×

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம் எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி


நாகரிக வளர்ச்சி காரணமாக நாடு பல்வேறு விஷயங்களில் மிக வேகமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வரை ஸ்மார்ட் போன் இல்லாதபோது சமூக வலைதளத்தின் இவ்வளவு பெரிய வளர்ச்சியை நாம் கண்டது கிடையாது‌. எதுவாக இருந்தாலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவோம். தொலைபேசி இல்லாத இடங்களில் தந்தி எனப்படும் தபால் சேவையை பயன்படுத்தி வந்தோம்.

இதனால் உறவுகளிடையே அன்பு பரிமாற நிறைய நேரம் கிடைத்தது. அந்த நேரத்தில் சிறுவர்கள் விளையாடினார்கள். பொதுமக்கள் குடும்பங்களை கவனித்துக் கொண்டார்கள். தேவையில்லாத பிரச்னைகள் பெரியதாக வரவில்லை. நாகரிக வளர்ச்சியின் காரணமாக செல்போன்களின் பயன்பாடுகள் அதிகரிக்க தொடங்கியவுடன் அடுத்தடுத்த நிலைகளை நோக்கி மக்கள் நகரத் தொடங்கினர்.
தற்போது பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் நடக்கும் சம்பவங்களைக் கூட அடுத்த நொடியே தெரிந்து கொள்ளும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

அறிவியல் வளர்ச்சி எந்த அளவுக்கு ஆக்கப்பூர்வமாக பயன்படுகிறதோ, அதே அளவு தீய செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டு, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. ஒரு விஷயத்தை எதற்காக பயன்படுத்த வேண்டும், எவ்வளவு பயன்படுத்த வேண்டும், எதற்கு பயன்படுத்த கூடாது என்பதை தெரிந்து வைத்துக் கொண்டால் அறிவியல் கண்டுபிடிப்புகளை நாம் நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெறலாம்.

ஆனால் எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் அதை தவறான கண்ணோட்டத்தோடு அல்லது அதில் உள்ள நெகட்டிவ் எனப்படும் எதிர்மறையான விஷயங்களை அலசி ஆராயும் பொதுமக்கள், அதில் அதிக கவனம் செலுத்த தொடங்கி விடுகின்றனர். அந்த வகையில் தற்போது எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதனை அலசி ஆராய்கிறேன் என்ற பெயரில் பல யூடியூப் சேனல்கள் செயல்பட தொடங்கிவிட்டன. எந்த ஒரு அங்கீகாரமும் இல்லாமல் இவர்கள் எல்லை மீறி அநாகரிகமாக நடந்து கொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் சமூகத்தில் கலாச்சார சீரழிவு ஏற்பட்டு பல மரணங்களும் ஏற்பட தொடங்கியுள்ளன.

யூடியூப் சேனல்களுக்கு என எந்த ஒரு அங்கீகாரமும் கிடையாது. அவர்கள் தங்களுக்கு என்று ஒரு லாகின் ஐடியை வைத்துக்கொண்டு, ஒரு சேனலை தொடங்குகின்றனர். சிலர் இதற்காக எம்எஸ்எம்இ சான்றிதழை 500 ரூபாய் கொடுத்து பெற்றுக் கொள்கின்றனர். அதன் பிறகு தொடர்ந்து அனைத்து விதமான செய்திகளையும் போட்டு தங்களது யூடியூப் சேனலை பிரபலப்படுத்த எந்தெந்த குறுக்கு வழிகளை கையாள முடியுமோ, அதனை கையாளுகின்றனர்.

மேலும் சிலர் தங்கள் நடத்தும் கம்பெனி பெயரில் யூடியூப் சேனலை தொடங்குகின்றனர். அதன் பிறகு அதில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் பேட்டிகள் என அனைத்தையும் போட்டு தங்களை பிரபலப்படுத்திக்கொண்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்கின்றனர். இன்னும் சிலர் மாத பத்திரிகை நடத்துகிறேன் எனக்கூறி ஆர்.என்.ஐ வாங்கிக்கொண்டு அந்த பத்திரிகையின் பெயரில் யூடியூப் சேனலை நடத்துகின்றனர்.

இவ்வாறு எந்த ஒரு வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றாமல் தங்கள் இஷ்டத்திற்கு யூடியூப் சேனல்களை தொடங்கி தாங்கள் என்ன நினைக்கின்றார்களோ அதனை குப்பைகளை கொட்டுவது போல பொதுமக்கள் மத்தியில் கொட்டுகின்றனர். இன்னும் சிலர் யூடியூப் சேனல் பக்கத்திலேயே டபுள் எக்ஸ், ட்ரிபிள் எக்ஸ் என போட்டுக்கொண்டு ஆபாச பேச்சுகள், ஆபாச வீடியோக்கள் போன்றவற்றை பதிவிடுகின்றனர்.

பொதுமக்களிடம் குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் எந்தெந்த கேள்விகளைக் கேட்கக் கூடாதோ அந்தந்த கேள்விகளை கேட்டு அவர்களிடம் இருந்து பதிலை பெற்றுக்கொண்டு அதனை ஒளிபரப்புகின்றனர். இதில் பல பெண்களும் அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றனர். பின்னர் குறிப்பிட்ட அந்த வீடியோ வைரலானதும் அந்த பெண்கள் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.
ஏற்கனவே இதுகுறித்து பல சர்ச்சைகள் எழுந்தன.

குறிப்பிட்ட ஒரு யூடியூப் சேனலில், பெண்களிடம் சென்று நீங்கள் ‘வெர்ஜினா’ என மிகவும் கொச்சைத்தனமாக பேசிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு சிறிது காலம் யூடியூபர்கள் அமைதி காத்தாலும், மீண்டும் தற்போது யூடியூபர்களின் அலப்பறை அதிகரித்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஷ்-ரம்யா தம்பதியரின் குழந்தை மாடியில் இருந்து கீழே விழும் நிலையில் இருந்தபோது அங்கு இருந்தவர்கள் அந்த குழந்தையை காப்பாற்றினார்கள்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை தங்களது விளம்பர யுக்திக்கு பயன்படுத்திக்கொண்ட பல தனியார் யூடியூப் சேனல்கள், அந்தத் தாயின் செயல் குறித்து பலரிடம் பேட்டி எடுத்து மிகவும் கொச்சையாக பதிவு செய்தனர். அந்த நேரத்தில் குழந்தையின் தாய் எங்கே சென்றிருந்தார் என்ற ரீதியில் பலரும் அவரை வறுத்தெடுத்தனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான குழந்தையின் தாய் ரம்யா சென்னையில் இருந்து அவரது கணவர் ஊரான கோவை காரமடைக்குச் சென்றார்.

அவரை அவரது கணவர் கொஞ்சம் கொஞ்சமாக தேற்றி வந்த போதும், சமூக வலைதளங்களில் அவருக்காக போடப்பட்ட கமெண்ட்டுகள் அந்த பெண்ணை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இதனால் ரம்யா தற்கொலை செய்து கொண்டார். தற்போது தாயில்லாமல் அந்தக் குழந்தை மற்றும் அவரது கணவர் தவித்து வருகின்றனர். பெண்ணின் செயல்பாடுகளை எண்ணி நகையாடிய யூடியூப் சேனல்கள் தற்போது வாயை மூடிக் கொண்டன. விமர்சனத்திற்கும் ஒரு எல்லை உண்டு என்பதை மறந்து தங்கள் சேனல் பிரபலமடைய வேண்டும்,

அதிக பேர் தங்கள் சேனலை பார்க்க வேண்டும் என்ற ரீதியில் கேவலமான பல விஷயங்களை தற்போது யூடியூப் சேனல்கள் வெளியிட்டு வருகின்றன. ரம்யாவின் மரணச் செய்தி அடங்குவதற்குள் யூடியூப் சேனலால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரியா (23, பெயர் மாற்றப்பட்டுள்ளது) சிறுவயதிலேயே தாய், தந்தை காலமானதால் இவர் தனது அண்ணன் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக புரசைவாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி பட்டப் படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பிரியா கோயம்பேட்டில் உள்ள தனியார் மாலுக்கு தனது தோழிகளுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த தனியார் யூடியூப் சேனலைச் சேர்ந்த பெண் தொகுப்பாளரான ஸ்வேதா என்ற பெண், பிரியாவிடம் காதல் தொடர்பான பேட்டி கேட்டுள்ளார். அதற்கு பிரியா மறுப்பு தெரிவித்த நிலையில், தொகுப்பாளர் ஸ்வேதா காதல் தொடர்பாக ஜாலியாக பேட்டி அளிக்கும்படி வற்புறுத்தி உள்ளார்.

அது மட்டுமின்றி உங்களது அனுமதியின்றி பேட்டி ஒளிபரப்பப்பட மாட்டாது எனக் கூறியுள்ளார். இதனால் பிரியா பேட்டி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். இந்நிலையில் அந்த பேட்டி திடீரென 2 நாட்களுக்கு முன், அந்த யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை பார்த்த ப்ரியாவின் உறவினர்கள், நண்பர்கள் பலர் பிரியாவை தொடர்பு கொண்டு பொதுவெளியில் இப்படி ஆபாசமாக பேசலாமா எனக் கேட்டு கண்டித்துள்ளனர்.

அது மட்டுமின்றி ப்ரியாவின் பேட்டிக்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்துள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பிரியா, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக அவரை மீட்டு அவரது நண்பர்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பிரியா சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியாவின் பேட்டியை அனுமதியின்றி ஒளிபரப்பிய யூடியூப் சேனல் உரிமையாளரான வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த ராம் (21), ஒளிப்பதிவாளர் யோகராஜ் (21) மற்றும் பெண் தொகுப்பாளர் ஸ்வேதா (23) ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு தங்களது சுய லாபத்திற்காக பேட்டி தருபவர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் தற்போது யூடியூப் சேனல்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றிற்கு யார் கடிவாளம் போடுவது என பொதுமக்கள் பலரும் விழி பிதுங்கி காத்துக் கொண்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, செய்திகளில் பல யூடியூப் சேனல்கள் உள்ளே நுழைந்து தற்போது ஆதிக்கம் செலுத்த தொடங்கி விட்டன.

டிவி சேனல்களுக்கு இணையாக அவர்கள் எங்கே சென்றாலும் பெரிய கேமராவை தூக்கிக் கொண்டு வந்து பிரபலங்களிடம் பேட்டி எடுப்பது, தனிப்பட்ட முறையில் பிரபலங்களை கோபப்படுத்தி அதை வைரலாக்குவது, தேவையில்லாத கேள்விகளை கேட்டு அதனை எடிட் செய்து போடுவது என பலரும் பல இழிவான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தற்போது பலரும் பிரஸ்மீட் என்றாலே வேண்டாம் எனக் கூறிவிட்டு ஓடுகின்றனர். செய்தி சேகரிப்புக்கும், யூடியூப் சேனலுக்கும் என்ன சம்பந்தம் உண்டு.

அவர்கள் எவ்வாறு உள்ளே நுழைகிறார்கள். இதனை யார் தடுப்பது, பிரஸ், மீடியா போன்ற வார்த்தையை அவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள், இவை எல்லாம் கேள்விகளாகவே நிற்கின்றன. இதுபோன்று அவர்கள் இஷ்டத்துக்கும் பிரஸ், மீடியா என்ற ஸ்டிக்கர்களை தங்கள் வாகனங்களில் ஒட்டுவதால்தான், தற்போது போக்குவரத்து போலீசார் ஸ்டிக்கர் ஒட்டுவதில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பல மாதங்களுக்கு முன்பு யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசு ஒரு குழுவை அமைப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை அவர்களுக்கு என எந்த ஒரு குழுவும் அமைத்தது போன்று தெரியவில்லை. திருமண வீடுகளில் தொடங்கி, ஒரு பிரபலம் இறந்து விட்டால் அவரை தூக்கி குழியில் வைத்து மண்ணைப்போட்டு மூடுவது வரை தொடர்ந்து ஒவ்வொரு காட்சியாக படம் பிடித்து அதனை தங்களுக்கு ஏற்ற வகையில் எடிட் செய்து ஒளிபரப்புகின்றனர்.

குறிப்பாக, அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பேட்டி எடுத்து அதை தங்களது சேனல்களில் ஒளிபரப்புகின்றனர். தனி ஒரு மனிதனுக்கு, குறிப்பாக பிரபலங்களுக்கு பிரைவசி என்ற ஒன்று இல்லாமல் போய்விட்டது. ஒரு மெயில் ஐடி வைத்திருந்தால் யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல் தொடங்கலாம், யார் வேண்டுமானாலும் யாரையும் கேள்வி கேட்கலாம், யாரைப் பற்றியும் எப்படி வேண்டுமானாலும் கேவலமாக விமர்சனம் செய்யலாம் என்ற நிலை வந்து விட்டது.

தற்போது இதற்கு உயிரிழப்புகளும் ஏற்பட ஆரம்பித்து விட்டன. இனியாவது யூடியூப் சேனல்கள் விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட்டு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். செய்திகள் வெளியிடுவதற்கு யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஒரு காலத்தில் செய்தி, விமர்சனம் போன்றவற்றை பொதுமக்கள் மிகவும் உற்று கவனித்து வந்தனர்.

யூடியூப் சேனல்கள் கலாச்சாரம் வந்த பிறகு, எந்த ஒரு செய்திக்கும் எந்த ஒரு விமர்சனத்திற்கும் மரியாதை இல்லாமல் போய்விட்டது. அந்த அளவிற்கு செய்தித் துறையில் நுழைந்து அந்தத் துறையை கரையான் அரிப்பது போன்று யூடியூபர்கள் அரித்து வருகின்றனர். இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது என பலரும் வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டுள்ளனர். இதற்கு விரைவில் ஒரு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

* கட்டுப்பாடு அவசியம்
எந்த ஒரு விஷயத்தையும் ஆபாச முறையில் வெளியிடக்கூடாது. இரட்டை அர்த்த வசனங்களை நீக்க வேண்டும். யூடியூப் சேனலுக்கு என தனியாக லைசென்ஸ் பெற வேண்டும். அது மிகவும் கடுமையாக்கப்பட்டு குறைந்தது ஓராண்டு அந்த யூடியூப் சேனல் முறையாக எந்த வித பிரச்னையில் சிக்காமல், தங்களது ஒளிபரப்பை தொடர்ந்தால் அதன் பிறகு மட்டுமே அவர்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். பிரஸ், மீடியா என்ற ஸ்டிக்கர்களை அவர்கள் பயன்படுத்தக் கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் விதித்து யூடியூப் சேனல் அடாவடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

* தவறான மருத்துவ குறிப்புகள்
தற்போது பல யூடியூப் சேனல்களில் டயட் என்ற பெயரில் பல மோசடியான நபர்கள் தங்களுக்கு தெரிந்த பாட்டி வைத்தியங்களை அப்படியே உல்டாவாக மாற்றி அதனை பதிவிட்டு வருகின்றனர். தொப்பையை குறைக்க இதை பருகுங்கள், ஆண்மை அதிகரிக்க இதைப் பருகுங்கள், 30 நாட்களில் உங்கள் எடையை குறைப்பது எப்படி என விதவிதமான கவர்ச்சியூட்டும் விளம்பரங்களை பதிவு செய்து அதனை தங்களது யூடியூப் சேனல்கள் மூலமாக பலரையும் பார்க்க வைத்து அதிக சப்ஸ்கிரைபர்களை பெற்று பணம் சம்பாதித்து வருகின்றனர்.

உண்மையிலேயே இவர்கள் கூறும் வழிமுறைகளில் நன்மை இருக்கிறதா, அல்லது புத்தகத்தை பார்த்து இவர்கள் படிக்கிறார்களா என்று பலரும் குழம்பி நிற்கின்றனர். யூடியூப் சேனலை பார்த்து உடல் எடையை குறைக்கிறேன் எனக்கூறி பல உடல் உபாதைகளை வாங்கிக் கொண்டு லட்சக்கணக்கில் செலவு செய்தவர்களும் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு உடல் அமைப்பிற்கும் சில விஷயங்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்கும், பல விஷயங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்காது. அது மருத்துவர்களுக்கு நன்கு தெரியும். எனவே யூடியூப் சேனல்களில் வரும் பல விஷயங்களை பின் தொடர்ந்து உடல் நலத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் பலரும் எச்சரித்து வருகின்றனர்.

* தணிக்கை கிடையாது
தியேட்டருக்கு சென்று பணம் கொடுத்து பார்க்கப்படும் சினிமாவில் சர்ச்சைக்குரிய கருத்துகள், ஆபாச காட்சிகள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள், வன்முறை காட்சிகள், தனிநபர் மீதான விமர்சனம், அரசியல் கட்சி, மதம் சார்ந்த கருத்துகளை தெரிவிக்க ஒன்றிய தணிக்கை துறை (சென்சார் போர்டு) பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

ஆனால், செல்போனில் அனைவரையும் நேரடியாக சென்றடையும் யூடியூப் சேனல்கள் மற்றும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கங்களுக்கு மட்டும் எந்த கட்டுப்பாடும் கிடையாது. இதனால், ஆபாச வீடியோக்கள், சர்ச்சைக்குரிய கருத்துகள் போன்ற பல்வேறு செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வேண்டிய ஒன்றிய ஒளிபரப்பு துறை கண்டும் காணாமல் இருப்பது அதிர்ச்சியளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

The post அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம் எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி appeared first on Dinakaran.

Tags : YouTubers ,
× RELATED தண்ணீரில் பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற...