×

2024-25ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலை ரூ.117 உயர்வு: குவிண்டால் ரூ.2300 ஆனது; ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றிய அரசு ரூ.117 உயர்த்தி உள்ளது. இதன் மூலம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,300 ஆக உயா்ந்துள்ளது. ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று டெல்லியில் கூறியதாவது: விவசாய செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் 14 கோடைகால பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் காமன் கிரேடு நெல்லுக்கு குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.117 உயர்த்தப்பட்டு ரூ.2,300 ஆகவும், ‘ஏ’ கிரேடு ரகம் குவிண்டாலுக்கு ரூ.2,320 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றதும் எடுக்கப்பட்ட முதல் அமைச்சரவை முடிவு இதுவாகும். 2018ல் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில் குறைந்த பட்ச ஆதாரவிலை உற்பத்திச் செலவை விட 1.5 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று அரசு கொள்கை முடிவு எடுத்தது. சமீபத்திய குறைந்தபட்ச ஆதரவு உயர்விலும் இந்த கொள்கை பின்பற்றப்பட்டது. தற்போதும் அதன் அடிப்படையில் குவிண்டாலுக்கு ரூ.117 உயர்த்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள வாதவனில் ரூ.76,200 கோடி செலவில் பெரிய துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் (ஜேஎன்பிஏ) மற்றும் மகாராஷ்டிரா கடல்சார் வாரியம் (எம்எம்பி) ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட எஸ்பிவியான வாதவன் போர்ட் ப்ராஜெக்ட் லிமிடெட் (விபிபிஎல்) முறையே 74 சதவீதம் மற்றும் 26 சதவீத பங்குகளை வைத்து இந்த திட்டம் உருவாக்கப்படும். இதன் மூலம் இந்த துறைமுகம் உலகின் முதல் 10 துறைமுகங்களில் ஒன்றாக இருக்கும். இத்திட்டத்தின் மூலம் 12 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான ரூ.2,869.65 கோடி திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் உள்ள விமான நிலையத்தின் வளர்ச்சியில் புதிய முனையக் கட்டிடம் கட்டுதல், ஓடுபாதை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும். இதற்காக இந்திய விமான நிலைய ஆணையத்தின் முன்மொழிவு அடிப்படையில் ரூ. 2,869.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 1 கோடி பயணிகளை கையாளும் திறன் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

* தமிழ்நாடு, குஜராத் கடலில் காற்றாலை திட்டங்களுக்கு ரூ.7,453 கோடி நிதிஒதுக்கீடு
தமிழ்நாடு, குஜராத்தில் கடலுக்குள் காற்றாலை திட்டங்களுக்காக ரூ.7,453 கோடி நிதி ஒதுக்க ஒன்றிய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு மற்றும் குஜராத் கடல் பகுதியில் தலா 500 மெகாவாட் வீதம் 1 ஜிகாவாட் கடல் பகுதி காற்றாலை திட்டங்களை அமைக்க ரூ.6,853 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடலோர காற்றாலை ஆற்றல் திட்டங்களுக்கான தளவாடத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் பணிக்காக அங்குள்ள இரண்டு துறைமுகங்களை மேம்படுத்த ரூ.600 கோடி மானியம் வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட தேசிய கடல் காற்று ஆற்றல் கொள்கையை செயல்படுத்துவதற்கான ஒரு முக்கிய படி இதுவாகும் என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

* தேர்தலுக்காகவா?
இந்திய உணவுக் கழகம் தற்போது சுமார் 53.4 மில்லியன் டன் அரிசியை கையிருப்பில் வைத்துள்ளது. இது ஜூலை 1ம் தேதிக்குத் தேவையான அளவைவிட நான்கு மடங்கு அதிகமாகும். மேலும் புதிய கொள்முதல் இல்லாமல் மேலும் ஓராண்டு வரை தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானது. இருப்பினும் அடுத்து வர உள்ள அரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், டெல்லி, ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் தேர்தல்களை குறிவைத்து உயர்த்தப்பட்டு இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

The post 2024-25ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலை ரூ.117 உயர்வு: குவிண்டால் ரூ.2300 ஆனது; ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Govt ,New Delhi ,Union government ,Minister ,Ashwini Vaishnav ,Union Cabinet ,Dinakaran ,
× RELATED முதுநிலை நீட்தேர்வு தள்ளிவைப்பு...