மியூனிக்: ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி இன்று முதல் ஜெர்மனியில் நடைபெற உள்ளது. உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு பிறகு, உலக கால்பந்து ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் போட்டி யூரோ கோப்பை. உலக கோப்பையில் பங்கேற்கும் பெரும்பான்மையான அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் இத்தாலி உட்பட 24 நாடுகள் பங்கேற்கின்றன.
கூடவே ஜெர்மனி, இத்தாலி, இஙகிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் என முன்னாள் உலக சாம்பியன்களும் களம் காண உளளன. போட்டியில் பங்கேற்கும் நாடுகள் தலா 4 அணிகள் கொண்ட 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று இன்று முதல் ஜூன் 26ம் தேதி வரை நடைபெறும். தொடர்ந்து நாக் அவுட் சுற்றான ‘சுற்று-16’ ஜூன் 29 முதல் ஜூலை 2ம் தேதி வரையிலும், காலிறுதி ஆட்டங்கள் ஜூலை 5, 6 தேதிகளிலும் நடக்கும்.
அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 9, 10 தேதிகளில் நடத்தப்படும். இறுதி ஆட்டம் ஜூலை 14ம் தேதி நடக்கும். இந்த ஆட்டங்கள் அனைத்தும் ஜெர்மனியில் உள்ள பெர்லின், மியூனிக், டார்ட்மண்ட், ஹம்பர்க், ஃபிரங்க்பர்ட் உட்பட 10 நகரங்களில் நடைபெற உள்ளன. இன்று நள்ளிரவு நடைபெறும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜெர்மனி, ஸ்காட்லாந்து என பிரிவு-ஏ அணிகள் களம் காணுகின்றன.
யூரோ கோப்பை துளிகள்
* யூரோ கோப்பை 1960ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை போலவே நடத்தப்படுகிறது.
* 2020ம் ஆண்டு நடைபெற இருந்த யூரோ கோப்பை கொரோனா பெருந்தொற்று காரணமாக 2021ம் ஆண்டு நடத்தப்பட்டது.
* முதல் யூரோ கோப்பையை வென்ற ரஷ்யா (சோவியத் ரஷ்யா), உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சோவியத் ரஷ்யாவின் அங்கமாக இருந்த உக்ரைன், ஜார்ஜியா நாடுகள் போட்டியில் பங்கேற்கின்றன.
* ஜெர்மனி, ஸ்பெயின் ஆகியே நாடுகள் தலா 3 முறையும், இத்தாலி, பிரான்ஸ தலா 2 முறையும், ரஷ்யா, போர்ச்சுகல், நெதர்லாந்து, கிரீஸ், டென்மார்க், பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை தலா ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன.
* ஒரு காலத்தில் இருந்த யூகோஸ்லோவியா போட்டியை நடத்திய போது செக்கோஸ்லோவாகியா 1976ல் கோப்பையை வென்றது. அதனால் தனி நாடுகளாக பிரிந்து இருக்கும் செக் குடியரசு, ஸ்லோவாக்கியா, செர்பியா ஆகியவை கோப்பையை வென்ற நாடுகள் என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
The post யுரோ கோப்பை கால்பந்து இன்று ஜெர்மனியில் தொடக்கம் appeared first on Dinakaran.