×

ஜோதிட ரகசியங்கள்

திருமணப்பொருத்தம் பார்க்கும்போது கவனிக்க வேண்டிய கிரகப் பொருத்தம்

இன்றைக்கு பெரும்பாலான ஜோசியர்கள் வெறும் தசவித பொருத்தம் மட்டும் பார்க்கிறார்கள். இரண்டாம் இடத்தில் ராகு, கேது, செவ்வாய் தோஷம் என்றெல்லாம் சொல்லி பல திருமணங்களைத் தடுத்து விடுகின்றார்கள். இந்த ராகு, கேது இப்போதைக்கு ஒன்றும் செய்யாது என்று சொல்லி அனுப்பிய சில ஜாதகங்களில்கூட, வேறு இடங்களில் பார்த்த ஜோதிடர்கள், “இல்லை இல்லை”, இது கடுமையான தோஷம். யாராவது ஒருவருக்கு மரணத்தைத் தரும், பிரிவைத் தரும் என்றெல்லாம் பயமுறுத்தும் பொழுது, அவர்கள் இது ஏன் வம்பு என்று பின்வாங்கி விடுகிறார்கள். ஒரே ஒரு விஷயத்தை நான் இறுதியாகச் சொல்லுவேன். ஒரு ஜாதகத்தில், மரணமோ, பிரிவோ, இன்பமோ எதுவாக இருந்தாலும், அது அவர்கள் ஜாதகத்தின் வழியாகத்தான் நடக்கும். மற்றவர்கள் ஜாதகம், அவர்கள் ஜாதகத்தின் பலனை கட்டுப்படுத்தாது. கணவனின் ஜாதகத்தில் பிரிவு உண்டு என்பது கிரகநிலைகள் எடுத்துக் காட்டினால், மனைவியின் ஜாதகத்திலும் இதே பிரிவு நிலையை கிரகங்கள் எடுத்துக்காட்டும். அதனால்தான் அவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் ஆகி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பெண்ணின் ஜாதகம் அல்லது ஒரு ஆணின் ஜாதகத்தில் இருந்து வரக்கூடிய கணவன் அல்லது மனைவியின் ஜாதகம், எந்த அமைப்பில் இருக்கும் என்பதை கணிப்பது, எப்படி என்பதை ஒரு உதாரண ஜாதகம் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

இனி இந்த உதாரண ஜாதகத்தைப் பார்ப்போம்.

38 ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் நடந்து நல்ல முறையில் வாழ்க்கை நடத்தும் ஜாதகம். இதில் முதலில் கணவனின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு, அதில் உள்ள முக்கிய கிரகநிலைகளை கீழ்க்கண்டவாறு குறித்துகொள்ளுங்கள்.

1. லக்னமோ லக்னாதிபதியோ, கும்ப ராசியோடு உள்ள தொடர்பு. இங்கே இருவருக்கும் இருக்கிறது லக்னமே கும்ப லக்னமாக இருக்கிறது.

2. லக்னாதிபதி சனி மூன்றாம் பார்வையாக கும்ப ராசியோடு தொடர்பு கொள்கின்றார்.

3. குரு, சனி தொடர்பு இரண்டிலும் இருக்கிறது. கணவன் ஜாதகத்தில் குருவும், சனியும் இணைந்து இருக்கின்றார்கள். மனைவியின் ஜாதகத்தில் குரு ஒன்பதாம் பார்வையாக சனியைப் பார்வையிடுகின்றார்.

4. இரண்டு ஜாதகங்களிலும், சனிக்கு பன்னிரண்டாவது வீட்டில் சந்திரன் இருப்பதைக் கவனிக்க வேண்டும்.

5. கணவனின் ஜாதகத்தில் இரண்டாவது வீட்டில் கேது, மனைவியின் ஜாதகத்தில் இரண்டாவது வீட்டில் ராகு. இன்னும் துல்லியமாகச் சொல்லப் போனால், முதல் ஜாதகத்தின் ஏழாவது வீட்டை லக்னமாக வைத்துப் பார்த்தால் (அதுதானே மனைவியின் லக்னம்) அங்கும் இரண்டாம் வீட்டில் கேதுதான் வரும். இது இரண்டு ஜாதகங்களிலும் இருக்கக்கூடிய கிரக அமைப்புகள்.

6. முதல் ஜாதகத்தில், குரு லக்னாதிபதியோடு இணைந்து இருக்கின்றார். மனைவியின் ஜாதகத்தில் குரு ஏழாம் பார்வையாக லக்னத்தை பார்வையிடுகின்றார்.

7. 11வது ராசியான தனுசு ராசிக்கு இரண்டு ஜாதகங்களிலும் குருவின் தொடர்பு இருப்பதைப் பார்க்க வேண்டும். முதல் ஜாதகத்தில் குரு தனுசு ராசியிலேயே இருக்கின்றார். மனைவியின் ஜாதகத்தில், தனக்கு மிகவும் பிடித்த சிம்ம ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக தன் சொந்த ராசியான தனுசு ராசியைப் பார்வையிடுகின்றார்.

8. முதல் ஜாதகம் கணவனின் ஜாதகத்தில் சுக்கிரன் 12-ஆம் வீட்டில் இருப்பதையும், மனைவியின் ஜாதகத்தில் அதே சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருப்பதையும் கவனிக்க வேண்டும்.

9. கணவனின் ஜாதகத்தில் 7-ம் அதிபதி சூரியன் 5-ம் அதிபதி புதனும் லக்ன திரிகோணத்தில் வீற்றிருக்கிறார்கள். இரண்டாவது ஜாதகத்தில் இதே சூரியனும் புதனும் இணைந்து பஞ்சம திரிகோணத்தில் அமர்ந்திருப்பதைக் கவனிக்க வேண்டும். சூரியன் புதன் சேர்வது என்பது வேறு. அது பெரும்பாலான ஜாதகங்களில் இருக்கும். ஆனால், ஒருவர் ஜாதகத்தில் திரிகோணத்திலும் இன்னொருவர் ஜாதகத்தில் மறைவு ஸ்தானத்திலும் இருக்கக்கூடாது.

10. முதல் ஜாதகத்தில் சந்திரனுக்கு ஐந்தாம் இடத்தில் கேது இருக்கிறது. இரண்டாவது ஜாதகத்தில் சந்திரனுக்கு ஏழாம் இடத்தில் கேது இருக்கிறது.

11. முதல் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஐந்தாம் இடத்தை சனி, ஏழாம் பார்வையாக பார்க்க, இரண்டாவது ஜாதகத்தில் சனி அதே ஐந்தாம் இடத்தை மூன்றாம் பார்வையாகப் பார்க்கிறார். இவைகள் தோஷங்கள் என்று எடுத்துக் கொண்டாலும், சமதோஷங்களாகக் கருதப்பட வேண்டும்.

12. பாவ கிரகங்களான சனி, ராகு கேது போன்றவை மூன்று, ஆறு, பதினொன்றாம் இடத்தில் இருப்பது நல்லது. அந்த அமைப்பில் முதல் ஜாதகத்தில் லக்னாதிபதியாக இருந்தாலும், பாவ கிரகமான சனி பதினொன்றாம் இடத்திலும், இரண்டாவது ஜாதகத்தில் உப ஜெயஸ்தானமான மூன்றாம் இடத்திலும், சனி வீற்றிருக்கிறார். இரண்டிலும் குரு தொடர்பு சனிக்கு இருப்பதையும் கவனிக்க வேண்டும்.

13. முதல் ஜாதகத்தில் சனியின் மகர வீட்டில் செவ்வாய் இருக்க, இரண்டாவது ஜாதகத்தில் செவ்வாயின் மேஷ வீட்டில் சனி இருப்பதை கவனிக்க வேண்டும்.

14. முதல் ஜாதகத்தில், சந்திரன் நீசமாகி கெட்டுப் போயிருக்கிறார். அவருக்கு நீசபங்கம் ஏற்பட்டிருக்கிறது. இரண்டாவது ஜாதகத்தில், சந்திரன் ராகுவோடு இணைந்து கெட்டிருக்கிறார். இதுவும் ஓரளவு சமதோஷத்தை குறிக்கிறது.

15. முதல் ஜாதகத்தில், சந்திரன் இருக்கக் கூடிய ராசி விருச்சிக ராசி. அங்கே 3 கிரகங்களுடைய நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஒன்று குருவினுடைய நட்சத்திரம் (விசாகம்), இன்னொன்று சனியினுடைய நட்சத்திரம் (அனுஷம்) மூன்றாவது புதனுடைய நட்சத்திரம் (கேட்டை). இரண்டாவது ஜாதகத்தில் சந்திரன் இருக்கக்கூடிய ராசியை கவனியுங்கள். மீன ராசி அங்கே இருக்கக்கூடிய நட்சத்திரங்கள் குருவின் பூரட்டாதி, சனியின் உத்திரட்டாதி, புதனின் ரேவதி. முதல் ஜாதகத்தில் சந்திரன் கேட்டை நட்சத்திரத்திலும் இரண்டாவது மனைவியின் ஜாதகத்தில் சந்திரன் உத்திரட்டாதி நட்சத்திரத்திலும் இருப்பதை கவனித்தால், இந்த ராசி பொருத்தமும் எப்படி அமைந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

16. மனைவியின் ராசிக்கு, பாக்கியஸ்தானத்தில் கணவனின் ராசியும், கணவனின் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மனைவியின் ராசியும் அமைந்திருப்பதையும்,
கவனத்தில் கொள்ள வேண்டும்.

இரண்டு ஜாதகங்களையும் இணைக்கின்ற பொழுது, இப்படிப்பட்ட கிரகநிலைகள் மற்றும் நடப்பு தசாபுத்திகள் கோட்சாரங்கள் என எல்லா வற்றையும் கணக்கிட்டுத் தான் முடிவு சொல்ல வேண்டும். ஆனால், பெரும்பாலானோர் 10 ஜாதகங்களைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு ஐந்து நிமிடத்தில் எது சேரும், சேராது எனக் கேட்கின்ற பொழுது எல்லாம் அவசர கதியில்தான் இருக்கும்.

The post ஜோதிட ரகசியங்கள் appeared first on Dinakaran.

Tags : Josians ,Raku ,Kedu ,Marthwai Dhosham ,
× RELATED ராஜயோகம் தரும் ராகு – கேது