×

இறைத்தேடலில் நிதானமே பிரதானம்!!

ஒரு மாட்டுக் கொட்டகையில் தன்னுடைய கைக் கடிகாரத்தை தொலைத்தார் விவசாயி. தன்னுடைய நெருங்கிய நண்பர் பரிசாக கொடுத்தது அது. விவசாயி கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. தேடுதல் முனைப்புடன் தன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை அழைத்து, கைக் கடிகாரத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு பரிசு அளிப்பதாக வாக்களித்தார். எல்லா சிறுவர்களும் ஆர்வமாக தேடினர். வெகு நேரமாகிவிட்டது. எல்லா இடங்களிலும் தேடியும் கடிகாரம் கண்டுபிடிக்கப்படவில்லை. மாலை நேரமானதால் குழந்தைகள் தங்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.சோர்வடைந்த விவசாயி, கவலையுடன் அமர்ந்துவிட்டார். ஒரு சிறுவன் மட்டும் அவரிடம் வந்து ‘‘ஐயா எனக்கு ஒரு நிமிடம் வாய்ப்பு கொடுங்கள், என்னால் கண்டுபிடித்துவிட முடியும்’’ என்று நம்பிக்கையுடன் சொன்னான். விவசாயியும் நம்பிக்கையின்றி சிறுவனுக்காக சம்மதித்தார். ஒரு நிமிடத்தில் சிறுவன் கைக் கடிகாரத்தை கொண்டு வந்து விவசாயிடம் கொடுத்தான். ஆச்சரியப்பட்ட விவசாயி ‘‘எப்படி உன்னால் முடிந்தது?’’ என்று கேட்டார்.

‘‘ஐயா நாங்கள் கூட்டமாக தேடும்போது, கடிகாரம் எங்கு உள்ளது என கண்டுபிடிப்பது கடினம். இப்போது சிறுவர்கள் யாரும் இல்லை. அமைதியான சூழலில் கண்களை மூடி சில நொடிகள் கூர்மையாக கவனித்தேன். அப்பொழுது கடிகாரத்தின் டிக்.. டிக்.. ஓசை எனக்கு கேட்டது. ஆகவே, என்னால் எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது’’ என்றான். சிறுவனுடைய அறிவுத்திறனை கண்டு விவசாயி பரிசளித்தார். இறைமக்களே, இறைவேதத்தின் தேவன் இன்றும் நம்முடன் பேசுகிறார். அவர் சத்தத்தை கேட்க நாம் தனித்து வந்ததுண்டா? பலர் கூட்டுப் பிரார்த்தனைகளில் மட்டும் திருப்தியடைகின்றனர். கூட்டுப் பிரார்த்தனை எந்த அளவிற்கு அவசியமானதோ, அதே அளவிற்கு தனி ஜெபமும் அவசியமாகும். நாம் தனித்து தேவனுடன் நேரம் செலவிடுவதை பரிசுத்த வேதாகமம் வலியுறுத்துகின்றது.

பதறுகிற எவரும் சரியான முடிவை எடுக்க முடியாது. ஆகவே, நமது சூழ்நிலைகளை மறந்து தேவனது சந்நதியில் தனித்து வந்து, நிதானமாக தியானம் செய்தால், தேவன் நம்முடன் பேசுவதை உணர முடியும். ‘‘என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் (தேவனை) கண்டடைவார்கள்’’ (நீதி.8:17) என்றும், ‘‘நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்;உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்’’ (சங்.32:8) என்றும் இறைவேதத்தின் இறைவன் வாக்களித்துள்ளார். ஆகவே, இறைத்தேடலில்
நிதானமே பிரதானம்!!
– அருள்முனைவர்.
பெவிஸ்டன்.

The post இறைத்தேடலில் நிதானமே பிரதானம்!! appeared first on Dinakaran.

Tags : God ,
× RELATED மரமும் முருகனும்