×

கோவை, திருப்பூர், ஈரோட்டிலிருந்து 3 லட்சம் தொழிலாளர்கள் விரைவில் வௌியூர் பயணம்

கோவை : கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் பம்பு, மோட்டார், ஆட்டோ மொபைல்ஸ், ஜவுளி, பவுண்டரி, சீட் மெட்டல், பனியன், சாயப்பட்டறை உள்ளிட்ட தொழில்கள் அதிகமாக நடக்கிறது. பல லட்சம் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அடுத்த வாரம் புதன்கிழமை முதல் ஒரு வாரம் தொழிலாளர்கள் விடுமுறை எடுத்து சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ஒடிசா, பீகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்பட பல்வேறு வெளி மாநில தொழிலாளர்கள் ரயில் மூலமாக சொந்த ஊர் செல்ல ஆர்வம் காட்டியுள்ளனர். சிலர், தனியாக பஸ் புக்கிங் செய்து வெளி மாநிலம் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக ஆம்னி பஸ் உள்பட பல்வேறு பஸ்கள், வேன்களை இப்போதே தேடி பிடித்து சொந்த ஊர் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சில தனியார் நிறுவனங்களும் தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசுடன் ரயில், பஸ் டிக்கெட் முன் பதிவு செய்து தருவதில் ஆர்வம் காட்டி வருகிறது.

வெளி மாநில தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு சென்றால் திரும்பி வர 2 வாரங்களுக்கு மேலாகி விடும். மேலும் பல்வேறு நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் மாறி செல்வதும் தீபாவளி பண்டிகைக்கு பின்னரே அதிகமாக நடக்கும் நிலையாக இருக்கிறது. தொழிலாளர்களை தக்க வைக்க தொழில் நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொழில் நிறுவனங்களுக்கு கூலி ஆட்கள் தேவை மிக அதிகமாக இருக்கிறது.

திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கியும் தொழிலாளர்களை பணிக்கு வைத்துள்ளனர். இந்த நிலையில் தீபாவளி நேரத்தில் தொழிலாளர்கள் நிறுவனம் மாறுவதை தவிர்க்க தேவையான வசதி வாய்ப்புகளை உருவாக்கி தர தொழில் நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகிறது. கோவை, திருப்பூர் மார்க்கமாக இயங்கும் வெளியூர், வெளி மாநில ரயில்களில் தீபாவளி சீசன் ரயில் டிக்கெட் முன் பதிவு 2 மாதம் முன்பே வெகுவாக முடிந்து விட்டது.

தற்போது ஸ்பெஷல் ரயில்கள் கூடுதலாக இயக்குவது தொடர்பான அறிவிப்பு வருமா என பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், மங்களூர், பீகார், ஒடிசா, மகாராஷ்ராவிற்கு சிறப்பு ரயில்களை அதிகமாக இயக்க வேண்டும் என கேட்டிருக்கிறார்கள். இந்த சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்கினால் டிக்கெட் முன் பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

போக்குவரத்து துறையினர் கூறுகையில், ‘‘கடந்த காலங்களில் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு டிராவல்ஸ் வேன், பஸ் புக்கிங் முன் கூட்டியே நடந்தது. நடப்பாண்டிலும் தீபாவளியை முன்னிட்டு தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல புக்கிங் செய்து வருகின்றனர். ரயில்களில் பெரும்பாலான முன் பதிவு டிக்கெட் முடிந்து விட்டது. கடும் கூட்ட நெரிசலில் தீபாவளிக்கு ரயிலில் சென்று சேர்வதில் சிக்கல் இருப்பதாக வெளிமாநில தொழிலாளர்கள் கருதுகின்றனர். எனவே தொழில் நிறுவனங்களும் டிராவல்ஸ் நிறுவனங்களை நாடி வருகிறது. ஒரிரு நாளில் டிராவல்ஸ் வேன், பஸ் கிடைப்பதும் அரிதாகி விடும்’’ என்றனர்.

The post கோவை, திருப்பூர், ஈரோட்டிலிருந்து 3 லட்சம் தொழிலாளர்கள் விரைவில் வௌியூர் பயணம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore, Tirupur, Erode ,Vauyuur ,Coimbatore ,Coimbatore, ,Tirupur, ,Erode ,Coimbatore, Tirupur, ,
× RELATED நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை...