆண்டில் ரூ.6,409 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை ரூ.2,500 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஐஐடிகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.10,384.21 கோடியில் இருந்து ரூ.10,324.50 கோடியாகவும், ஐஐஎம்களுக்கான நிதி ரூ.331 கோடியில் இருந்து ரூ.212 கோடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பள்ளிக் கல்விக்கான பட்ஜெட் ரூ.535 கோடிக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான பட்ஜெட் ரூ.161 கோடி உயர்ந்துள்ளது.

The post ரயில்வேக்கு ரூ.2.62 லட்சம் கோடி ஒதுக்கீடு: சொல்கிறார் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Ashwini Vaishnav ,Railway Minister ,Union Budget ,Dinakaran ,
× RELATED 3 மாதத்தில் ‘ஸ்லீப்பர்’ வசதியுடன்...