×

ஆட்சிக்கு வந்தால் தாராவி மறுசீரமைப்பு திட்ட டெண்டர் ரத்து மும்பை நகரை அதானி நகராக்க அனுமதிக்க மாட்டேன்: உத்தவ் தாக்கரே உறுதி

மும்பை: மும்பை நகரை அதானி நகராக்க அனுமதிக்க முடியாது என்றுமுன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உறுதி தெரிவித்தார். மும்பையில் உள்ள தாராவி உலகின் மிக பெரிய குடிசை பகுதியாகும். தாராவியை மறுசீரமைக்க ரூ.20 ஆயிரம் கோடியிலான பணிகள் மேற்கொள்ள அதானி நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா அரசு டெண்டர் விட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக அதானி குழுமத்துக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மக்களவை தேர்தலில்,சிவசேனா(உத்தவ்) மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தாராவி மறுசீரமைப்பு திட்டத்தை முக்கிய பிரச்னையாக எழுப்பின. தென் மத்திய மும்பைக்கு மக்களவை தொகுதியில் தாராவி வருகிறது. இந்த தொகுதியில் சிவசேனா(உத்தவ்) கட்சியின் மூத்த தலைவர் அனில் தேசாய் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், மகாாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று கூறுகையில்,‘‘ வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட தாராவி மறுசீரமைப்பு டெண்டர் ரத்து செய்யப்படும். தாராவியில் வசிப்பவர்கள், அவர்களுடைய வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அங்கு உள்ள மக்களுக்கு அதே பகுதியில் 500 சதுர அடியில் வீடு வழங்கப்படும். அதானி குழுமத்துக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒப்பந்தத்தில் கூறப்படாத பல சலுகைகள் அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு எது நல்லது என்பதை பார்ப்போம். தேவைப்பட்டால் புதிதாக டெண்டர் விடப்படும். தாராவி மக்களை விரட்டியடிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மக்களின் மறுவாழ்வுக்காக மும்பை நகரில் உள்ள 20 இடங்களை அரசு தேர்வு செய்துள்ளது. அந்த இடங்கள் அனைத்தும் அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கானவை. அதில் மக்கள் குடியமர்த்தப்பட்டால்,ஏற்கனவே உள்ள கட்டமைப்பு திட்டங்களில் மேலும் அழுத்தம் ஏற்படும்’’ என்றார்.

 

The post ஆட்சிக்கு வந்தால் தாராவி மறுசீரமைப்பு திட்ட டெண்டர் ரத்து மும்பை நகரை அதானி நகராக்க அனுமதிக்க மாட்டேன்: உத்தவ் தாக்கரே உறுதி appeared first on Dinakaran.

Tags : Dharavi ,Mumbai ,Adani ,Uddhav Thackeray ,Former ,Chief Minister ,Dinakaran ,
× RELATED இந்திய பெரும் பணக்காரர்களில் முகேஷ்...