×

இன்று உலக கொழுப்பு கல்லீரல் நோய் தினம்; கொழுப்பு கல்லீரல் நோய் தாக்கம் அதிகரிப்பு: குணப்படுத்த செய்ய வேண்டியது என்ன?.. டாக்டர்கள் விளக்கம்

தாம்பரம்: வாழ்வியல் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் உலகெங்கும் பல கோடி பேர் பல்வேறு நோய்களுக்குள்ளாகி வருகின்றனர். அந்த வகையில், கொழுப்பு கல்லீரல் நோயினால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் நோய் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், சமீப காலமாக மது அருந்தாதவர்களுக்கும் வாழ்வியல் முறைகளால் கொழுப்பு கல்லீரல் நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயினால் உலக மக்கள் தொகையில் சுமார் 25 முதல் 30 சதவீதத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை இந்த நோயினால் மூன்றில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் மட்டும் சுமார் 47 கோடி பேர் கொழுப்பு கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 13ம்தேதி உலக கொழுப்பு கல்லீரல் நோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொழுப்பு கல்லீரல் நோயை எப்படி குணமாக்குவது, கல்லீரலை ஆரோக்கியமாக பராமரிக்க செய்ய வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்து கிளெனேகிள்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் கல்லீரல், பித்தப்பை மாற்று அறுவை சிகிச்சை துறை இயக்குநர் டாக்டர் ஜாய் வர்கீஸ் கூறியதாவது: உலகளவில் அதிகரித்து வரும் மற்றும் மிகவும் ஆபத்தான கல்லீரல் பிரச்னைகளில் கல்லீரல் கொழுப்பு நோய் ஒன்றாக உள்ளது. முன்பு வளர்ந்த நாடுகளில் ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு நோய் ஒரு பெரிய உடல்நல பிரச்னையாக இருந்தது. ஆனால், சமீப காலமாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்த நோய் அதிகரித்து வருகிறது. கல்லீரலில் ஏற்படும் கொழுப்பு காரணமாக கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயமும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் தேவையும் அதிகரித்துள்ளது.

கல்லீரல் கொழுப்பால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை 2040ம் ஆண்டில் தற்போது உள்ள நிலையை காட்டிலும் இரு மடங்கு அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கம் மற்றும் உட்கார்ந்த வேலை ஆகியவற்றின் காரணமாக இந்த நோய் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இது வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் கல்லீரல் வெளிப்பாடாக கருதப்படுகிறது. கல்லீரல் கொழுப்பு நோய் பொதுவாக அடிப்படை நீரிழிவு, உயர் ரத்த கொழுப்பு அளவுகள், உடல் பருமன், உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் அதிக கலோரிகள் கொண்ட உணவு ஆகியவற்றின் காரணமாக ஏற்படும். சமீபத்தில், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆரம்ப நிலை மற்றும் ரத்தத்தில் உயர் எச்எஸ்-சிஆர்பி அளவு ஆகியவற்றின் காரணமாகவும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிய வந்திருக்கிறது.

இந்த, நோயை பற்றி மக்கள் நன்கு புரிந்துகொள்வதற்கும், அதை தடுப்பதற்கும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் என்ற பெயர் வளர்சிதை மாற்ற செயலிழப்புடன் தொடர்புடைய கொழுப்பு கல்லீரல் நோய்\” என பெயர் மாற்றப்பட்டது. நடுத்தர வயதான 40 முதல் 60 வயது உடையவர்களிடையே இது மிகவும் பொதுவானது, இருப்பினும் தற்போது இளம் பருவத்தினரிடையே அதிகரித்து காணப்படுகிறது. கல்லீரல் கொழுப்பு நோய் ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளையும் காட்டாது, மேலும் முக்கியமாக அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் கண்டறியலாம். கல்லீரல் கொழுப்பு நோயை ரத்த பரிசோதனை, கல்லீரல் செயல்பாடு சோதனை மற்றும் அடிவயிற்றின் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் கண்டறியலாம். பைப்ரோஸ்கேன், காந்த அதிர்வு எலாஸ்டோகிராபி ஆகிய நவீன தொழில்நுட்பத்தின் மூலமும் கண்டறியலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட ஸ்கேன்கள் கல்லீரலில் உள்ள கொழுப்பு பகுதியையும் கல்லீரல் சேதத்தின் அளவையும் துல்லியமாக அளவிடுகின்றன. இதை கண்டறிய மற்ற பரிசோதனைகளை பொறுத்தவரை உணவுக்கு முந்தைய ரத்த சர்க்கரை அளவு, எச்பிஏ1சி அளவு, ரத்த கொழுப்பு அளவு, ட்ரைகிளிசரைடு அளவு மற்றும் எச்ஓஎம்ஏ இன்சுலின் அளவு ஆகிய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. வாழ்க்கை முறை மாற்றம், எடை குறைப்பு, ஆரோக்கியமான உணவு பழக்கம் மற்றும் நல்ல நீரிழிவு கட்டுப்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் இதை குணப்படுத்த முடியும். குறைந்த கொழுப்பு, சர்க்கரையுடன் கூடிய ஆரோக்கியமான சமச்சீர் உணவு மற்றும் அதிகப்படியான இனிப்புகள், கெட்ட கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகள், அதிக கலோரிமிக்க உணவுகள் ஆகியவற்றை தவிர்ப்பது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

வழக்கமான நடைபயிற்சி, வாரத்திற்கு 3 முதல் 4 முறை ஏரோபிக் உடற்பயிற்சிகள், உடல் பருமன், அதிக எடை உள்ளவர்களின் எடை குறைப்பு ஆகியவற்றின் காரணமாக இதை குணப்படுத்த முடியும். நோய் பாதிப்பு உள்ள அனைவரும் அடிப்படை ரத்த பரிசோதனைகள் மற்றும் கல்லீரல் ஸ்கேன் மூலம் தங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை பரிசோதித்துக்கொள்வது மிகவும் நல்லது. குறைந்த அளவில் பிரச்னை உள்ளவர்கள் மருந்து எடுத்துக்கொண்டால் போதுமானதாகும். குணப்படுத்துவதை விட தடுப்பதே சிறந்தது. கல்லீரல் கொழுப்பு நோய்க்கு எளிய பரிசோதனை மூலம் எதிர்காலத்தில் பெரிய அளவில் கல்லீரல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

உடற்பயிற்சி
கல்லீரலை ஆரோக்கியமாக பராமரிக்க தினந்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்வது கட்டாயம். வழக்கமான உடற்பயிற்சி ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது கல்லீரல் சரியாக செயல்பட உதவுகிறது. கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கும் இன்சுலின் எதிர்ப்பை குறைக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30 நிமிடம் வேகமான நடைபயிற்சி, ஜாக்கிங் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

ஆரோக்கியமான உணவு
கல்லீரலை ஆரோக்கியமாக பராமரிக்க ஆரோக்கியமான உணவு அவசியம். பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் உள்ளிட்ட நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும் அதே நேரத்தில், பதப்படுத்தப்பட்ட மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்தால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளும் கல்லீரலை பாதுகாக்க உதவும்.

கீரைகள்: பசலைக்கீரை, முட்டைகோஸ் மற்றும் கொலார்ட் கீரைகளில் குளோரோபில் நிறைந்துள்ளது, இது ரத்தத்தில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகிறது.

கோஸ் வகைகளை சேர்ந்த காய்கறிகள்: ப்ரோக்கோலி, காலிபிளவர் மற்றும் பிரஸ்ஸல்ஸ் போன்றவை கல்லீரலில் உள்ள நச்சுகளை நடுநிலையாக்க உதவும் பொருட்கள் உள்ளன.

பெர்ரி பழங்கள்: பெர்ரி பழங்கள்.

கொட்டைகள் மற்றும் விதைகள்: பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் சியா விதைகள்.

மது அருந்துவதை கட்டுப்படுத்த வேண்டும்
அதிகப்படியான மது குடிக்கும்போது அது கல்லீரல் பாதிப்பு மற்றும் ஈரல் அழற்சிக்கு வழிவகுக்கும். நீங்கள் மது குடிப்பவராக இருந்தால், அதை குறைந்த அளவு எடுத்துக்கொள்வது நல்லது. பெண்களாக இருந்தால் ஒரு நாளைக்கு ஒரு முறை மிகக்குறைந்த அளவும், ஆண்களாக இருந்தால் இரண்டு முறை மிகக்குறைந்த அளவும் எடுத்து கொள்ளலாம். இடைவெளி இல்லாமல் குடிக்கும்போது அது உங்கள் கல்லீரலை வெகுவாக பாதிக்கும். அதேபோல, புகை பிடித்தல் மற்றும் புகை பிடிக்கும் இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

The post இன்று உலக கொழுப்பு கல்லீரல் நோய் தினம்; கொழுப்பு கல்லீரல் நோய் தாக்கம் அதிகரிப்பு: குணப்படுத்த செய்ய வேண்டியது என்ன?.. டாக்டர்கள் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : World Fatty Liver Disease Day ,in ,of Fatty Liver ,Dinakaran ,
× RELATED வங்கதேசத்தில் மாணவர்கள்...