×

ஆனாய நாயனாரின் குழலிசை வளம்

சைவசமயத்தின் மேன்மையை உலகமக்கள் அனைவரும் உணரும் வகையில் சமயப் பணியாற்றியவர்களுள் திருத்தொண்டர்புராணம் என்று அழைக்கப்படும் பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமான் மிகச் சிறந்த இடத்தினைப் பெறுகிறார். ஊர், தொண்டை நாட்டுக் குன்றத்தூர். காலம் 12-ஆம் நூற்றாண்டு. பெரியபுராணம் சைவ உலகிற்குக் கிடைத்த தனி விளக்கு. எனவே தான் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களும் தம்முடைய சேக்கிழார் பிள்ளைத் தமிழில் ‘‘பக்திச்சுவை நனி சொட்டச்சொட்டப் பாடிய கவிவலவ’’ என்று சேக்கிழாரைப் பாராட்டுகின்றார். இந்நூல் இரண்டு காண்டங்களாக, பதின்மூன்று சருக்கங்களைக் கொண்டது.

4281 பாடல்கள் உள்ளன. தனியடியார்கள் அறுபத்துமூவரும் தொகையடியார்கள் ஒன்பது பேரும் இடம் பெற்றுள்ளனர். நாயன்மார்களைப் பற்றிக் கற்பனையாக எழுதாது அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று வரலாற்றுக் காப்பியமாகப் பெரியபுராணத்தை யாத்துள்ளார்.சமயம் என்பது தனித்து இயங்கும் ஒரு கூறு அன்று. அது ஒரு கூட்டு முயற்சியாகும். இறைவனை வணங்குவதற்கு ஒன்பது விதமான பக்தி முறைகளை முன்னோர்கள் எடுத்துரைக்கின்றனர். அதில் ஒன்று கீர்த்தனம். இறைவன் புகழை இசையால் பாடுவது ஆகும். இறைவன் ஏழிசையாய், இசைப்பயனாய் அமைந்திருப்பவன் ஆவான். வன்கொடுமை செய்பவரைக்கூட இசையின் பொருட்டு மன்னிக்கும் தன்மை உடையவன். அத்தகைய இறைவனிடம், தான் வேண்டியவற்றை இசையோடு பாடிப் பெற்றனர்.

ஆனாய நாயனார்

மழநாட்டில் மங்கலம் என்ற ஊரில் ஆயர் குலத்தில் ஆனாயர் என்பவர் கார்த்திகை மாதம் அத்தம் நட்சத்திரத்தில் ஆயர் குலத்தில் பிறந்தார். இவர் ஆயர்குலத்தை விளக்கம் செய்ய இந்த உலகத்தில் தோன்றி யவர். இவரது புல்லாங்குழலுக்கு உலகமே கட்டுப்படும் என்பது பெரியபுராணக் கருத்தாகும். இதன்மூலம் ஆனாயரின் குழலிசை வளம் இங்கு கருதத்தக்கதாகும்.

இசைமரபு

பழந்தமிழர்கள் தம் மொழியை இயல், இசை, நாடகம் என மூவகைப்படுத்தி வளர்த்தனர். எனவேதான் ‘தமிழ்’ முத்தமிழாயிற்று. இவற்றில் இசையானது சிறப்புமிக்க ஒருகலை; ஒலியின் அடிப்படையில் அமையும் கலை; காதுக்குச் சுவைபயக்கும் கலை ஆகும். ஒலிகள் இனியவை, சாதாரணமானவை, கடுமையானவை என்று
மூவகையாய்ப் பிரிக்கப்படும்.

குழலிசை, பாடலிசை போன்றவை இனிமையானவை. இசைக்குரிய ஓசைகளை ஐந்து வகையான பொருள்கள் உண்டாக்குகின்றன. அவை; தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக் (வெண்கலம்) கருவி, மிடறு (கழுத்து) என்பவையாகும். இவற்றுள் முன்னவை நான்கும் இசைக்கருவிகளாகும். குரலை ‘மிடற்றுக்கருவி’ என வழங்குவது மரபு.

துளைக்கருவிகள்

புல்லாங்குழல், இசைக்குழல் (நாதசுரம்), முகவீணை (ஏழிசைக்குழல்), ஒத்து (ஊமைக்குழல்), மகுடி, தாமரை, கொம்பு, எக்காளை, சின்னம், வங்கா, சங்கு ஆகியவையாகும். சங்கு இயற்கையால் அமைவது. இசைக்குழல் என்பது ஏழிசைக்குழல், ஒத்திசைக்குழல் (ஒத்து) என இருவகைப்படும்.

ஆனாய நாயனாரின் குழற்கருவி

ஆனாய நாயனாரின் குழற்கருவியானது பழைமையான இசைக்கலை வேதநூல்களில் சொன்ன மரபின்படி, எழுந்து வளர்ந்துள்ள மூங்கிலின், நுனியில் நான்கு பங்கிலும், அடியில் இரண்டு பங்கிலும், அரிந்து இடைப்பட்ட பகுதியை எடுத்து சுரங்கள் எழும் தானங்களின் வந்த துளைகளின் வரிசையை ஏற்படுத்தி முதலில் காற்று உண்டாகும் துளையையும், கேடில்லாத சிறப்பை
யுடைய இடைவெளியில் ஒவ்வோர் அங்குல அளவிலே துளைகள் செய்த கருவியாக அமைந்திருந்தது. இதனை,

‘‘முந்தைமறை நூன்மரபின் மொழிந்தமுறை
எழுந்தவேய்
அந்தமுதல் நாலிரண்டில் அரிந்துளரம்
புறுதானம்
வந்ததுளை நிரையாக்கி வாயுமுதல்
வழங்குதுளை
அந்தமில்சீர் இடையீட்டின் அங்குலிஎண்
களின் அமைத்து’’
(பெரியபுராணம், பா.எண்.938) என்று
பாடுகிறார் சேக்கிழார்.

இசை வகை

‘இசை’ என்ற சொல் ‘இசைவிப்பது’, ‘வசப்படுத்துவது’ என்னும் பொருளில் கையாளப்பட்டுள்ளது. இசை சரிகமபதனி என ஏழுவகையாகக் கூறப்படுகிறது. ஏழிசையும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று வழங்கப்படும். இசை வடமொழியில் ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற வடமொழிப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இசை, ஏழிசை என்பது மரபாகும். இவை இன்று சப்தஸ்வரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

ஆனாயரின் குழலிசைத் தொடக்கம்

சிவபெருமானின் திருவடிகளையே அல்லாமல் வேறொன்றையும் போற்றாத ஆனாய நாயனார் ஆனிரையை மேய்ப்பதற்கு முல்லை நிலத்திற்கு வருகிறார். அங்கு கொன்றைமரம் பூத்திருப்பதைக் காண்கிறார், அக்கொன்றை மரம் சிவபெருமானாகத் தோற்றமளிக்கின்றது, உடனே உள்ளம் உருகி வேய்ங்குழல் இசைக்க ஆரம்பிக்கிறார். சேக்கிழார் கூறும்பொழுது ஏழு விரல் இடையீடு உண்டாகத் துளை செய்யப்பட்ட இனிய இசைக் கருவியை எடுத்து துளைகளில் முரலுதல், எழுதல் நிற்றல் என்பன செய்து, தூய பெரிய துளையில் அவர் உதட்டை வைத்து ஊத ஆரம்பிக்கிறார் என்கிறார். இதனை,

‘‘ஏழுவிர லிடையிட்ட இன்னிசைவங்கியம்
எடுத்துத்
வாழியநாள் தோன்றலார் மணி அதரம்
வைத்தூத’’
(ஆனாய நாயனார் புராணம், பா. 947)
என்கிறார்.

ஓசை அமைப்புஅடுத்ததாகத் தனது குழலில் ஆனாயனார் முத்திரைத்துளை முதலாக முறையான தானங்களை ஆராய்ந்து, இசை நூல்களில் விதித்த அளவிலே அமைத்திட்ட மற்ற துளைகளை ஆராய்ச்சி செய்வதான வக்கரனையின் வழிபட்ட விரல்களை முறைப்படி செலுத்தி இசை பூத்திருப்பதைக் கண்ட பின்னர், சட்சம் முதலாக நிடாதம் வரைக்கும் வரிசையாக அத்தன்மையாய் எச்சும் தக்கும் ஆகிய ஓசைகளில் அமைத்து குழல் இசைக்கத் தயார் ஆனார். இதனை,

‘‘முத்திரையே முதலனைத்தும்
முறைத்தானஞ் சோதித்து
வைத்தவளை ஆராய்ச்சி வக்கரனை
வழிபோக்கி
ஒத்தநிலை உணர்ந்ததற்பின் ஒன்றுமுதல்
படிமுறையாய்
அத்தகைமை ஆரோசை அமரோசை களின்
அமைத்தார்’’
(ஆனாய நாயனார் புராணம், பா.949)

என்ற பாடல் வழி அறியலாம். இங்கு ஏற்றிப்பாடும் இசை ஆரோசையாகும் இறக்கிப்பாடும் இசை அமரோசையாகும். இந்த அடிப்படை இங்கு சுட்டப்பட்டுள்ளதைக் காணலாம்.
ஆனாய நாயனார் பண் அமைத்த விதம்ஆனாயனார் ஒலியை ஒழுங்குபடுத்திப்பின் பண் தொடங்கினார். ‘பண்’ என்பது ‘இசை’ எனப் பொருள்படும் இசைகளிலிருந்து பிறப்பன திறங்கள். பண்களும் திறங்களும் பல கிளைகளாய் இயங்கும் வகையில் எண்ணிறந்த இசை வகைகள் கண்டறியப்பட்டன.

முதலில் மாறிவரும் சுரங்களையுடைய குறிஞ்சிப் பண்ணின் பின் முல்லைப் பண்ணை ஆக்கிப் பின் பாலை யாழுக்குப் பொருந்திய தாரமும், உழையும் கிழமை கொள்ளும்படி இடும் தானங்களிலே இளியைக் குரலாக உடைய கோிப்பாலையில் நிறுத்திச் சிவபெருமானின் திருவைந்தெழுத்தை இசை பெருகுமாறு வாசித்தார். (இளி-பஞ்சமம்-நெற்றியிலிருந்து பிறப்பது) இதனை,

‘‘மாறுமுதற் பண்ணின்பின் வளர்முல்லைப் பண்ணாக்கி
ஏறியதா ரமும்உழையும் கிழமைகொள
ஆறுலவுஞ் சடைமுடியார் அஞ்செழுத்தின்
இசைபெருகல்
கூறியபட் டைக்குரலாங் கொடிப்பாலை
யினில் நிறுத்தி’’
என்ற வரிகள் மூலம் அறியலாம்.

இசைப்பகுத்த விதம்

இசையின் கூறுகள் நான்கு ஆகும். அதாவது தாரம் தொடங்கி விளரி வரையுள்ள ஏழு வகைப் பண்கள் நான்கு வகையில் பிறக்கும். அவை இடம், செய்யுள், குணம், காலம் என்பனவாகும். இந்த நான்கிலும் கோடிப்பாலைக்கு அமைந்த திறத்தை எடுத்துச் சுரம் எழுப்பும் ஏழுதுளைகளில் விரல்களை மூடுவதும் எடுப்பதுமாகிய செயல்களால் இசையின் ஒலி அழகாக வெளிப்பட்டு சிவபெருமானின் திருவைந்தெழுத்தும் வெளிப்பட ஐந்து துறைகளின் ஏற்றமுறையை இசைத்தார்.

‘‘ஆயஇசைப் புகல்நான்கின் அமைந்தபுகல்
வகையெடுத்து
மேய்துளை பற்றுவன விடுப்பனவாம் விரல்
நிரையிற்
சேயவொளி யுடையலையத் திருவாளன்
எழுத்தஞ்சுள்
தூயஇசைக் கிளைகொள்ளுள் துறையஞ்
சின் முறை விளைத்தார்”
(ஆனாய நாயனார் புராணம், ப.951)

என்ற பாடல் மூலம் அறியலாம்.

இங்கு இசைநுணுக்கம் காட்டப்பட்டுள்ளது. பெரியபுராணம் சிறந்த இசை நுணுக்கத்தை வெளிப்படுத்தும் நூல் என்பதற்கு இப்பாடல் சான்றாக அமைகின்றது. இப்பாடலில் ஏழு வகைப் பாலைப்பண்களில் கோடிப்பாலை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கோடிப்பாலையைச் சிலப்பதிகாரம் சுட்டுகின்றது. அதாவது கோடிப்பாலை என்பது தாரம் குரலாக அமைவது ஆகும். (மூக்கிலிருந்து எழும் ஒலி குரலாக அமைவது கோடிப்பாலை என்கின்றனர்) இதனை,

‘‘முன்னதன் வனகய முறைமையின் திரிந்து
இளிமுதலாகிய ஏர் கிழமையும்
கோடி, விளரி, மேற்செம்பாலை என’’
(சிலம்பு. பாடல் வரிகள்.86088)
என்ற பாடல் வரிகள் உணர்த்துகின்றன.

பண்ணை ஒன்றுபட்டுக் கூடி இயக்கினார் ஆனாயனார் மேற்கண்ட பண் அமைத்து இசையின் கூறுகளை ஆராய்ந்து பின்னர் அவற்றை ஒன்றுபட்டு கூடி மந்திரத்தும், மத்திமத்தும், தாரத்தும் (மெலிவு, சமன், வலிவு என்ற மூன்று வகையான சுருதியிலும்) சுரதானத்துக்குரிய துளைகளை முறையே மென்மையாகவும் சமமாகவும் வன்மையாகவும் மூடி இடையிட்ட துளைகளை உரிய அளவைப் பெறுமாறு அசைத்தும் இயக்கியும், சிவந்த கனி போன்ற உதடும் குழலின் துளைவாயும் ஒன்றுபட்டுக் கூடி இயங்க இசைத்தார். இதனை,

‘‘மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன்
முறையால்
தந்திரிகள் மெலிவித்தும் சமங்கொண்டு
வலிவித்தும்
அந்தரத்து விரற்றொழில்கள் அளவுபெற
அசைத்தியக்கிச்
சுந்தரச்செங் கனிவாயும் துளைவாயும்
தொடக்குன்ன’’
(ஆனாய நாயனார் புராணம், பா.952)

என்ற பாடல் வழி அறிய முடியும். சிலப் பதிகாரம், குழலாசிரியன் என்பவன் சித்திரப்புணர்பாகிய வல்லொற்று வந்த வழி மெல்லொற்றுப் போல பண்ணீர்மை அமைத்தும் வஞ்சனை புணர்ப்பாகிய இசைகொள்ளா எழுத்துக்களின் மேல் வல்லொற்று வந்தவழி மெல்லொற்றுப்போல நெகிழ்த்து அமைக்க வல்லவனாய்த் திகழவேண்டும். மேலும் பல்வேறு இசைக்கருவிகளின் இசையை உணர்ந்தவனாக இருத்தல் வேண்டும் என்று இலக்கணம் கூறுகிறது. மேலும் பாடலினிடத்துள்ள எழுத்துக்களைத் தெளிவாய்ப் பிறருக்குப் புலப்படும்படி எழுத்தெழுத்தாக இயக்கி குறைவுபடாமல் இயக்கும் திறமையுடையவனாகக் குழலோன் இருக்க வேண்டுமென இலக்கணம் கூறுகிறது.
இதனை,

‘‘சொல்லிய இயல்பினில் சித்திர வஞ்சனை
புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்
வர்த்தனை நான்கும் மயல் அறப் பெய்து
ஆங்கு’’ (சிலம்பு.56-58)

என்றடிகள் மூலம் அறியலாம். இந்த இலக்கணத்திற்கு ஏற்ற வண்ணம் ஆனாயனார் குழலினை இயக்கி எல்லாப் புறத்திலும் இசையைப் பரவச்செய்தார். இசைநூல்
களில் அளவுபடுத்திய பெருவண்ணம், இடைவண்ணம், வனப்புவண்ணம் என்ற இசை வகைகள் எல்லாம் மதுரத்தையுடைய ஒலியில் அமைந்த தாளமும் இசையும் தூக்கும் நடை முதலிய கதிகளோடு பண் பொருத்தமுற எழும் ஓசையை எல்லாப் புறத்திலும் பரவச் செய்தார். இதனை,

‘‘எண்ணியநூற் பெருவண்ணம் இடை
வண்ணம் வனப்பென்னும்
வண்ணஇசை வகையெல்லாம் மாதுரிய
நாதத்தில்
நண்ணியபா ணியும்இயலும் தூக்குநடை
முதற்கதியில்
பண்ணமைய எழும்ஓசை எம்மருங்கும்
பரப்பினர்’’
என்கிறார் சேக்கிழார். இங்கு ஆனாய னாரின் வேய்ங்குழலிசை நுட்பத்தால் தமிழர்கள் வளர்த்த குழலிசை நுட்பத்தை அறியலாம்.

ஆனாயனாரின் குழலிசையின் ஆற்றல்

இறைவனின் திருநாமமான திருவைந்தெழுந்தினை உள்ளுறையாய்க் கொண்டு வாசித்த இசையில் எல்லா உயிரினங்களும் மயங்கின. பசுக்கூட்டங்கள் அசைபோட மறந்து நின்றன. கன்றுகள் பால் குடித்த நுரையுடன் வந்து நின்றன. மயில் கூட்டமும் அசைவில்லாது வந்துகூடின. பறவைகள் விலங்குகள் அனைத்தும் அசைவற்று வந்து நின்றன. ஆயர்கள் தம் செயலை விட்டுவிட்டு அங்குவந்து கூடினர். நாகர் உலகத்தில் உள்ளவர்கள், வித்தியாதரர்கள், சாரணர்கள், கின்னரர்கள், தேவர்கள் முதலியோர் தாங்கள் வாழும்’ வானிலைகளை விட்டு இசைக்கு வயப்பட்டு விமானங்களில் வந்து சேர்ந்தனர். பகை மறந்த பாம்பு மயிலுடனும், சிங்கம் யானையுடனும், புலி மானுடனும் சேர்ந்து தன்னை மறந்து இசையைக் கேட்டன என்கிறார் சேக்கிழார். இதனை,

‘‘மலிவாய்வெள் ளெயிற்றரவம் மயில்மீது
மருண்டு விழும்
சலியாத நிலைஅரியும் தடங்கரியும் உடன்
சாரும்’’
ஆனாய நாயனார் புராணம், 960-961)

என்ற வரிகள் உணர்த்துகிறது. இவ்வாறு இசைக்கப்பட்ட உயர்ந்த இசை சிவபெருமானின் காதில் பெருகியது. வான் வீதி வழியே சிவபெருமான் வந்து சேர்ந்தார். ‘‘இங்கு நின்ற நிலைமையிலேயே எம்மிடத்தில் நீ வருவாயாக’’ என்று அருளிச்செய்தார். இறைவனின் திருமருங்கில் சேர்ந்தார்.

நிறைவாக

இசையின்பத்தினால் உணர்வு ஒன்றுபட்டுப் பகைமை மறைந்துவிடும் என்பதை ஆனாய நாயனார் புராணம் இறைச்சிப் பொருள்களால் உணர்த்துகின்றன. இசையானது உள்ளத்து ஆழமான உணர்ச்சிகளை வெளிக்காட்டக்கூடிய சிறந்த மக்கள் தொடர்புச் சாதனமாக விளங்குவதாகும். அப்படிப்பட்ட இசையாலே உருவாக்கப்பட்ட ஆனாய நாயனார் புராணம் குழலிசை பற்றி மிக விரிவாகக் கூறுகிறது.

குழலிசையின் நுட்பத்தினையும், மேன்மையையும், இசை வகைகளையும், வாசிக்கும் முறைகளையும், குழலிசையின் இனிமையையும் தெளிவாக எடுத்து இயம்புகிறது. தமிழர்கள் கண்டறிந்த பல்வேறு இசைவகைகளில் குழல் மற்றும் அதன் இசை குறித்து விளக்கும் அரும் காப்பியமாக ஆனாயரின் புராணத்தை சேக்கிழார் வடித்துள்ளார்.
இப்புராணம் தமிழர்களின் இசைக்கலைக்கு ஒரு மிகப் பெரிய சான்று என்பது திண்ணமே.

முனைவர். இரா. கீதா

The post ஆனாய நாயனாரின் குழலிசை வளம் appeared first on Dinakaran.

Tags : Anaya Nayanar ,Shekhazhar Peruman ,Thontai Nadu Kunratur ,Anaya ,
× RELATED ஆனாய நாயனார்