×

10 ஆண்டுகளாக கடும் பின்னடைவு தமிழகத்திலிருந்து 4 சதவீதம் ஜவுளிகள் மட்டுமே ஏற்றுமதி

* விசைத்தறிகளை பழைய இரும்பு கடைகளில் எடைக்கு விற்கும் அவலம்

தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளி உற்பத்தியில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு முதல் பஞ்சு விலை ஏறாமல் இருந்ததால் ஜவுளி உற்பத்தி நல்லமுறையில் இருந்தது. அதற்கு ஏற்ப ஏற்றுமதியும் இருந்தது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் ஒரு கேண்டி பஞ்சு ரூ.54 ஆயிரத்திற்கு விற்றது. பஞ்சு விளைச்சல் குறைந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அந்தாண்டு தீபாவளி பண்டிகையின்போது ஒரு கேண்டி பஞ்சு ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் வரை சென்றது. மில்களில் நூல் உற்பத்தி குறைந்ததால், வரத்து சரிந்தது.

இதன் காரணமாக ஜவுளி உற்பத்தி 50 முதல் 60 சதவீதம் சரிந்தது. பஞ்சு விலையை குறைக்க வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள், நூல் வியாபாரிகள், மில் அதிபர்கள் ஒன்றிய அரசை வலியுறுத்தினர். ஆனால் அதற்கு மாறாக பஞ்சு விலை மீண்டும் ஏறியது.  பின்னர் பஞ்சு விளைச்சல் அதிகரிப்பால் கடந்தாண்டு 2022 பிப்ரவரியில் மீண்டும் பஞ்சு விலை குறையத் தொடங்கியது. அப்போது ஒரு கேண்டி பஞ்சு ரூ.80 ஆயிரம் வரை சரிந்தது.

தற்போது மார்க்கெட்டில் ஒரு கேண்டி பஞ்சு ரூ.72 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. பஞ்சு விலை சரிந்து வருவதால் கடந்த சில மாதமாக தமிழகத்தில் பல பகுதிகளில் ஜவுளி உற்பத்தி சற்று அதிகரித்துள்ளது. ஆனால் உற்பத்திக்கு ஏற்ப விற்பனை இல்லை. எனவே தற்போது புதியதாக பொறுப்பேற்றுள்ள ஒன்றிய அரசு ஜவுளி ஏற்றுமதிக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து வெண்ணந்தூர் விசைத்தறி சங்க பொருளாளர் சிங்காரம் கூறியதாவது: தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், கோவை, திருப்பூர், விருதுநகர் உள்பட பல இடங்களில் ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இப்பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி மதிப்பில் ஜவுளி உற்பத்தி நடக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், இதைதவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக ஜவுளி ஏற்றுமதி பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த 8 ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி என்பது முற்றிலுமாக முடங்கிப் போயுள்ளது. சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விசைத்தறி தொழில் புரிவோர் பலர் மாற்று தொழிலுக்கு போயுள்ளனர். தொழில் இல்லாததால் பல இடங்களில் விசைத்தறி கூடங்கள் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. சிலர் விசைத்தறிகளை பழைய இரும்பு கடைகளில் எடைக்கு விற்கின்றனர்.

பல கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் ஜவுளி ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் இல்லை. தமிழகத்திலிருந்து வெறும் 4 சதவீதம் அளவிலேயே ஜவுளிகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டில் இருந்து 2014ம் ஆண்டு வரை ஜவுளி ஏற்றுமதி நல்லமுறையில் இருந்தது. அப்போது நூல் மற்றும் ஜவுளிக்கு அப்போதைய அரசு வரி விதிக்கவில்லை. 2017ம் ஆண்டு பணமதிப்பிழப்புக்கு பிறகு ஜிஎஸ்டியை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியது. ஜிஎஸ்டியால் 20 முதல் 25 சதவீதம் ஜவுளி விலை அதிகரித்துள்ளது. ஒரு கோடி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய கடமை ஒன்றிய அரசுக்கு உள்ளது.

இந்நிலையில் நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்தே எப்போதும் இல்லாத அளவில் ஜவுளி தொழில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் அதிகாரிகளின் கெடுபிடிக்கு பயந்து யாரும் ஜவுளி ஏற்றுமதி செய்யவில்லை. இதனால் ஒவ்வொரு ஜவுளி உற்பத்தியாளர்களிடமும் பல கோடி மதிப்பில் ஜவுளிகள் தேக்கமடைந்தது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் முடிந்து புதியதாக ஒன்றிய அரசு பொறுப்பேற்றுள்ளது.

புதிய ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சராக கிரிராஜ் சிங், இணை அமைச்சராக பபித்ரா மார்கிரேட்டா ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். இரு அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு அதிகளவில் ஆர்டர்கள் கொண்டு வரவேண்டும். மேலும் இங்குள்ள ஜவுளிகளை ஏற்றுமதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்றுமதி ஆடை விற்பனை இல்லாததால் ஆட்டோ லூம்ஸ் எனப்படும் நவீன விசைத்தறிகளில் உள்நாட்டுக்கு தேவையான சேலை, டவல் போன்றவை அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் சாதாரண விசைத்தறியாளர்கள் தாக்கு பிடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதே நிலை தொடர்ந்தால் விசைத்தறி தொழில் பெரும் அபாயத்தை சந்திக்கும். எனவே ஒன்றிய அரசு, ஜவுளித்தொழில் மேம்பாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சிங்காரம் கூறினார்.

* ஒன்றிய அரசு ஒப்புதல் கிடைக்காமல் சாயப்பூங்கா திட்டம் முடக்கம்
ஏற்றுமதியில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் ஜவுளித்தொழிலின் வளர்ச்சியில், சாயச்சாலைகளின் பங்கு முக்கியமானது. கழிவுநீர் பிரச்னையால் சாயத்தொழில் நசிந்து கவலைக்கிடமாகி உள்ளது. சாயச்சாலைகள் மீதான நெருக்கடியால், ஜவுளி உற்பத்திக்கான மூலதனச் செலவுகள் பல மடங்கு அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் பாரம்பரிய பருத்தி நெசவுக்கு தேவையான வண்ணமேற்றப்பட்ட நூல்கள் தட்டுப்பாடும், விலையேற்றமும் விசைத்தறி ஜவுளி உற்பத்தியை வெகுவாக பாதித்துள்ளது. நீர்நிலைகளையும், மண் வளத்தையும் பாதிக்கும் சாயக்கழிவுகளுக்கு, நிரந்தர தீர்வை ஏற்படுத்தாத நிலையில், ஜவுளித்தொழிலை மேம்படுத்த முடியாது என்றுணர்ந்த உற்பத்தியாளர்கள், சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய திட்டத்தை முன்வைத்தனர்.

சாயக்கழிவுகளில் உள்ள உப்பையும், நீரையும் பிரித்து, மீண்டும் பயன்படுத்தும் திட்டத்தை, கடந்த 15 ஆண்டுகளாக அரசுகள் முன்னெடுத்த போதிலும், அதற்கான நடைமுறை இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் உள்ள சிறு சாயச்சாலை உரிமையாளர்கள் பலரும், ஒரு குழுவாக இணைந்து சாயச்சுத்திரிகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நிலத்தை வாங்கி, அரசிடம் ஒப்படைத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகியும், இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

20க்கும் மேற்பட்ட சாயச்சாலை உரிமையாளர்கள், ஒரு குழுவாக இணைந்து, திட்டத்திற்கான 25 சதவீதம் முதலீட்டை வழங்கினால், ஒன்றிய அரசு 50 சதவீதமும், மாநில அரசு 25 சதவீதமும் வழங்கும் என்ற அறிவிப்பு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.  ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, இந்த சாயப்பூங்கா திட்டத்தை திமுக அரசு துரிதப்படுத்தி திட்ட வரைவுகளை தயார் செய்து, ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி 3 வருடங்களாகியும், டெல்லியில் கோப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசிடம் இருந்து திட்டத்திற்கான ஒப்புதல் கிடைக்காததால், குமாரபாளையம் சாயப்பூங்கா திட்டம் முடக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பாரம்பரிய பருத்தி நெசவு குறைந்து, பெரு முதலாளிகளால் இறக்குமதி செய்யப்பட்டு விசைத்தறியாளர்களிடம் திணிக்கப்படும் செயற்கை இழைகளான ரயான், பாலியஸ்டர் நெசவுக்கு உற்பத்தியாளர்கள் மாறி வருகின்றனர். இந்தியா போன்ற வெப்ப நாடுகளுக்கான பருத்தி இழைகளை தவிர்த்து விட்டு, குளிர் நாடுகளுக்கான பாலியஸ்டர் துணி உற்பத்தியால் இந்தியாவின் பருத்தியும், பட்டும் வேகமாக அழிந்து வருகிறது.

பருத்தி நூலை சாயமிடும் சாயச்சாலைகளின் கழிவுநீர் பிரச்னைக்கான சாயப்பூங்கா, பொது சுத்திகரிப்பு நிலையம் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்து வரும் ஆண்டுகளில் காட்டனும், கலர் பட்டும் காணாமல் போய்விடும். பாலியஸ்டர், ரயான் போன்ற வெளிநாட்டு ஜவுளி உற்பத்தியாளர்களிடம், நமது நெசவாளர்கள் கூலிக்காக நெய்து கொடுக்கும் அடப்பு தறியாளர்களாக மாறும் நிலை ஏற்பட்டு விடும்.

எனவே, ஜவுளித்தொழிலை மீட்கவும், ஜவுளித்தொழிலை நம்பியுள்ள பல லட்சம் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை காக்கவும் சாயப்பூங்கா, சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றுக்கான நிதியை ஒதுக்கி, திட்ட ஒப்புதல் வழங்க வேண்டுமென ஜவுளி உற்பத்தியாளர்கள் பெரிதும் எதிர்நோக்கி உள்ளனர்.

The post 10 ஆண்டுகளாக கடும் பின்னடைவு தமிழகத்திலிருந்து 4 சதவீதம் ஜவுளிகள் மட்டுமே ஏற்றுமதி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...