×

உத்தவ், சரத்பவாருடன் மம்தா பானர்ஜி சந்திப்பு: பாஜ அரசு நிலைக்காது என பேட்டி

மும்பை: உத்தவ் தாக்கரே மற்றும் சரத்பவாரை சந்தித்த பின் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி நிலைக்காது என்று கூறினார். மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, நேற்று மும்பையில் உள்ள மடோஸ்ரீ இல்லத்தில் உத்தவ் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திரபவார் கட்சித் தலைவர் சரத்பவாரையும் சந்தித்தார்.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் 3 தலைவர்களும் மக்களவை தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த மம்தா பானர்ஜி கூறியதாவது: ஒன்றியத்தில் ஆட்சி அமைத்துள்ள பாஜ அரசு நிலையான அரசாங்கம் அல்ல. பதவிக்காலத்தை நிறைவு செய்யாமல் பாதியிலேயே பாஜ ஆட்சி கவிழ வாய்ப்புள்ளது. 1975ம் ஆண்டு அவசரநிலை அறிவிக்கப்பட்ட ஜூன் 25ம் தேதியை இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினமாக’ அனுசரிக்கப் போவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

ஆனால் மோடி ஆட்சியில் அவசரநிலை காலங்கள் தான் அதிகமாக இருந்தன. நாங்கள் அவசரநிலை காலத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் இவர்களும் அதையே தான் செய்திருக்கிறார்கள். உத்தவ் தாக்கரே பிரிவினரிடம் இருந்து கட்சிப் பெயர் மற்றும் சின்னங்கள் பறிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. எனினும் உத்தவ் தாக்கரே அணியினர் புலியை போல போராடினார்கள். அக்டோபரில் நடக்கவிருக்கும் மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலின் போது நான் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post உத்தவ், சரத்பவாருடன் மம்தா பானர்ஜி சந்திப்பு: பாஜ அரசு நிலைக்காது என பேட்டி appeared first on Dinakaran.

Tags : Mamata Banerjee ,Uddhav ,Sharad Pawar ,BJP Government ,Mumbai ,Uddhav Thackeray ,West Bengal ,Chief Minister ,BJP ,NDA ,Trinamool Congress ,Mamata ,Sarathpawar ,
× RELATED பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு...