×

சிறுவர்களை தொடர்ந்து போதை மாத்திரைக்கு அடிமையாகும் சிறுமிகள்

* தவறான உறவுகளில் சிக்கி இளம் வயதிலேயே வாழ்க்கையை தொலைக்கும் அவலம்
* அளவுக்கு மீறிய சுதந்திரம் ஆபத்தில் முடியும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை

நாகரிக வளர்ச்சி அடைய அடைய மனித வாழ்க்கை முறை பல்வேறு பரிணாமங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. 20 வருடங்களுக்கு முன்பு வரை இருந்த பல்வேறு விஷயங்கள் தற்போது நம்மிடம் இல்லை. இதில் முக்கிய விஷயமாக கருதப்படுவது, இளைய தலைமுறையினரிடம் ஒழுக்கம் தற்போது அறவே இல்லை என கூறலாம். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மரியாதை அளிப்பதில்லை. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு, 25 வயதில் ஒரு இளைஞர் தெரிந்து கொண்டதை தற்போது உள்ள காலகட்டத்தில் 15 வயது சிறுவன் அதனை தெரிந்து கொள்கிறான். செல்போன் பயன்பாடு மற்றும் அசுரத்தனமான இணையதள வளர்ச்சியின் காரணமாக இளைய தலைமுறையினர் அனைத்தையும் விரைவில் தெரிந்து கொண்டு அதனை செயல்முறைப்படுத்திக் காண துடிக்கின்றனர்.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் 12 வயதிலிருந்து 18 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியரை வளர்ப்பதில் பல்வேறு சிக்கல்களை தற்போது சந்தித்து வருகின்றனர். சிக்கல்கள் என்று கூறுவதை விட தினம் தினம் ஒரு வித அச்சத்துடன் அவர்கள் வாழ்கின்றனர், என்று கூறலாம். அந்த அளவிற்கு சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. படிப்பதில் தொடங்கி பள்ளி மாணவ மாணவியர் பள்ளிக்குச் சென்று டியூஷன் சென்று வீடு திரும்பும் வரை பெற்றோர்கள் ஒருவித கலக்கத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் யார் என்று தெரியாத நபருடன் மணிக்கணக்கில் சாட்டிங் செய்கின்றனர். அவர்கள் எது கேட்டாலும் பதில் தருகின்றனர். புகைப்படங்களை பரிமாறிக் கொள்கின்றனர்.

இதனால் பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, தற்போது சிறுவயதிலேயே போதை எப்படி இருக்கும் என்பதை அறிய ஆரம்பத்தில் பீர் குடிப்பது, அதன் பின்பு ஆல்கஹால் எடுத்துக் கொள்வது, அதன் பின்பு கஞ்சா புகைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சிறுவர்கள், சமீப காலமாக வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி அதனை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் எடுத்துக் கொள்கின்றனர். சாதாரணமாக 2 பேர் மது அருந்த சென்றால் குறைந்தது ₹500 செலவாகும். போதை 4 மணி நேரத்தில் தெளிந்து விடும் ஆனால் இது போன்ற போதை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது 15 மணி நேரத்தில் இருந்து 18 மணி நேரம் வரை போதை உள்ளது. மாத்திரையின் விலையும் ₹50 முதல் ₹200க்குள் முடிந்து விடுகிறது. அதை வாங்கி 4 பேர் பயன்படுத்தும் அளவிற்கு வருகிறது.

எனவே ஆரம்பத்தில் இதனை விளையாட்டாக எண்ணி போதை மாத்திரைகளை பயன்படுத்தத் தொடங்கிய இளைஞர்கள் நாளடைவில் அது அவர்களின் வாழ்க்கையை முடித்து விடும் என்பதை படிப்படியாக உணர்வதில்லை. அந்த வகையில் வடசென்னை பகுதிகளான புளியந்தோப்பு‌, பேசின் பிரிட்ஜ்‌, ஓட்டேரி, எம்கேபி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை போதை மாத்திரைகளை பயன்படுத்திய 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 16 வயதிலிருந்து 22 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரச்னை பூதாகரமாக வெடித்த நிலையில் எவ்வாறு மாத்திரைகள் இவர்களுக்கு கிடைக்கிறது, என பிரச்சனையை ஆராய்ந்து ஆன்லைன் மூலம் மாத்திரைகளை விற்பவர்கள், வெளியூர்களுக்கு சென்று வாங்கி வருபவர்கள், மருத்துவ பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினரையும் கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.

இதில் சிக்குபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். மேலும் போதை மாத்திரைகளை விற்று யாரேனும் உயிரிழந்தால் குறிப்பிட்ட நபரின் மரணத்திற்கு போதை மாத்திரையை விற்றவர் தான் காரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு நிலைமை சென்று கொண்டிருக்க சென்னையில் அடுத்தடுத்து நடந்த சில சம்பவங்களில் போலீசார் விழி பிதுங்கி நிற்கின்றனர். ஆண்கள் குறிப்பாக டீன் ஏஜ் வயதில் உள்ள நபர்கள் மட்டுமே போதை மாத்திரைகளை பயன்படுத்தி வந்த நிலையில், அதனை பெண்களும் பயன்படுத்தி வருவதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழு அமைத்து அவர்கள் போதை மாத்திரைகளை பயன்படுத்தி வருவதும் போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அந்த வகையில், கடந்த மாதம் 10ம் தேதி புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு வந்தது.

அதில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு 16 வயது சிறுமி காணாமல் போகிறார். அவரை கண்டுபிடித்த போது அவர் போதை மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்தி கடந்த ஒரு ஆண்டாக பல ஆண் நண்பர்களுடன் பழகி கர்ப்பமடைந்த காரணத்தினால் அவரது அண்ணன் மற்றும் அம்மா வீட்டில் இருந்து அவரை விரட்டி விட்டதாகவும், கடந்த ஒரு வருடமாக நண்பர்களுடன் சேர்ந்து அவர் போதைப் பொருட்களை எடுத்து வருவதாகவும் அவர் கருவுற்றதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை என்பதும் தெரிய வந்தது. இதேபோல கடந்த மாதம் 9ம் தேதி தண்டையார்பேட்டையை சேர்ந்த 16 வயது பெண் புகார் ஒன்று அளித்தார்.

அதில் தான் மூன்று பெண் தோழிகளுடன் பழகி வந்தபோது அவர்கள் எனக்கு ஒரு மாத்திரையை கொடுத்து நான் அதை சாப்பிட்டு மயக்கம் அடைந்தவுடன் என்னை வேறு ஒரு ஆண் நண்பருடன் உடலுறவில் ஈடுபடுத்தியதும், மேலும் ஒரு மாதம் தொடர்ந்து போதை மாத்திரை எடுத்துக் கொண்டு தான் அந்த ஆண் நண்பருடன் உடலுறவில் ஈடுபட்டதாகவும், அதன் பின்பு எனது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் என்னை மீட்டு அனுப்பியதாகவும், தன்னை பலாத்காரம் செய்ய உதவிய மூன்று பெண்கள் மற்றும் ஆண் நண்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரவித்து இருந்தார். இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு 16 வயது சிறுமிக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அவரிடம் குழந்தைக்கு யார் காரணம் எனக் கேட்டபோது, அந்த சிறுமிக்கு தான் யாருடன் பழகினேன் என்பதே தெரியவில்லை என்று கூறினார்.

போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குறிப்பிட்ட அந்த நபரை அடையாளம் கண்டபோது புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த எல்சன் (22), என்பது தெரிய வந்தது. இவர் போதை ஊசி பயன்படுத்தி புளியந்தோப்பு பகுதியில் ஒருவர் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவருக்கும் போதை ஊசி பயன்படுத்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இவருடன் பழகி சிறுமி கர்ப்பமானது விசாரணையில் தெரிய வந்தது. சிறுமிக்கும் இவர் போதை மருந்துகளை கொடுத்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த 3 வழக்குகளும் வெவ்வேறு வழக்குகள் என்ற போதும் போலீசார் சற்று இதன் உள்ளே சென்று பார்த்தால் வடசென்னையில் போதை பொருட்கள் பயன்படுத்தும் சிலர் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குழு ஒன்றை அமைக்கின்றனர்.

அந்த குழுவிற்கு குறிப்பிட்ட ஏரியாவின் பெயரை வைத்து அதன் பின்னே அட்டி என அழைக்கின்றனர். உதாரணத்திற்கு திருவொற்றியூர் அட்டி புள்ளிங்கோ புளியந்தோப்பு அட்டி, புள்ளிங்கோ போன்ற குழுக்களை உருவாக்குகின்றனர்.
அதில் போதை மாத்திரைகளை பயன்படுத்துவர்கள் மட்டுமே இருக்க முடியும். இப்படி குழுக்களை உருவாக்கும்போது அதில் இளம்பெண்களும், சிறுமிகளும் உள்ளனர். அவ்வாறு பழக்கமாகும் போது பெண்களுக்கு போதை மாத்திரைகளை கொடுத்து அவர்கள் உல்லாசத்திற்கு பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. சாதாரண மாத்திரை என நினைத்து உட்கொள்ளும் பெண்கள் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் மயக்கத்தில் உள்ளனர். அதனை பயன்படுத்திக் கொண்ட போதை கும்பல் தங்களது நண்பருடன் சேர்ந்து பெண்களை சீரழிக்கின்றனர்.

இதனை வெளியே சொல்ல முடியாமல் பல பெண்கள் புகார் கொடுக்க வருவது கிடையாது. ஒன்று, இரண்டு புகார்கள் மட்டுமே வருகின்றன. எனவே ஆண் நண்பர்களுடன் பழகும் பெண்கள் எங்கே செல்கிறோம், எது போன்ற பொருட்களை சாப்பிடுகிறோம், என்பதை நன்கு யோசித்து நல்ல நண்பர்களை தேர்ந்தெடுக்க வேண்டும், என போலீசார் எச்சரிக்கின்றனர். 16 வயதில் யார் யாருடன் உறவு கொண்டேன் என்பது கூட தெரியாமல் குழந்தை பெற்ற சிறுமி ஒரு பக்கம். இரண்டு நாட்களாக யார் யார் வந்து உறவு கொண்டார்கள் என தெரியாமல் கடைசியாக அருகில் படுத்திருந்த நபருடன் சென்று ஒரு மாதமாக குடும்பம் நடத்திய சிறுமி ஒரு பக்கம். ஒரு வருடமாக வீட்டில் உள்ளவர்கள் சேர்க்காமல் இருந்ததால் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து போதைப் பொருட்களை எடுத்துக்கொண்ட சிறுமி மறுபக்கம் என 3 சம்பவங்களும் போலீசாரை கதி கலங்க வைத்துள்ளது.

சென்னை போன்ற பெரு நகரங்களில் சிறுமிகள் போதைப் பொருட்களை பயன்படுத்தி பாதிக்கப்படுவது புதிதில்லை என்ற போதும், இந்த மூன்று வழக்குகளும் சற்று வித்தியாசமாக உள்ளது. இதில் பாலியல் அத்துமீறல்கள் நடைபெற்று உள்ளதால் போலீசார் இதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்ற மேலும் வழக்குகள் வராமல் தடுக்க என்ன வழிமுறைகளை போலீசார் மேற்கொள்ள உள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பெற்றோர்களே உஷார்
தற்போது உள்ள சூழ்நிலையில் குழந்தைகளை பெற்றோர்கள் கவனிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகவிட்டது. ஏனென்றால் முன்பெல்லாம் தவறுகள் செய்ய வாய்ப்புகள் மிக குறைவாக இருந்தன. ஆனால், இன்றைய காலகட்டத்தில் வாய்ப்புகள் அதிக அளவில் கொட்டி கிடக்கின்றன. எனவே அதனை டீன் ஏஜ் வயதில் உள்ள பிள்ளைகள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்பது நமக்கு தெரியாது. எனவே, பெற்றோர்கள் கண்டிப்பாக பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள், அவர்களது செல்போனில் என்ன உள்ளது என்பதை கண்டிப்பாக பார்க்க வேண்டும். பிள்ளைகள் சிலர் தங்களது செல்போனை பாஸ்வேர்டு போட்டு எனது செல்போனை யாரும் திறந்து பார்க்க கூடாது, எனக் கூறுகின்றனர். அவ்வாறு கூறும் பிள்ளைகளின் செல்போனை கண்டிப்பாக பெற்றோர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

இந்த வயதில் பிரைவசி என்பது கிடையாது, அதற்கான காலம் வரும்போது கண்டிப்பாக உனக்கு அதை நான் தருகிறேன், என பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசி எது சரி எது தவறு என்பதை பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும். மேலும் பள்ளிக்குச் சென்று திரும்பும் குழந்தைகளிடம் பெற்றோர்கள் இன்று என்ன நடந்தது, என்று அமர்ந்து பேச வேண்டும். மேலும், நண்பர் வீட்டிற்கு செல்கிறேன், அல்லது வெளியே செல்கிறேன் என்றால் எங்கு செல்கிறார்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பதை கண்டிப்பாக பெற்றோர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக தங்களது குழந்தைகள் எந்தெந்த சமூக வலைதளங்களில் அக்கவுண்ட் வைத்துள்ளார்கள், எந்த பெயரில் அவர்கள் அக்கவுண்ட் வைத்துள்ளார்கள் என்பதையும் பெற்றோர்கள் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

இவையெல்லாம் குழந்தைகளை நாம் சந்தேகப்படுகிறோம், என்பதற்காக அல்ல குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை தொடும் வரை எந்த ஒரு தவறான பாதையிலும் சென்று விடக்கூடாது, என்பதற்காக அவர்களை நாம் வழி நடத்துகிறோம் என நினைத்து கண்டிப்பாக ஒவ்வொரு பெற்றோரும் இதனை செய்ய வேண்டும். ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் எது நல்லது எது கெட்டது என்பது அவர்களுக்கு தெரிந்து விடும் அப்போது மீண்டும் பெற்றோர்கள் தங்களது இறுக்கத்தை தளர்த்திக் கொள்ளலாம் எனவே குழந்தைகள் வளர்ப்பு விஷயத்தில் பெற்றோர்கள் கண்டிப்பாக கவனமுடன் இருப்பது இன்றியமையாதது.

குடும்ப சூழ்நிலை மாற வேண்டும்
சிறுவயதிலேயே சிறுமிகள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவது குறித்து குழந்தைகள் நல குழும ஆர்வலர் முனைவர் காருண்யா தேவி கூறுகையில், பெரும்பாலும் நாங்கள் சந்திக்கும் வழக்குகளில் சிறுமைகளின் குடும்பங்கள் கண்டிப்பாக ஏதோ ஒரு வகையில் பிரிந்திருக்கும் அல்லது அவர்களது பெற்றோர்கள் ஒழுக்கமாக இருக்க மாட்டார்கள். இதுபோன்ற குடும்பங்களில் இருந்து வரும் சிறுமிகள் தான் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் எனவே பெற்றோர்கள் தங்களது குடும்ப பிரச்ினைகளை குழந்தைகளிடம் காண்பிக்க கூடாது. மேலும் குழந்தைகளை முறையாக கண்காணிக்க வேண்டும். 99 சதவீத சிறுமிகள் அல்லது சிறுவர்கள் பாதிக்கப்படுவதற்கு அவர்களது குடும்பங்கள் முக்கிய காரணமாக அமைகின்றன. எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும், என்று தெரிவித்தார்.

கண்காணிக்க வேண்டும்
சமூக வலைதளங்களில் அட்டி என பதிவிட்டு சிலர் கணக்குகளை தொடங்கி அதனை பலரும் பின் தொடர்ந்து வருகின்றனர். பெரும்பாலும் இவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களாக உள்ளனர். அவர்களின் பெயருக்கு கீழே போதை பொருட்களை பெயர் அல்லது ஊசி மாத்திரை போன்ற உருவங்களை ஸ்டேட்டஸ் ஆக அல்லது ஸ்டோரி ஆக வைக்கின்றனர். இதன் மூலம் இவர்களிடம் போதை பொருள் சம்பந்தமாக பேசலாம் என நினைத்து மறுதரப்பினரும் இவருடன் பேசி போதை பொருட்களை பரிமாறிக் கொள்கின்றனர். ஆண்களும் ஆண்களும் பேசும்போது போதை பொருள் பரிமாற்றம் மற்றும் பணம் பரிமாற்றம் நடைபெறுகிறது. ஆண்களும் பெண்களும் பேசும் போது அங்கு பெண்களை அழைத்துச் சென்று ஆண்கள் உடலுறவில் ஈடுபடுவது போன்ற விஷயங்கள் நடைபெறுகிறது. எனவே காவல்துறையினர் இந்த அட்டி என தொடங்கும் கணக்குகளை உற்று கவனிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் எச்சரிக்கின்றனர்.

The post சிறுவர்களை தொடர்ந்து போதை மாத்திரைக்கு அடிமையாகும் சிறுமிகள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED கள்ளச்சாராயத்திற்கு எதிரான வேட்டை...