- திருவனந்தபுரம் அரசு மருத்துவமனை
- திருவனந்தபுரம்
- திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- ரவீந்திரன்
- திருமலா
- கேரள சட்டமன்றம்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற நோயாளி 2 நாள் லிப்டில் சிக்கித் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் திருமலை பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (56). இவர் கேரள சட்டசபையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 13ம் தேதி இவர் முதுகு வலி சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். அப்போது மருத்துவமனையின் 2வது மாடிக்கு செல்வதற்காக இவர் லிப்டில் ஏறினார்.
அந்த லிப்டில் அவர் மட்டுமே இருந்தார். திடீரென கோளாறு ஏற்பட்டு லிப்ட் நின்றது. அதிர்ச்சியடைந்த ரவீந்திரன் பயத்தில் அலறினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு லிப்டில் இருந்த போனில் அவசர உதவிக்கு அழைத்தார். ஆனால் யாரும் போனை எடுக்கவில்லை. இதனால் அவர் லிப்டுக்குள்ளயே சிக்கிக் கொண்டார். இதற்கிடையே மாலை வரை ரவீந்திரன் வீட்டுக்கு திரும்பாததால் அவரது உறவினர்கள் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ரவீந்திரனை தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
கடந்த சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் ரவீந்திரன் லிப்டுக்கு உள்ளேயே சிக்கித் தவித்தார். இந்நிலையில் லிப்ட் பழுதானது குறித்து அறிந்த ஊழியர்கள் அதை சரி செய்வதற்காக நேற்று காலை சென்றனர். கதவை திறந்தபோது தான் ரவீந்திரன் மயங்கிய நிலையில் உள்ளே கிடப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக லிப்ட் பராமரிப்பு பணியாளர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை இணை இயக்குனருக்கு அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
The post திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் லிப்டில் சிக்கிய நோயாளி 2 நாட்களுக்குப் பின் மீட்பு appeared first on Dinakaran.