×

குருவாயூர் கோயிலில் வாங்கிய தங்க டாலரை கவரிங் என பொய் தகவல்: பக்தர் மீது நிர்வாகம் நடவடிக்கை?

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு கிருஷ்ணனின் உருவம் பொறித்த தங்கம் மற்றும் வெள்ளி டாலர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பாலக்காடு ஒற்றப்பாலத்தை சேர்ந்த மோகன்தாஸ் என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் 2 கிராம் எடையுள்ள ஒரு தங்க டாலரை வாங்கியுள்ளார். இதன்பிறகு சில தினங்களுக்கு முன் குருவாயூர் கோயிலுக்கு வந்த அவர், நிர்வாகிகளை சந்தித்து, தான் வாங்கிய தங்க டாலர் கவரிங் என்றும் எனவே அதை மாற்றித் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதைக்கேட்ட கோயில் நிர்வாகிகள், கோயில் நகை மதிப்பீட்டாளரை வரவழைத்து டாலர் பரிசோதிக்கப்பட்டது. அதில் அந்த டாலர் 22 காரட் தங்கம் தான் என உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதை நம்பாத மோகன்தாஸ், நகைக்கடையில் கொடுத்து அதை பரிசோதிக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு சம்மதித்த கோயில் நிர்வாகிகள், குருவாயூரில் உள்ள ஒரு நகைக் கடைக்கு சென்று அந்த டாலரை பரிசோதனை செய்தனர். அதிலும் அந்த டாலர் ஒரிஜினல் தங்கம் தான் என உறுதி செய்யப்பட்டது.

இதுதவிர குருவாயூரில் உள்ள ஒரு ஹால்மார்க் நிறுவனத்திலும் பரிசோதனை செய்து தங்கம் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்பதாக மோகன்தாஸ் கோயில் நிர்வாகிகளிடம் கூறினார். இதனிடையே குருவாயூர் கோயிலில் தான் வாங்கிய தங்க டாலர் கவரிங் என்று சமூக வலைதளங்களிலும் மோகன்தாஸ் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க குருவாயூர் கோயில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

The post குருவாயூர் கோயிலில் வாங்கிய தங்க டாலரை கவரிங் என பொய் தகவல்: பக்தர் மீது நிர்வாகம் நடவடிக்கை? appeared first on Dinakaran.

Tags : Guruvayur ,temple ,Thiruvananthapuram ,Guruvayur Krishna Temple ,Kerala ,Krishna ,Mohandas ,Palakkad Ottapalam ,
× RELATED ஆவணி மலர்ந்தது; குருவாயூர் கோயிலில் பக்தர்கள் கூட்டம்