×

ஜீவலக்னமும் சூட்சுமங்களும்

எந்த ஒரு விஷயமும் நடைமுறையோடு பொருந்திப்போனால்தான் நம்பகத்தன்மை ஏற்படும் என்பது பொதுவான விதி. இது ேஜாதிடத்திற்கும் பொருந்தும். இன்றைய காலக்கட்டத்தில், ஜோதிடத்தை சிலர் நம்பாமல் இருப்பதற்கும், சிலர் அரைகுறையாக நம்புவதற்கும் காரணம், நடைமுறைகளோடு பொருத்திப்பார்க்கும் ஞானம் இல்லை என்பதுதான். சிலருக்கு, ஜோதிட ஞானம் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இதுபோன்ற அமைப்புகளுக்கும், அவர்களின் சுயஜாதகத்தில் வழி இருந்தால்தான் சாத்தியம். உண்மை என்பது எப்பொழுதும் உண்மையாகவே இருக்கிறது. நாம் அதை உண்மையாக தேடி அறிந்து ஆய்வு செய்கிறோமா? என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. ஜோதிடத்தில், பெயர்களுக்கும் பெயரின் காரணங்களுக்கும் கிரகங்களே காரணமாகின்றன. அதன் வழியே ஜாதகத்தை ஆய்வு செய்வதுதான் நடைமுறையோடு இருப்பது சிறந்ததாகும். அதிகமான கணித முறைகளை வைத்துமட்டும் ஜாதகத்தை ஆய்வு செய்தால், ஜாதகம் என்பது ஜடப்பொருளாகவே இருக்கும். ஜடமாக இருக்கும் பட்சத்தில், ஜோதிடத்தை நீங்கள் நடைமுறைக்கோ அல்லது உணரும் தன்மைகோ கொண்டுவர இயலாது. பலன்களும் ஜடத்தன்மையில்தான் இருக்கும். அதன்படி ஜீவலக்னம் என்ற சூத்திர ஞானத்தை அறிவோம்.

ஜீவலக்னம் என்பது என்ன?

ஒரு சிசு பிறக்கும் பொழுது, சூரியன் அன்றைய நாளில் பயணிக்கும் ராசியைத்தான் லக்னம் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்த லக்னத்தின் அமைப்பின்படியே அந்த உயிர் இங்கு என்னென்ன விஷயங்களை அனுபவிக்க ஜனனம் அடைந்திருக்கிறது என்பதை ஜோதிடத்தின் வாயிலாக கண்டறிய முடியும். சில நேரங்களில் சில ஜாதகங்களில் இந்த லக்ன அமைப்புகள் மாறியிருப்பதை பலன்கள் வாயிலாகவும் பெயர்கள் வாயிலாகவும் கண்டறிய முடிகிறது. அப்பொழுது ஜாதகத்தில் பிறந்தநாள் கிடைத்தாலும், நேரம் சரியாக கொடுக்கப்படாவிட்டால் லக்னம் மாறுபடுகிறது. அப்போது பலனும் மாறுபடும். இந்த லக்னத்தை சரியாக கண்டறிந்து, அதனை சரிசெய்வதற்கான வழிமுறைகளையும் ஆய்வு செய்து, அதற்கு ஜீவலக்னம் என பெயரிட்டு அந்த விஷயத்தை உலகறியச் செய்தவர் குருநாதர் நெல்லை வசந்தன் அவர்களே. இந்த ஜீவலக்னம் என்பது ஒரு சிசுவிற்குள் ஓர் உயிர் நுழைகின்ற தருணமாகும். இதை யாராலும் அறிய இயலாது. அந்த உயிர் உடலுக்குள் பிரசன்னமான நேரமே ஜீவலக்னம். இந்த ஜீவலக்னமும், ஒரு சிசு இந்த புவியில் உதயமான லக்னமும் ஒன்றாகவே இருக்கும் என்பது இவரின் ஆய்வுகளின்படி கிடைத்த விதி. அதாவது, உயிர் உடலுக்குள் பிரசன்னமான லக்னத்திலேயே ஜனனம் நடைபெறும். லக்னமும் ஒன்றாக இருக்கும். ஆனால், நடைமுறையில் பல சிக்கல்கள் உண்டு.

ஜீவலக்னம் – பிறப்பு லக்னமும் மாறுபட்டால் எவ்வாறு சரி செய்வது?

ஒருவரின் பெயரை தீர்மானிப்பது, ஜீவலக்னம் – லக்னமும் ஒன்றாக அமையப் பெற்ற ராசிக் கட்டத்தில் உள்ள கிரகங்கள்தான். ஜாதகரின் பெயரும், லக்னம், லக்னாதிபதி, லக்னத்தை பார்வை செய்யும் கிரகங்கள், ஐந்தாம் பாவகத்தின் அதிபதி மற்றும் ஒன்பதாம் பாவகத்தின் அதிபதி தொடர்புடைய அல்லது பார்க்கும் கிரகங்கள்தான் பெயரை கொடுக்கும். வலிமையான கிரகங்களும் பெயர்களை கொடுக்கும்.நான்காம் பாவகத்தில் (4ம்) அமர்ந்த கிரகங்களும், நான்காம் பாவகத்தை பார்க்கும் கிரகங்களும், சந்திரனின் சாரத்தில் அமர்ந்த கிரகங்களும் லக்னத்துடன் தொடர்புடைய கிரகங்களும் மற்றும் ஐந்தாம் பாவத்தில் (5ம்) அமர்ந்த கிரகங்களில் எந்த கிரகம் அதீத வலிமை உடையதாக இருக்கிறதோ, அதுவே தாயின் பெயரை நிர்ணயம் செய்கின்றன. இதில் திரிகோண ஸ்தானங்களான லக்னம் (1ம்) ஐந்தாம் பாவகம் (5ம்) ஒன்பதாம் பாவகம் (9ம்) ஆகியவை முதன்மை பெறுகின்றன.ஐந்தாம் பாவத்திலோ (5ம்) அல்லது ஒன்பதாம் பாவத்திலோ அல்லது லக்னத்திலோ (1ம்) அமர்ந்த கிரகங்கள் அல்லது கிரகங்களின் வழியாக அமைந்த சாரத்தின் வலிமையான கிரகங்கள் தந்தையின் பெயரை நிர்ணயம் செய்கின்றது. இதில் எந்த கிரகம் அதீத வலிமை உள்ளதாக இருக்கிறதோ, அதுவே தந்தையின் பெயரையும் நிர்ணயம் செய்கின்றன.

இதனை அடிப்படையாகக் கொண்டு பெயர்களை ஜோதிட கிரகங்களோடு ஆய்வு செய்துதான் மாற்றத்தை கண்டறிய முடியும். இதனை அடிப்படையாக வைத்து லக்னம் மாறுபட்டுள்ளதா? என்பதை கண்டறிய வழி வகை வாய்ப்புகள் உண்டு. அப்படி, பெயர்கள் பொருந்தவில்லை எனில், ஜாதகத்தில் லக்ன பாவகத்தை ஒரு பாவகத்திற்கு பின்னோக்கியோ அல்லது ஒரு பாவகத்திற்கு முன்னோக்கியோ நகர்த்தி பெயர்களைப் பொருத்திப் பார்க்கலாம். அவ்வாறு பின்னோக்கி நோக்கி முன்னோக்கி நகர்த்தி பெயர்களை பொருத்திப் பார்த்தால், பலன்களும் சரியாக அமையும். அதுவே ஜீவலக்னம், அவ்வாறே சரிசெய்ய இயலும்.

ஜோதிடப் பலன்கள் ஏன் முரண்படுகிறது?

லக்னம் மாறுபாடுடன் இருக்குமானால் பலன்கள் பொருந்திப் போகாது. நடைபெறும் சம்பவங்களுக்கும் ஜாதகத்திற்கும் தொடர்பில்லாமல் இருக்கும். ஜோதிடர் ஜாதகத்தை பார்த்து ஒரு பலன் சொன்னால் நடப்பது வேறொன்றாக இருக்கும். பஞ்சாங்கங்கள் பல உள்ளன. ஒரு பஞ்சாங்கத்தில் உள்ள திசா-புத்திகளும் மற்றொரு பஞ்சாங்கத்தில் உள்ள திசா-புத்திகளும் மாறுபடும் பொழுது, பலன்களும் மாறுபாட்டிற்கு உட்படுகின்றது என்பதை ஜோதிடர்கள் அறிவர். ஆனாலும், இதை சரியாக பொருத்திப் பலன்களை கண்டறிவதற்கு சில ஆராய்ச்சி தேவை என்பதே உண்மை. இந்த முரண்பாடுகளை சரி செய்வதற்கு ஜீவலக்னம் உதவி செய்யும்.

ஏன் லக்னம் மாறுபாடு ஏற்படுகின்றது?

*ஒரு குறிபிட்ட லக்னம் என்பது கிட்டத்தட்ட 2 மணி நேரம் இருக்கும். இந்த லக்னம் முடியும் தறுவாயில் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது, அப்பொழுது ஏற்படும் சில காரணங்களால் லக்னம் மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதாவது, லக்னம் 29 டிகிரியில் விழும். நேரம் தவறானால் அடுத்த லக்னத்திற்கு சென்றுவிடும்.
*பெயர்களை கொடுக்கும் பாவகங்களுக்கு அருகாமையில் ராகு – கேது இருக்கும்போது பெயர்களை மாற்றிக் கொடுக்கும்.
*மருத்துவமனையில் பிறப்பு ஏற்படும் பொழுது, தாயும் – சேயும் நலத்துடன் மேம்படச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடும் பொழுது, பிறந்த நேரத்தை கவனிக்காமல் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
*சிலர் குழந்தை பிறந்து அழும் நேரத்தை வைத்துக் கொள்வார்கள். சில நேரம் பிறந்து தாமதமாக அழும் குழந்தைகளும் உண்டு. குழந்தை பிறந்த சந்தோஷத்திலும் பயத்திலும் அச்சத்திலும் பிறந்த நேரம் தவறுவது உண்டு.
இவ்வுலகில் உள்ள அனைத்து கலைகளும் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. அப்படிப்பட்ட கலைகளில் ஜோதிடத்திற்குள்ளும் மாற்றங்களும் தொழில் நுட்பங்களும் வெவ்வேறு யுக்திகளும் கையாள்வது என்பது சாத்தியமே. இவ்வுலகில் மாற்றம் ஒன்றே மாறாதது. ஆகவே, மாற்றத்துடன் நுட்பமாக கற்று மேம்படுவது சிறப்பு.

 

The post ஜீவலக்னமும் சூட்சுமங்களும் appeared first on Dinakaran.

Tags : Vivagnum ,Sutsumas ,Jazadidam ,Jivalaknam ,
× RELATED கஷ்டங்கள் தீர நன்மைகள் கிடைக்க சாய்பாபா வழிபாடு..!!