×

95 ஆண்டுகளாக 4 தலைமுறைகளை கண்ட மாஞ்சோலை இன்று முதல் மூடல்: மூச்சுக் காற்றாக வாழ்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம்  கேள்விக்குறி

பசுமையும், குளுமையும் நிறைந்த நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு மாஞ்சோலை ஒரு மணிமகுடமாக திகழ்கிறது. கல்லிடைக்குறிச்சியில் இருந்து சுமார் 28 கிமீ தொலைவில் காணப்படும் மாஞ்சோலையும், அதற்கு மேலுள்ள காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய பகுதிகளும் தேயிலை தோட்டங்களால் நிரம்பி வழிகின்றன. முன்னொரு காலத்தில் மா மரங்களால் நிரம்பி வழிந்த மாஞ்சோலை, 1929ல் தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷனின் கைக்கு வந்தபோது, தனது முகத்தை மாற்றிக்கொண்டது.

எங்கெங்கு காணினும் பச்சை பசேல் என மிளிரும் தேயிலை, காபி தோட்டங்களும், ஏலக்காய், மிளகு என பணப்பயிர்களும் வனப்பகுதிகளின் வளத்தை மெருகூட்டின. மாஞ்சோலை தேயிலை தோட்டமாக தொடங்கி, ஆலமரமாக கிளை விரித்தபோது, அங்குள்ள தொழிலாளர்களும், அவர்களது குடும்பங்களும் விழுதுகளாகவே காட்சியளித்தனர். மாஞ்சோலையில் தேயிலை தொழிற்சாலைகள் மட்டுமின்றி, 40 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, தபால் அலுவலகங்கள், அரசு உயர்நிலைப்பள்ளி, மாணவர் விடுதி, காவல் நிலையம், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டுதலங்கள், ரேஷன் கடைகள், தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகள் என தொழிலாளர்களின் வாழ்வியலை உரமாக்கி, மணிமுத்தாறு டவுன் பஞ்சாயத்தின் வார்டுகளாகவே அவை மாறின.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக மாஞ்சோலை கிராமங்கள் மீதான இயற்கையின் பசுமை விரிப்புகள் சுற்றுலா பயணிகளையும் சுண்டி இழுத்தன. 4 தலைமுறையாக அங்கு பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வருவதோடு, தேயிலை தோட்டங்களை தனது மூச்சுக் காற்றாக கொண்டு திகழும் தொழிலாளர்களுக்கு இப்போது வனத்துறையின் ‘காப்புக்காடுகள்’ என்ற கத்தி தலைக்கு மேலே தொங்குகிறது. சிங்கம்பட்டி ஜமீனிடம் இருந்து 99 ஆண்டு கால குத்தகையாக 23 ஆயிரம் ஏக்கரை பெற்ற தேயிலை தோட்ட பிபிடிசி நிர்வாகத்தின் குத்தகை காலம், வரும் 2028ம் ஆண்டு நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் மாஞ்சோலையை காப்புக்காடாக அறிவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கான நடைமுறையை வனத்துறை தொடங்கி உள்ளது. புலிகள் காப்பக பகுதிக்குள் உள்ள இந்த வனப்பகுதியை கடந்த 28.02.2018ல் காப்புக்காடாக அறிவித்த வனத்துறை முழு பகுதியையும் வனமாக்க பணிகளை தொடங்கி உள்ளது. இந்த நெருக்கடி காரணமாக தேயிலை தோட்ட நிர்வாகம், அனைத்து தொழிலாளர்களையும் கடந்த 14ம் தேதிக்குள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்குமாறு கெடு விதித்து நோட்டீஸ் அளித்திருந்தது.

இதனை ஏற்று 90 சதவீதம் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தனர். அவர்களுக்கு உடனடியாக 25 சதவீதம் தொகையும், ஆக.7க்குள் குடியிருப்புகளை காலி செய்து செல்பவர்களுக்கு 75 சதவீதம் தொகையும் பணிக்கொடை வழங்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த 13ம் தேதி முதல் 15ம் தேதிவரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்த தேயிலை தோட்ட நிர்வாகம் இன்று (16ம் தேதி) முதல் யாரும் வேலைக்கு வர வேண்டாம் என கண்டிப்புடன் அறிவித்துள்ளது.

கடந்த 95 ஆண்டுகளாக தங்கள் உடலோடும், உயிரோடும் கலந்துவிட்ட மண்ணில் இருந்து வெளியேற முடியாமலும், மாற்று வாழ்க்கைக்கான ஆயத்தம் எதுவுமில்லாமலும் மாஞ்சோலை தொழிலாளர்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். பொதுமக்களை அங்கிருந்து படிப்படியாக வெளியேற்றும் நடவடிக்கைகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தேயிலை தோட்ட நிர்வாகம் தொடங்கி விட்டாலும், அதன் உச்சக்கட்ட கிளைமாக்ஸ் காட்சிகள் இப்ேபாது அரங்கேறத் தொடங்கியுள்ளன.

காலம் காலமாக தேயிலை தோட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு இந்த நடவடிக்கை பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.. திடீரென்று மாஞ்சோலையை விட்டு வெளியேற கூறியதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. வேலை வாய்ப்பு, தொழில் உள்ளிட்டவற்றை நினைத்து அவர்கள் கவலையடைந்துள்ளனர்.

கடந்த 1967ல் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்து வந்த தமிழர்களுக்காக, நீலகிரி, கோவை மாவட்டங்களில் தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகம் உருவாக்கி அவர்களின் வாழ்வாரத்தை தமிழ்நாடு அரசு உத்தரவாதப்படுத்தியது. அதுபோல மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய எஸ்டேட்களை தமிழ்நாடு அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்து தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தி காப்பாற்ற வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

* மாஞ்சோலையை பொறுத்தவரை 4 ஆயிரம் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அங்குள்ள தேயிலை தோட்டங்களில் பணியாற்றி வந்தனர். ஆனால் தற்போது வெறும் 700 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

* சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரி
மாஞ்சோலையும், அதன் சுற்று கிராமங்களான காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாகும். மயில் தோகை விரித்து ஆடினாற்போல், பசுமை போர்த்திய தேயிலை தோட்ட பகுதிகளில் குளிர்காற்றுக்கு மத்தியில் பயணிப்பது சுகமான அனுபவம். காகமே பறக்காத காக்காச்சியில் பனி படரும் மைதானங்கள் வெளிநாட்டு பயணிகளை கூட வியக்க வைக்கும்.

வனத்துறையும் ‘சூழல் சுற்றுலா’ என்ற பெயரில் மாஞ்சோலைக்கு அனுமதி வழங்கி வருகிறது. மாஞ்சோலையில் மீண்ட சொர்க்கம், நிலா பெண்ணே, பூமணி, மன்னவன் வந்தானடி, சுந்தர புருஷன், பேராண்மை உள்ளிட்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. காணி மக்களும், தேயிலை தோட்ட தொழிலாளர்களும் சுற்றுலா வளர்ச்சியின் ஒரு அங்கமாக இன்று வரை பார்க்கப்படுகின்றனர்.

* மாஞ்சோலை தேயிலை தோட்டம் உருவானது எப்படி?
கேரள மாநிலத்தில் உள்ள திருவாங்கூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த மன்னர் மார்த்தாண்டவர்மா என்பவர், சிறுவயதில் தந்தையை இழந்தார். சிறுவனான மார்த்தாண்ட வர்மாவை கொன்று ஆட்சியை பிடிக்க அவரது உறவுகாரர்களான எட்டு வீட்டு பிள்ளைமார்கள் சதி திட்டமிட்டனர். இதையறிந்த மகாராணியார் உமையம்மை, சிறுவன் மார்த்தாண்ட வர்மாவுடன் தப்பி ஓடி வந்து மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள பொதிகை மலையில் ஒளிந்து இருந்தார்.

அப்போது சொரிமுத்து அய்யனார் கோயிலில் அவர்கள் சிங்கம்பட்டியாரை சந்தித்து எட்டு வீட்டு பிள்ளைமார்கள் சதித்திட்டம் குறித்து தெரிவித்தனர். இதையடுத்து சிங்கம்பட்டியார் சேர மன்னர் மார்த்தாண்டவர்மாவுக்கு நல்லாதரவு கொடுத்து வில் பயிற்சி, வாள் வீச்சு, போர்த்தந்திரம் கற்றுக்கொடுத்து வாலிபப் பருவம் அடைந்ததும் சேரமன்னருடன் பெரும் படையை திரட்டி மண்ணை மீட்க அனுப்பினார். அவருடன் முக்கிய வீரராக தனது மூத்த மகனையும் சிங்கம்பட்டியார் அனுப்பி வைத்தார்.

இந்தப்படை திருவாங்கூர் சென்று எட்டு வீட்டு பிள்ளைமாரை விரட்டி வென்று ஆட்சியைக் கைப்பற்றியதும் மன்னர் மார்த்தாண்டவர்மா அரியணை ஏறினார். அந்தப் போரில் படைத்தளபதியாக மன்னர் மார்த்தாண்டவர்மா உடன் சென்ற சிங்கம்பட்டியாரின் மூத்த மகனான இளவரசர் இறந்து விட்டார், இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பிற்கும், அவர் செய்த உதவிக்கும் கைமாறாக சேர மன்னர் மார்த்தாண்டவர்மா 18ம் நூற்றாண்டின் 1706-1758 கால கட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள 80 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியையும், 5 கிராமங்களையும், காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளிட்ட 8 கோயில்களையும், 5 ஆயிரம் ஏக்கர் நன்செய், புன்செய் நிலங்களையும் தானமாக கொடுத்தார். இவ்வாறு கிடைத்த நிலங்களை சிங்கம்பட்டி ஜமீன் வம்சத்தை சேர்ந்தவர்கள் பரம்பரையாக அனுபவித்து வந்தனர்.

இந்நிலையில் 19ம் நூற்றாண்டு காலத்தில் இந்தியாவில் காலனி ஆதிக்கத்தை துவங்கிய ஆங்கிலேயர்கள் இந்த இடத்தை கண்டபோது அங்கு கூட்டம் கூட்டமாக மாமரங்கள் இருந்ததாகவும் அதனாலேயே மாஞ்சோலை என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் கடல் மட்டத்திலிருந்து 4,200 அடி உயரம் கொண்ட அந்த இடத்தில் ஆங்கிலேயர்கள் ஓய்வு இல்லம், விருந்தினர் மாளிகை, கோல்ப் மைதானம், விளையாட்டு மைதானங்கள் என அமைத்து சிறந்த சுற்றுலாத்தலமாகவும் மாற்ற விரும்பி ஆயத்த வேலைகளை துவங்கிய நிலையில், விடாமல் வருடம் முழுவதும் மழை பெய்ததால் அந்த முடிவை கைவிட்டதாக தெரிகிறது.

இதையடுத்து 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில், சிங்கம்பட்டியின் இளவரசரான சிவசுப்பிரமணிய சங்கர தீர்த்தபதி சென்னையில் படித்து வந்தபோது ஒரு கொலை வழக்கில் சிக்கினார். இந்த வழக்கின் செலவுகளுக்காக சிங்கம்பட்டி ஜமீன், 1929ம் ஆண்டு சுமார் 8,373.57 ஏக்கர் நிலத்தை பி.பி.டி.சி நிறுவனத்திற்கு 99 வருட குத்தகைக்கு அளித்தது. இதைத்தொடர்ந்து வனப்பகுதியில் தேயிலை, காபி, ஏலக்காய், மிளகு போன்ற பணப்பயிர்கள் பயிரிட நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, இலங்கை ஆகிய பகுதிகளில் இருந்து கங்காணிகள் எனும் தரகர்கள் மூலம் கூலி வேலைக்கு அழைத்து வரப்பட்ட கூலித் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த மாஞ்சோலை தேயிலை தோட்டம்.

The post 95 ஆண்டுகளாக 4 தலைமுறைகளை கண்ட மாஞ்சோலை இன்று முதல் மூடல்: மூச்சுக் காற்றாக வாழ்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம்  கேள்விக்குறி appeared first on Dinakaran.

Tags : Manchuria ,Manchole ,Manjole ,Kallidakurichi ,Kakachi ,Naluku ,Othu ,Horivetty ,
× RELATED மாஞ்சோலை சுற்றுலாத் தலத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி