×

மாஞ்சோலை தேயிலை தோட்ட பிரச்னை தொழிலாளர்கள் வாழ்வுரிமை காப்பதில் அரசு முன்நிற்கும்: சபாநாயகர் அப்பாவு உறுதி

நெல்லை: மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசே ஏற்கும் கோரிக்கை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இப்பிரச்னையில், தொழிலாளர்கள் வாழ்வுரிமை காப்பதில் அரசு எப்போதும் முன்நிற்கும் என்று சபாநாயர் அப்பாவு தெரிவித்தார். நெல்லையில் சபாநாயகர் அப்பாவு நேற்று அளித்த பேட்டி: மாஞ்சோலை தேயிலை தோட்ட பிரச்னையை பொறுத்தவரை வரும் 2028ம் ஆண்டோடு பிபிடிசி நிர்வாகத்திற்கான குத்தகை காலம் முடிகிறது. வனத்துறை கடந்த ஆண்டு அதற்கு நினைவூட்டல் கடிதம் அளித்து விட்டது. அதை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். தேயிலை தோட்ட நிர்வாகத்திற்கு ‘டீ’ தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனக்கூறி அவர்கள் அதனை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

ஆயிரம் முதல் இரண்டாயிரம் ஏக்கரில் மட்டுமே இப்போது தேயிலை பயிரிடப்பட்டு வருகிறது. இருப்பினும் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை காப்பதில் அரசு எப்போதும் முன்நிற்கும். அப்பகுதியை வனத்துறைக்கு முழுமையாக கொடுப்பதிலும் சிக்கல்கள் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியில் உள்ள அகஸ்தியரை தரிசிக்க நமக்கு அனுமதியில்லை. ஆனால் கேரளாவில் அனுமதி கிடைக்கிறது. எனவே வனத்திற்குள் நமது ஆட்கள் எப்போதும் இருக்க வேண்டும் அதுதான் வனத்திற்கு பாதுகாப்பு. மூணாறில் கேரள பகுதியில் தீவிரவாதிகள் பயிற்சி பெற்றதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. தோட்டத் தொழிலாளர்கள் அங்கு இருப்பது நாட்டுக்கும், வனத்திற்கும் பாதுகாப்பாக அமையும். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கலைஞர் வீடு கட்டும் திட்டம், தொழில் செய்ய நிதியுதவி ஆகியவற்றை அளித்திட நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

The post மாஞ்சோலை தேயிலை தோட்ட பிரச்னை தொழிலாளர்கள் வாழ்வுரிமை காப்பதில் அரசு முன்நிற்கும்: சபாநாயகர் அப்பாவு உறுதி appeared first on Dinakaran.

Tags : Mancholai ,Speaker ,Appavu ,Nellai ,Chief Minister ,Sabanayar Appavu ,Mancholai tea ,
× RELATED மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை...