×

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஹத்ராஸ்: ஹத்ராஸ் சம்பவத்தின் முக்கிய ஒருங்கிணைப்பாளர் சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் சரணடைந்த நிலையில், இன்று போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, சாமியார் போலே பாபா சூரஜ்பாலின் ஆதரவாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தனர்.

ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நிகழ்ச்சியின் முக்கிய ஒருங்கிணைப்பாளர் தேவ் பிரகாஷ் மதுகர் போலீசில் சரணடைந்தார். அதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். ஜூனியர் இன்ஜினியராக இருந்த இவர், சாமியாரின் தீவிர பக்தராக மாறினார். மேலும் சாமியாரின் அந்தரங்க உதவியாளராகவும் இருந்து வந்தார்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சாமியாருக்காக ஆஜராக உள்ள வழக்கறிஞர் ஏ.பி.சிங் கூறுகையில், ‘தேடப்பட்டு வந்த தேவ் பிரகாஷ் மதுகர், சிறப்பு புலனாய்வு குழுவின் முன் சரணடைந்துள்ளார். முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகவில்லை. காரணம் நாங்கள் எந்த தப்பும் செய்யவில்லை. இதய நோயாளியான அவரிடம், போலீசார் உரிய மருத்துவர்களின் ஆலோசனைபடி விசாரிக்க வேண்டும்’ என்றார்.

இதுகுறித்து உத்தரபிரதேச போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘ஹத்ராஸ் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தேவ் பிரகாஷ் மதுகர், உத்தரப் பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்ததால், அவரை குறித்த தகவல் தெரிவிப்போருக்கு ஒரு லட்சம் ரூபாய் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது கைது செய்யப்பட்ட தேவ் பிரகாஷ் மதுகர் இன்று (ஜூலை 6) ஹத்ராஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். பின்னர் அவரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிப்போதும். அதன்பின்னரே உண்மைகள் தெரியவரும்’ என்றார்.

The post சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : SARAN ,HADRAS ,SPECIAL INVESTIGATION TEAM ,Hathras ,Hathras, Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED கேரவன் விவகாரம்; நடிகை ராதிகா...