×

ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக தயாரித்த பட்ஜெட்: முத்தரசன்

சென்னை : ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக தயாரித்த பட்ஜெட் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய நாடாளுமன்றத்தில் ஏழாவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து இருக்கிறார். அதிக முறை தொடர்ச்சியாக நிதிநிலை அறிக்கையை ஒரே அமைச்சர் தாக்கல் செய்கிறார் என்பதை தவிர இதில் சாதனைகள் வேறு ஏதுமில்லை. ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் விவசாயிகள் ஆகியவரை மையப்படுத்தியதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என்று சொல்லப்பட்டாலும், இந்தத் துறைகளை பயன்படுத்தி கார்ப்பரேட்டுகளுக்கு அதிக பயன்கள் தரப்பட்டுள்ளன.

உயர் விளைச்சலுக்கான நூற்றுஒன்பது புதிய வகை தானியங்கள். எண்ணெய் வித்துக்கள் உருவாக்கப்படுவதாக சொல்லிக் கொண்டே, இயற்கை விவசாயத்தை மேம்படுத்தப் போவதாக கூறுவது முரண்பாடு நிறைந்ததாக உள்ளது. ஏற்கனவே விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்குவதற்கு 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.‌ இப்போது கிளஸ்டர் என்ற பெயரில் மீண்டும் அதே முயற்சி எடுக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு குறித்து நிதி நிலை அறிக்கையில் நிறைய பேசப்படுகிறது. ஆனால் புதிதாக சேர்க்கப்படும் தொழிலாளர்களுக்கு முதல் மாதம் சம்பளத்தை அரசாங்கமே வழங்கும் என்றும், அவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி தொகை பங்களிப்பை அரசே செலுத்தும் என்றும் சொல்வது, தொழிலாளர்களுக்கு அல்ல, முதலாளிகளுக்குத்தான் அதிக நன்மையை ஏற்படுத்தும். மேலும் இந்த வேலை வாய்ப்புகளும் நிரந்தரமானதாக அமைவதற்கான சாத்திய கூறுகளை பற்றி நிதிநிலை அறிக்கை ஏதும் பேசவில்லை.

மைனாரிட்டி அரசாங்கத்தை தாங்கிப் பிடிக்கிற ஐக்கிய ஜனதா தளத்தையும், தெலுங்கு தேசம் கட்சியையும் திருப்தி படுத்துவதற்கு அரசு நிதி அள்ளிக் கொட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆந்திர பிரதேசத்துக்கு தனித்தகுதி அளிக்க மறுத்த பாஜக அரசு இப்போது அவர்கள் கேட்ட நிதியை வழங்கி இருக்கிறது. சிறு குறு நடுத்தர தொழில்களை பாதுகாப்போம் என்ற பெயரில் ஏற்கனவே சொல்லப்பட்ட எந்த திட்டங்களும் அவர்களை சென்றடையவில்லை என்பதே உண்மை. இப்போதும் அதே வார்த்தை ஜாலங்களின் தொகுப்பு தான் மீண்டும் தரப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும், புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பாலும் தொய்வடைந்து சுருண்டு வீழ்ந்துவிட்ட லட்சக்கணக்கான சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு நிதி ஆதாரத்தை உருவாக்கவும், மேம்பாடடையச் செய்யவும் உருப்படியான திட்டம் எதுவும் இல்லை. கார்ப்பரேட்டுகளின் வலுமிக்க தாக்குதலில் இருந்து இந்த சிறு குறு நடுத்தர தொழில்களை காப்பாற்றுவதற்கு பதிலாக, உலக அளவில் போட்டிக்கு இவற்றை தயார் செய்யப் போவதாக கூறுவது வெற்று உரை ஆகும்.

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 10 லட்சம் கோடி ரூபாய்களுக்கு வீடு கட்ட போவதாக படாடோபமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஒன்றிய அரசின் பங்களிப்பு 2.2 லட்சம் கோடி ரூபாய் தான். மீதி 7.8 லட்சம் கோடி ரூபாய் மாநில அரசுகளின் தலையில் விழுகிறது. மேலும் பத்திர பதிவு தொகையை குறைக்க போவதாக சொல்லி இருப்பது பொது மக்களுக்கு நிவாரணம் தான் என்றாலும், இதனால் ஏற்படும் இழப்பு அனைத்தும் மாநில அரசுகளுக்கு தான். அணு உலை மற்றும் அனல் மின்சார உற்பத்தியை அதிகரிப்பது பற்றி பட்ஜெட் பேசினாலும், இவற்றை தனியாரின் கைகளில் கொண்டு சேர்ப்பதிலேயே அது குறியாக இருக்கிறது. பீகார் அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் நாட்டுக்கு வெளியில் இருந்து வரும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதாக இப்போதுதான் நிர்மலா சீதாராமன் கண்டுபிடித்திருக்கிறார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் இமாச்சலப் பிரதேசம் உத்தரகண்ட் சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் மறு கட்டமைப்பு ஏற்படுத்துவதற்கும் மறுவாழ்வு முயற்சிகளுக்கும் அதிக நிதியை ஒன்றிய அரசு ஒதுக்குகிறது. ஆனால் தமிழ்நாடு உள்பட வெள்ளத்தால் பாதிக்கப்படும் தென்மாநிலங்களை பற்றி மூச்சு கூட விடவில்லை.

சுற்றுலாவை மேம்படுத்துகிறோம் என்ற முறையில் விஷ்ணுபோதி, மகாபோதி, காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட இந்து, புத்த, ஜைன கோவில்களுக்கு புனித யாத்திரை திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல அண்மையில் பாஜக வெற்றி பெற்றுள்ள ஒடிசா மாநிலத்திற்கு சுற்றுலாத் திட்டங்கள் தரப்பட்டுள்ளன.அதே நேரத்தில் எழில் கொஞ்சும் கடற்கரைகளையும், மேற்கு மலைத் தொடர்ச்சியையும், கோடை வாசஸ்தலங்களையும், வேறெந்த மாநிலங்களையும் விட அதிக கோவில்களையும், பாரம்பரிய சின்னங்களையும் கொண்ட தமிழ்நாட்டின் சுற்றுலா மேம்பாட்டுக்கு எந்தத் திட்டமும் இல்லை. இதில் மட்டும் அல்லாமல், அனைத்து வகைகளிலும் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பது, பெரும் கண்டனத்திற்குரியதாகும்.

பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என்ற முறையில், பெரு முதலாளிகளுக்கு வசதியாக நிலம், தொழிலாளர், மூலதனம் ஆகிய மூன்றையும் இன்னும் எளிமையாக கிடைக்க செய்வது பற்றி நீதி நிலை அறிக்கை பேசுகிறது. “தொழில் நடத்துவதை எளிமையாக்குதல்” என்ற பேரில் கார்ப்பரேட் சலுகைகள் தொடர்கின்றன. குறைந்த விலையில் நிலத்தை கையகப்படுத்தி முதலாளிகளுக்கு தருவது, தொழிலாளர் உரிமைகளை பறித்து அற்றை கூலிகளாக மாற்றி எப்பொழுது வேண்டுமானாலும் வேலையை விட்டு துரத்த வழிவகை செய்வது, வரிகளை தள்ளுபடி செய்தும் வங்கி கடனையே தள்ளுபடி செய்தும் முதலாளிகளுக்கு பொதுமக்களின் பணத்தை மூலதனமாக தருவது என தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் விரோதமான முறையில் தனது பொருளாதாரப் பயணத்தை பாஜக அரசு மேலும் முனைப்பாக தொடர்கிறது.

தொழிலாளர்களுக்கு ஏதோ தருவதாக ஆர்ப்பாட்டமாக அறிவித்தாலும், பெரிதாக எந்த நலனையும் தராத இ-ஷ்ரம் அட்டை களை இன்னும் அதிகமாக உடல் உழைப்பு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தருவதைத் தவிர்த்து அதில் வேறு உள்ளடக்கம் எதுவும் இல்லை. பழைய பென்ஷன் திட்டம் வேண்டும் என்ற கூக்குரல் எங்கும் ஒலித்தாலும், அதை ஏற்க முடியாது என்று நிதிநிலை அறிக்கை திட்டவட்டமாக மறுத்துவிட்டது. மாறாக புதிய பென்ஷன் திட்டத்தில் மகிழ்ச்சிக்குரிய வகையில் சில உத்தரவாதங்களை தரப் போவதாகவும், அதுபற்றி ஒரு குழு ஆய்வு செய்து கொண்டிருப்பதாகவும் வெறும் கையில் முழம் போடுகிறார்கள். குழந்தை பிறந்ததிலிருந்தே, அதன் பெற்றோர்கள் அந்த குழந்தைக்கு 60 வயதாகும் காலத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கு பணம் சேமிக்கலாம் என்று என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் தீட்டுவதற்கு ஒரு அரசாங்கம் எதற்கு?.

மாதம் ரூபாய் 20,800 வரை வாங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு வருமான வரி இல்லை என்பதை இப்போது ரூ.25,000 வரை வரி இல்லை என்று உயர்த்தி இருக்கிறார்கள்.‌ காலம் கடந்து வந்த இந்தச் சலுகை பெரிய அளவுக்கு உதவப் போவதில்லை.வருமான வரி கட்டுவதற்கு ஏற்கனவே இருந்த முறைமையை மாற்றி புதிய முறைமையை பாஜக அரசு கொண்டு வந்தது. பழைய முறைமையில் இருந்த பல சலுகைகள் பறிபோவதாகக் கருதிய ஊதிய பிரிவினர் புதிய முறைமைக்கு மாற தயக்கம் காட்டி வந்தனர். அவர்களை புதிய முறைமைக்கு இழுப்பதற்கு இந்த நிதிநிலை அறிக்கை முயல்கிறது. ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்ற பழைய வாக்குறுதியை நிறைவற்ற திட்டம் இல்லை. விவசாயிகள் போராட்டத்தின் போது ஒன்றிய அரசு ஒத்துக்கொண்ட குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவது பற்றியோ, விவசாய செலவி 150 சதவீதத்தை விவசாயி அடைகிற வழிமுறை பற்றியோ நிதிநிலை அறிக்கை பேசவே மத்திய தொழிற்சங்கங்கள் அனைத்தும் சேர்ந்து வைத்த கோரிக்கைகளில் ஒன்றைக் கூட ஒன்றிய அரசு பரிசீலிக்கவில்லை.

ஜிடிபி கணக்கில் பார்க்கும் போது உலகத்தில் ஐந்தாவது இடத்தில் இந்தியா இருந்தாலும், தனிநபர் ஜிடிபி என்று பார்க்கும்போது 126வது இடத்தில் இருக்கிறது. உலக அளவில் அதிக ஏழைகள் வாழும் நாடாகவும், உலகத்தின் கடும் பட்டினியில் வாடும் 15 நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா இருக்கிறது. வெறும் பத்து சதவீத மக்கள் மட்டுமே மேலதிக சொத்துக்களையும், உயர் வருவாயையும் பெறும் வகையில் பாஜக அரசின் பொருளாதார கொள்கை உள்ளது. ஒரு புறம் செல்வக் குவிப்பு உச்சத்துக்கு ஏறுகையில், மறுபக்கத்தில் 50 கோடிக்கு மேற்பட்ட மக்கள் அதீத வறுமையில் உழல்கிறார்கள். இதை ஓரளவுக்காவது மாற்றுவதற்கு இந்த நிதிநிலை அறிக்கையில் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. தனது அரசு நிலைப்பதற்காக பீஹார், ஆந்திரா மாநிலங்களின் ஆளுங்கட்சிகளை குளிர வைக்கவும், வெகு விரைவில் சட்டமன்றத் தேர்தல்கள் வர இருக்கும் மாநிலங்களில் தமது கட்சிக்கு வாக்குகளை ஈர்க்கவும், வழக்கம் போலவே கார்ப்பரேட்டுகளுக்கும் பெரு வணிக குழுக்களுக்கும் உதவி செய்யவும் தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை இது. மூன்றாம் தடவையும் கூட ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்த சாதாரண மக்களுக்கு இது வஞ்சனை புரிந்திருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

The post ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக தயாரித்த பட்ஜெட்: முத்தரசன் appeared first on Dinakaran.

Tags : BJP ,Mutharasan ,Chennai ,Communist Party of India ,State Secretary ,Finance Minister ,Nirmala Sitharaman ,Indian Parliament ,
× RELATED பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பாலியல்...