×

ஏன்? எதற்கு? எப்படி?

?கரிநாள் என்பதன் அர்த்தம் என்ன? கரிநாளில் நற்காரியங்களைச் செய்யலாமா?
– ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு.

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள்” என்பதே. அதாவது அன்றைய தேதியில், சூரிய கதிர்வீச்சின் தாக்கம், பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய
சராசரியைவிட அதிகமாக இருக்கும். நமது முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக ஆராய்ந்து முடிவு செய்து வைத்திருக்கும் நாட்கள் இவை. இந்நாட்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடாதவை. ஒவ்வொரு வருடமும் அதே தேதியில்தான் வரும். தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் இந்நாட்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். உதாரணமாக, தைமாதம் 1,2,3 ஆகிய நாட்கள் கரிநாட்கள். மாறாக, இது ‘அஷ்டமி, நவமி’ போன்றோ அல்லது ‘பரணி, கிருத்திகை’ போன்றோ திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல. சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும்பொழுது, நமது உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும், ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலாக அதிகளவில் தூண்டப்படுகின்றன. இதனால், எளிதில் உணர்ச்சிவசப்படுதல், டென்ஷன் ஆகுதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்ற நிகழ்வுகளுக்கு அதிக வாய்ப்பு உண்டாகும். இது போன்ற காரணங்களால் கரிநாட்களில் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்த்திருக்கிறார்கள். இது வானவியல் ரீதியாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாட்களேயன்றி, ஆன்மிக ரீதியாக அப்படியே கடைபிடித்து வரும் விஷயங்களுக்குள் அடங்காது. பிரதி வருட கரிநாட்களின் விவரம்: சித்திரை: 6,15, வைகாசி: 7,16,17, ஆனி: 1,6, ஆடி: 2,10,20, ஆவணி: 2,9,28, புரட்டாசி: 16,29, ஐப்பசி: 6,20, கார்த்திகை: 1,10,17, மார்கழி: 6,9,11, தை: 1,2,3,11,17, மாசி: 15,16,17, பங்குனி: 6,15,19. கரிநாட்களில் சுபகாரியங்ளைச் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. இந்த கரிநாள் என்பது, தட்பவெப்பநிலை சம்பந்தப்பட்டது என்பதால், தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள ஒரு சில பகுதிகள் தவிர, மற்ற இடங்களில்
பின்பற்றப்படுவதில்லை.

?பானைகளை வாங்கி அதனை வீட்டில் வைத்து உபயோகம் செய்யக் கூடாது என்று மூடநம்பிக்கை நிலவுகிறதே சரியா?
– விஜயதரன், கோவை.

இது முற்றிலும் தவறான கருத்து. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் பொங்கல் வைப்பதற்காக புதிய பானைகளை வாங்க வேண்டும். பொங்கல் வைத்து வழிபாடு செய்து முடித்ததும், பானையை வீட்டில் வைத்து உபயோகிக்கத் தான் வேண்டும். வருடந்தோறும் புதுப்பானைகளை வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாட்டினையே நம் முன்னோர்கள் செய்து வைத்தார்கள். தீபாவளி நேரத்தில் கேதார கௌரி விரத நோன்பிற்காக மண்ணால் ஆன சட்டியையும், தை மாதத்தில் பானையையும் வாங்கி வைத்து உபயோகிப்பது என்பது நம் முன்னோர்கள் காலம் காலமாக பின்பற்றி வரும் பழக்கம் ஆகும். அதிலும், உங்கள் ஊரான கோவையில் கிடைக்கும் மண்பாண்டங்கள் மிகவும் தரமுள்ளதாக இருக்கும். அடியேன் கோவைக்கு வரும்போதெல்லாம் புதுப்புது மண்பாண்டங்களை வாங்கி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். பானைகளை வாங்கி வீட்டில் வைத்து உபயோகம் செய்யக் கூடாது என்ற கருத்து முற்றிலும் மூடநம்பிக்கையே. இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

?வீட்டில் உள்ள படுக்கை அறையில் தெய்வங்களின் படங்கள் இருக்கலாமா?
– செங்கமலம், விருதுநகர்.

படுக்கை அறையில் தெய்வங்களின் படங்கள் இருக்கக் கூடாது. விநாயகர் படம் வீட்டு வாயிற்படியிலும், மகாலட்சுமி, பெருமாள் போன்ற தெய்வங்களின் படங்கள் வரவேற்பறையிலும், அன்னபூரணி தேவியின் படம் சமையலறையிலும் மற்ற தெய்வங்களின் படங்கள் வீட்டுப் பூஜையறையிலும் இருப்பது நல்லது.

?புதுவீடு கட்டி நிலை வைக்கும்போது, படியில் கறுப்பு கிரானைட் கல் வைக்கிறார்களே இது சரியா?
– எம்.மனோகரன், ராமநாதபுரம்.

குடியிருப்பதற்காக கட்டப்படும் வீட்டில் நிலை வாயிற்படி என்பது மரத்தால் ஆனதாக இருக்க வேண்டும். கீழ்படி என்பதும் மரத்தாலேயே செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்குக் கீழே கறுப்பு கிரானைட் கல் வைப்பது என்பது சரியில்லை. கீழ்படி என்பது பூச்சிகளால் அரிக்கப்படாமல் இருக்கும் என்பதற்காக இப்படி செய்கின்ற பழக்கம் சமீப காலத்தில் தோன்றி உள்ளது. இதனைத் தவிர்ப்பது நல்லது. ஆலயத்தில் பின்பற்றப்படும் வாஸ்து சாஸ்திரத்தை அப்படியே குடியிருக்கும் வீட்டிற்கும் பொருத்திப் பார்க்கக்கூடாது.

?எங்கள் வீட்டிற்கு நேர் எதிர்புறத்தில் ஒரு விநாயகர் கோயில் உள்ளது. இதனால் ஏதேனும் ஆபத்துகள் ஏற்படுமா?
– சௌமியா, திருவானைக்காவல்.

நிச்சயமாக ஏற்படாது. விநாயகப் பெருமானின் பார்வை பட்டால், வரும் ஆபத்துகளும் நீங்கிவிடும்தானே. பிறகு ஏன் இந்த சந்தேகம்? இறைவன் இல்லாத இடம் ஏது? ஆண்டவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்ற கூற்றினை நம்பினால், இதுபோன்ற சந்தேகங்கள் மனதில் எழாது.

The post ஏன்? எதற்கு? எப்படி? appeared first on Dinakaran.

Tags : Kariday ,J. Manikandan ,New Year ,
× RELATED உண்டியல் காணிக்கை எண்ணும் பணி