- ஆப்கானிஸ்தான்
- ICC T20 உலக கோப்பை
- உகாண்டா
- கயானா
- குழு
- பிராவிடன்ஸ் மைதானம்
- கயானா, மேற்கு இந்தீஸ்
- தின மலர்
கயானா: ஐசிசி டி20 உலக கோப்பை தொடரின் சி பிரிவு லீக் ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் 125 ரன் வித்தியாசத்தில் உகாண்டா அணியை மிக எளிதாக வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீசின் கயானா, புராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற உகாண்டா பந்துவீச்சை தேர்வு செய்தது. ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஸத்ரன் இணைந்து ஆப்கான் இன்னிங்சை தொடங்கினர். அபாரமாக விளையாடிய இருவரும் அரை சதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 154 ரன் சேர்த்தது.
இப்ராகிம் 70 ரன் (46 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), குர்பாஸ் 76 ரன் (45 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். அதன் பிறகு வந்தவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற, ஆப்கான் 20 ஓவரில் 5விக்கெட் இழப்புக்கு 183 ரன் குவித்தது. முகமது நபி 14 ரன், கேப்டன் ரஷீத் கான் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். உகாண்டா பந்துவீச்சில் காஸ்மஸ் கீவுடா, பிரையன் மசாபா தலா 2 விக்கெட், அல்பேஷ் ராம்ஜனி 1 விக்கெட் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து, 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அறிமுக அணியான உகாண்டா உற்சாகமாகக் களமிறங்கியது. முதல் முறையாக உலக கோப்பையில் விளையாடும் உகாண்டா வீரர்கள், ஆப்கான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுத்தனர். ஆனாலும் 16 ஓவர் வரை தாக்குப்பிடித்த உகாண்டா வெறும் 58 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக ராபின்சன் ஒபுயா 14 ரன் (25 பந்து, 1 சிக்சர்), ரியாசத் அலி ஷா 11 ரன் (34 பந்து) எடுத்தனர். ஆப்கான் தரப்பில் ஃபசல்லாக் ஃபரூகி 4 ஓவரில் 9 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் அள்ளினார். நவீன் உல் ஹக், ரஷீத் கான் தலா 2 விக்கெட், முஜீப் உர் ரகுமான் 1 விக்கெட் எடுத்தனர். சிறந்த வீரராக ஃபசல்லாக் தேர்வானார். ஆப்கான் 125 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.
The post ஐசிசி டி20 உலக கோப்பை உகாண்டாவை உருட்டி விளையாடிய ஆப்கான் appeared first on Dinakaran.