×

பிரசாத தோசைகளின் கதைகள்!

இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றுதான் தோசை. நம்மில் பலருக்கும் பிடித்த உணவு. அது நமது பாரம்பரிய கோயில்கள் மூலம் பிரபலமான உணவு என்பது தெரியுமா! ஆரம்பத்தில் கோயில்களில் கடவுளுக்கு “அப்பம்’’ படைக்கப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. அதுவே பின்னர், தோசையாக மாறியதாக வரலாறு கூறுகிறது.

18ம் நூற்றாண்டில், தோன்றிய தமிழ் அகராதிகளில், அது பற்றிய குறிப்புகள் உள்ளன. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கல்வெட்டுகளில், கடவுளுக்கு படைக்கப்பட்ட தோசை மாவில், சீரகம், மிளகு கலந்து காரமாக தோசை தயாரித்து படைக்கப்பட்டதாக கூறுகிறது. 15ஆம் நூற்றாண்டில், கோயிலில் தாயார் சந்நதிக்கு எதிரில் உள்ள அந்தக் கல்வெட்டில், இறைவனுக்குப் படைக்கப்படும் தோசைக்குத் தேவையான பொருள்கள், எப்படிச் செய்ய வேண்டும், அதை யார் யாருக்கு எப்படிப் பகிர வேண்டும் என்பதுபோன்ற தகவல்களைத் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதுடன், அதற்குத் தேவையான தானம் கருவூலத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், கிரந்தமும் தமிழும் கலந்த மொழியில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

ஆரம்பத்தில், திருப்பதி வெங்கடாசலபதி கோயில் பெருமாளுக்கு படைக்கப்பட்டது லட்டு அல்ல, தோசைதான். அந்த தோசையின் மீது சர்க்கரை தூவி படைக்கப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. சமையல் பற்றி இந்து நூலான “பகா சாஸ்திரம்’’ விதவிதமான தோசைகளை பற்றி குறிப்பிட்டுள்ளது. அதில் சில, தேங்காய் தோசை, வெந்தய தோசை, வெள்ளை தோசை, கோதுமை தோசை, பிரண்டை தோசை ஆகிய தோசைகளைப் பற்றி எழுதியிருக்கிறது.

18ம் நூற்றாண்டில் அறிமுகமான “பிகன்டு’’ அகராதியில்தான் முதன் முதலாக தோசை பற்றிய குறிப்புகள் இடம் பெற்றன. இது, அப்பம் போன்ற பலகாரங்கள் வகையில் இடம் பெற்றது. “பிங்கல நிகண்டு’’ எனும் தமிழ் அகராதி, தோசையை “காஞ்சம்’’ என்று குறிப்பிட்டுள்ளது. 18ம் நூற்றாண்டில் தோன்றிய “விறலி விடு தூது’’ என்ற நூலில், தோசையை பற்றிய குறிப்புகள் உள்ளன. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், கி.மு.1524ம் ஆண்டு தோசையை பிரசாதமாக வழங்கவே, “தோசை படி’’ எனும் நன்கொடை வழங்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

இதை வழங்கி, ஆரம்பித்து வைத்தவர், விஜய நகர மன்னனான கிருஷ்ண தேவராயர். இதற்காக 3000 பொன்களை வழங்கியதாக வரலாறு கூறுகிறது. அதன் படி தினமும் பெருமாளுக்கு 15 தோசைகள் படைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இதே கோயிலில், கிருஷ்ண ஜெயந்தி அன்று பிரமாண்டமான தோசை படைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

வரதராஜ பெருமாள் கோயிலில், பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்படும் “காஞ்சிபுரம் இட்லி’’ மிகவும் பிரசித்தி பெற்றது. இது மட்டுமல்லாமல், தோசையும் வடையும் நைவேத்தியம் செய்யப்
படுகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, தோசையும் வடையும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. 17ம் நூற்றாண்டு கல்வெட்டுகளில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், பெருமாளுக்கு நைவேதியமாக தோசை படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 2000 ஆண்டுகள் பழமையான “மதுரைக்காஞ்சி’’ எனும் மதுரை பெருமைகளை கூறும் நூல், மதுரை வீதிகளில் தோசை போன்றே “அடை’’ விற்பனை செய்ய பட்டதாக குறிப்பிடுகிறது. தற்போது மதுரை அழகர் கோயில், செங்கல்பட்டு சிங்கம் பெருமாள் கோயில், காஞ்சி வரதராஜப் பெருமாள், ரங்கம் ரங்கநாதர் கோயில்களில் தோசைதான் முதன்மை பிரசாதம்.

மதுரை அழகர் கோயில் சுந்தரராஜப் பெருமாளுக்கு படைக்கப்படும் நைவேத்தியமான தோசை, ஐம்பொன்னால் ஆன சட்டியில் சுடப்படுகின்றது. மதுரை அழகர் கோயிலில், கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாளுக்கு தினமும் மாலை 6 மணிக்கு மேல் பாசுரங்கள் பாடப் பெற்ற பிறகு, நெய்யில் தயாரிக்கப்பட்ட ராட்சத தோசை படைக்கப்படுகிறது.

அவை பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்தத் தோசை, பச்சரிசி மாவு, உளுந்து மாவு, மிளகுப் பொடி, பெருங்காயம், சுக்கு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைக் கொண்டு ஐம்பொன்னால் ஆன சட்டியில் சுடப்படுகின்றது. பச்சரிசியையும், உளுத்தம் பருப்பையும் நூபுரகங்கை தீர்த்தத்தில் ஊறவைத்துப் பிறகு காற்றில் காயவைத்து மாவாக இடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அழகர்கோயிலில், மூலவருக்கு படைக்கும் நைவேத்தியம், சற்றே வித்தியாசமானது. சம்பா தோசை என்று சொல்லப்படும், நெய் பலகாரம்தான் இது. நமது வழக்கமான தோசை போல் அல்லாமல், இந்த தோசை “நெய்யில்’’ வறுக்கப்படுகிறது. ஒரு பெரிய இரும்புப்பாத்திரத்தில் தோசையை நெய்யில் வார்க்கிறார்கள்.

தோசையின் அளவு சுமார் 15 அங்குலங்கள் போல பெரியது, தோசையைக் கிழித்து தோசையை பிரசாதமாகப் பரிமாறுகிறார்கள். விவசாயத்தில் நல்ல அறுவடை கிடைத்த பின், ஒரு மரக்கால் அளவுக்கு முதல் படியைக் கோயில் தானியக் கிடங்கில் பக்தர்கள் கொட்டுவார்கள். இப்படி வந்த சம்பா நெல் அரிசியைக் கொண்டு, சம்பா தோசை செய்வார்கள்.

அதனால்தான் இந்த தோசைக்கு `சம்பா தோசை’ என்ற பெயரும் வந்தது. மேலும், உறவுச் சண்டை, ஊர்ச்சண்டை, பங்காளி சண்டை போட்டுக் கொண்ட நபர்கள் ஒன்றுசேர விரும்பினால், மலையில் ராக்காயி அம்மன் தீர்த்தம் ஆடி சம்பா தோசையைப் பகிர்ந்து சாப்பிடுவார்கள். இதனால் காசு வெட்டிப் போட்டது, திட்டித் தீர்த்தது, சாமிக்கு மிளகாய் அரைத்தது என்று எல்லாம் கழிந்து சுகத்தை அள்ளித் தரும் என்று சுற்றுப்புற கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

செங்கல்பட்டு அடுத்த சிங்கப் பெருமாள்கோவிலில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் உள்ள பாடலாத்ரி நரசிம்ம பெருமாள், பெரிய மலையை குடைந்து ஒரே கல்லில் உருவானவர். பாடலாத்ரி பெருமாள், சிவபெருமானை போன்று நெற்றிக் கண்ணைக் கொண்டு முக்கண்ணோடு அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கிறார். இந்த ஊர் நரசிம்மரின் முகமான சிங்கத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. 2000 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்தைச் சேர்ந்த குடைவரைக் கோயிலாகும். சிங்கப் பெருமாள் நரசிம்மர் கோவிலில் லட்டு, அதிரசம், முறுக்கு, சீடை, தட்டை போன்றவை பிரசாதமாக இருந்தாலும், மிளகு தோசைக்கே வரவேற்பு அதிகம். சுவையான மிளகுதோசையை பிரசாதமாக தருகிறார்கள். இந்த தோசைகள், பித்தளைப் பானைகளில் வைக்கப்பட்டிருக்கும்.

அதில் எண்ணெய் பொடி சேர்த்து பக்தர்களுக்கு கொடுக்கின்றனர். இதை குழந்தைகள் விரும்பி உண்பதால், தோசைப் பெருமாள் கோயில் என்று செல்லமாக குறிப்பிடுகின்றனர். திருச்சியில் உள்ள ரங்கம் கோயில் தோசை என்பது, கோயிலில் வழங்கப்படும் பிரசாதம். இது எளிதான தோசை மற்றும் மிகவும் தனித்துவமான சுவை கொண்டது. ரங்கம் கோயில் “சம்பாரா தோசை’’, பச்சரிசி, கறுப்பு உளுந்து, மிளகு மற்றும் சீரகம் சேர்த்து நெய்யில் வார்க்கப்படும் ருசியான தோசையாகும்

கோவீ.ராஜேந்திரன்

The post பிரசாத தோசைகளின் கதைகள்! appeared first on Dinakaran.

Tags : Prasada Dhosa ,India ,God ,
× RELATED இறைத்தேடலில் நிதானமே பிரதானம்!!