×

கட்சித்தலைமை மீது கடும் அதிருப்தி தமாகா இளைஞரணி மாநில தலைவர் திடீர் ராஜினாமா: கட்சி கட்டமைப்பை மாற்றியமைக்கும் ஜி.கே.வாசன்

சென்னை: கட்சி தலைமை மீது ஏற்பட்ட கடும் அதிருப்தி காரணமாக தமாகா இளைஞரணி மாநில தலைவர் பதவியை யுவராஜா ராஜினாமா செய்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருந்த ஜி.கே.வாசன், அதிலிருந்து வெளியேறி தமாகாவை மீண்டும் தொடங்கினார். அதன் பின்பு பல்வேறு தேர்தல்களை சந்தித்தாலும் வெற்றி என்பது கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் பலர் தமாகாவில் இருந்து தொடர்ந்து வெளியேறி வண்ணம் இருந்தனர்.

தற்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கூட்டணியில் தமாகாவுக்கு ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. இதற்கிடையே, சென்னையில் நடந்த தமாகா செயற்குழு கூட்டத்தில் கட்சியை வலுப்படுத்த ஜி.கே.வாசன் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி. 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட தலைவர் என தமிழகம் முழுவதும் 117 மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதனால் 4, 5 தொகுதிகளை வைத்திருந்த மாவட்ட தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமாகா இளைஞரணி தலைவராக பதவி வகித்து வரும் யுவராஜா, அதிமுக தலைவர்களோடு நெருக்கமாக இருந்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தலின் போது தமாகா அதிமுகவுடன் கூட்டணி வைக்கும், அப்படி வைத்தால் ஈரோடு தொகுதியில் போட்டியிடலாம் என திட்டம் போட்டிருந்தார். ஆனால், பாஜவுடன் கூட்டணி அமைத்தால் அதிருப்தியில் இருந்த யுவராஜா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தார். இதனால் அவர் தமாகாவில் இருந்து வெளியேறி விட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் சில நாட்களாக வெளியில் தலைகாட்டாமல் இருந்த யுவராஜ் அதன்பின்பு தான் தமாகாவில்தான் இருப்பதாக கூறினார். இந்நிலையில், தமாகா இளைஞர் அணி மாநில தலைவர் பதவியில் இருந்து யுவராஜா ராஜினாமா செய்துள்ளார். இது கட்சியினர் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரது ராஜினாமா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், ராஜினாமா குறித்து யுவராஜா கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் தலைவர் ஜி.கே.வாசன் சில முடிவுகளை எடுத்தார். அதன் ஒரு பகுதியாக கட்சியில் தற்போது உள்ள இளைஞரணி உள்ளிட்ட 18 அணிகளில் 5 அணிகளை வைத்துக் கொண்டு மீதமுள்ள அணிகளை கலைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதன் பொறுப்பாளர்களும் மாற்றம் செய்யப்பட உள்ளனர். அதன்படி, 117 மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். கட்சியின் இந்த முடிவின் அடிப்படையில், எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன். தொடர்ந்து கட்சியில் இருந்து, கட்டமைப்பை வலுப்படுத்தவும், கட்சியின் வளர்ச்சிக்காகவும் தலைவர் ஜி.கே.வாசனுடன் இணைந்து பணியாற்றுவேன். இவ்வாறு யுவராஜா கூறினார்.

The post கட்சித்தலைமை மீது கடும் அதிருப்தி தமாகா இளைஞரணி மாநில தலைவர் திடீர் ராஜினாமா: கட்சி கட்டமைப்பை மாற்றியமைக்கும் ஜி.கே.வாசன் appeared first on Dinakaran.

Tags : Tamaga ,GK Vasan ,CHENNAI ,Yuvaraja ,Tamaka ,Congress party ,President ,Dinakaran ,
× RELATED தமிழக மீனவர்கள் மீதான இலங்கை...