கோவை, ஜூன் 27: கோவை மாவட்டத்தில் 2024-2025-ம் நிதியாண்டிற்கு சட்டப்படிப்பு படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் சட்டப்படிப்பு படித்த மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் தங்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொள்வதற்கு உரிய கட்டணங்கள் செலுத்துவதற்கும் மற்றும் தேவையான சட்டப் புத்தகங்கள் வாங்கவும் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார். உதவித்தொகை பெற மாற்றுத்திறன் சதவீதமானது குறைந்த பட்சம் 40 சதவீதம் அல்லது அதற்கு மேல் பெற்றிருத்தல் வேண்டும். சட்டப்படிப்பு முடித்து தமிழ்நாடு பார் கவுன்சிலிலோ அல்லது புதுச்சேரி பார் கவுன்சிலிலோ பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள்.
தமிழ்நாட்டை வசிப்பிடமாக கொண்டு வெளிமாநிலங்களில் சட்டப்படிப்பு பயின்று இருப்பின் பயனாளி தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறப்பட்டு தமிழ்நாடு பார்கவுன்சிலில், புதுச்சேரி பார்கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டு வழக்கறிஞர் பணி மேற்கொண்டு வருபவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள். ஆனால், வெளிமாநிலங்களில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறவில்லை என்பதற்கான உறுதிமொழி சான்று பெற்றித்தல் வேண்டும். இதே திட்டத்தின் கீழ் வேறு ஒரு துறையிடமிருந்து (பிற்படுத்தப்பட்டோர்/ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம்) நிதியுதவி பெறப்படவில்லை என்பதை உறுதி செய்திடல் வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், சட்டப்படிப்பு சான்றிதழ் மற்றும் வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு சான்றிதழ் ஆகிய நகல்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம், கோவை- 18. என்ற முகவரிக்கு ஜூலை 31ம் தேதிக்கு முன்னர் நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
The post சட்டம் படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை appeared first on Dinakaran.