×

திருப்பம் தரும் திருப்புகழ்

அண்ணனும் தம்பியும் 2

கந்தனின் குரல் கேட்டு சிந்தை மகிழ்ந்த அருணகிரிநாதர், தலம் தோறும் சென்று தமிழ்க் கடவுளைப் பாடும் தன் தன்னிகரற்ற பயணத்தைத் தொடங்கினார்! ‘செய்ப்பதி’ என்று சிறப்புப் பெயர் பெற்ற வயிலூர் சென்று அங்கு அருள்பாலிக்கும் பொய்யாக் கணபதி சந்நதி முன் நின்று தம்பியின் புகழ் பாட அண்ணனின் அனுமதியைப் பெற்றார். கைத்தலம் நிறைகனி அப்பமொடு அவல் பொரிகப்பிய கணபதியை வணங்கினார்.

‘‘வடிவேலனை வள்ளி நாயகியோடு சேர்த்து வைத்த கல்யாண கணபதியே!
கற்பக விநாயகரே!
‘‘செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்!
‘‘கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ!

‘‘வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
வனச பரிபுர பொற்பத அர்ச்சனை
மறவேனே!

என மனம் உருகி வேண்டி மலர் தூவி
வணங்கினார்.
`காசினியை வலம் வந்து கனி பெற்ற
கணபதியே!

அப்பம் அவல் பொரியை ஆகாரமாக
ஏற்பவரே!
வித்தை கற்பிக்கும் விநாயகரே!

வினைகளைத் தீர்த்து, கற்பக விருட்சம்
போல
வேண்டியதை பக்தர்களுக்கு அருள்பவரே!
அரன் மகனே! அம்பிகையின் பாலரே!’
`முத்தமிழின் இலக்கணங்களையும்,
மகாபாரதத்தையும்
கல் எழுத்தாய் நிலைபெறச் செய்த
கஜமகனே!’

குறமகளான வள்ளியை குமரனுக்கு மணம் முடித்து வைக்க யானை உருவில் வந்து அக்கணமே மணம்புரிய ஏற்பாடு செய் இப முகனே! தேவலோகத்தில் விளங்கும் கற்பக விருட்சம், காமதேனு, சிந்தாமணி மூன்றையும்விட பக்தர்கள் எண்ணும் வேண்டுகோளை இமைப் பொழுதிலேயே நிறைவேற்றிவைக்கும் வரப்பிரகாசரே! என் அகங்கனிந்து உருகிய அருணகிரியாரின் அற்புதமான இத்துதிகேட்டு விநாயகர் ஊங்களிந்தார். அடுத்தவினாடியே ‘அற்புதச் சொற்பதத்திருப்புகழை எப்படி எல்லாம் பாடவேண்டும், திருப்புகழின் கருப்பொருள் எவை எவை என வயலூர் முருகன் வாய்மலர்ந்தார் வரம் அளித்தார்.

‘‘பக்கரை விசித்ரமணி பொற்கலணை
இட்டநடை
பட்சி எனும் உக்ரதுரகமும் நீபப்
பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு
பட்டொழிய
பட்டு உருவ விட்டருள் கை வடிவேலும்
திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியும் முற்றிய பன்னிரு தோளும்’’

‘‘செல்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு’’ என எனக்கு அருள்கை மறவேனே! வாக்கிற்கு அருணகிரியின் வளமார்ந்த திருப்புகழ் முழக்கம் வயலூர் திருத்தலத்திலிருந்தே ஒலிக்கத் தொடங்கியது. ஓங்கார வடிவிலே உயர்ந்த தோகையை விரித்து ஒப்பற்ற நடனம் ஆடும் மயிலையும், பன்னிரு தோள்களிலே விளங்கும் கடப்பமலர் மாலையையும், மலைகளைத் தகர்க்கும் மகோன்னத வேலாயுதத்தையும், உதயம் கண்டு கூவும் ஒப்பற்ற சேவலையும், சகல நலங்களையும் தந்தருளி பக்தர்களைப் பரிபாலிக்கும் திருவடிக்
கமலங்களையும்,

ஆறிரு தடந்தோளையும் செய்ப்பதி எனப் பெயர் பெற்ற செவ்வேளின் இவ் அழகிய வயலூர் திருத்தலத்தையும் திணைக்களன்களாக வைத்து உன்னதத் திருப்புகழை நலம் நல்கும் தலம் பல தரிசித்து பாடுவாயாக! `முத்தைத்தரு’ என திருவண்ணாமலையில் அடி எடுத்துக் கொடுத்தும், அனுபூதி நிலையில் அமர்த்தியும், பின் வயலூர் சென்று வழிபடுக என ஸ்தல யாத்திரைக்கு நெறிப்படுத்தியும், மயில், கடப்பாமலை, வேல், சேவல், திருவடிக் கமலங்கள், ஆறிரு தடந்தோள்கள், அருள் பொழியும் படைவீடுகள், அரிய தலங்கள் என அனைத்தையும் வகைப்படுத்திப் பாடப் பணித்தார். தத்த, தாத்த, தன, தான, தந்த, தாந்த, தன்ன, தய்ய என எட்டு வகை தாளங்கள் இசைந்து வர செம்மொழித் தமிழ் அற்றை நாள் வரை சந்திக்காத சந்த ஓசையில் அருவி தோற்க அருணகிரிநாதர் பாடத் தொடங்கினார்.

திருச்சிக்கு அருகே உள்ள வயலூர் தலம் குமார வயலூர், அக்னீசுவரம் என அழைக்கப்படுகிறது. பொதுவாகக் குன்றுகள் தோறும் குடியிருக்கும் குமரப் பெருமான் குறிஞ்சிக் கடவுளாகப் போற்றப்படுகிறார். ஆனால் வயலூரில் ஒரு மாறுதலாக மருத நிலத்தில் வயல்கள் சூழ்ந்த நிலையில் வடிவேலன் திருக்கோயில் கொண்டு அருள்கின்றார். பாதக மலங்களை நீக்கும் பாதகமலங்களைக் காட்டி அடியேனை ஆட்கொண்டு அருந்தமிழ் பாடவைத்த ஆறுமுகரே! உங்கள் கருணையை நான் என்றும் மறவேன் என்று பதறி உருகிக் கனிந்து குழைந்து
போற்றுகிறார் அருணகிரியார்.

‘‘வயலி நகரியில் அருள் பெற மயில்மிசை
உதவி பரிமள மதுகர வெகு வித
வசை மலரடி கனவிலும் நனவிலும்
மறவேனே!’’

நலம் பல விளைக்கும் திருப்புகழை தலம் பல சென்று தரிசித்துப் பாட வாய்ப்பை உருவாக்கித் தந்த வயலூர் முருகனை
நன்றியுடன் நினைந்து பணிந்து தொழுகின்றார்.

`‘பாத பங்கயம் உற்றிய உட்கொண்டு
ஓதுகின்ற திருப்புகழ் நித்தம்
பாடும் அன்பது செல்ப்பதியில் தந்தவன்
நீயே!’’

பொதுமறை எனப் புகழ் பெற்று விளங்குகின்ற இரண்டடி திருக்குறளை திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழ் உலகுக்குத் தந்தருளினார். அக்காலத்திலேயே திருக்குறள் மிகவும் புகழ் பெற்று விளங்கியதால் பல புலவர்கள் திருவள்ளுவரையும், அவரின் குறளையும் போற்றிப் புகழ்ந்து பாடினர். அச்செய்யுட்கள் அனைத்தும் தற்சிறப்புப் பாயிரம் எனத் தலைப்பிடப்பட்டு விற்பனையாகும் திருக்குறள் புத்தகங்களில் முதலில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

‘கடுகைத் துளைத்து எழுகடலைப் புகட்டி
குறுகத் தறித்த குறள்’

என்றும் ‘அணுவைத் துளைத்து எழுகடலைப் புகட்டி’ என்றும் நாம் அறிந்த பாடல் வரிகள் தற்சிறப்புப் பாயிரத்தில் அடங்கி உள்ளவையே. திருக்குறளுக்கு அடுத்தபடி வாழ்ந்த காலத்திலேயே அருணகிரியாரும். புலவர்களால் போற்றப்பட்டு அவரின் திருப்புகழ் நூலும் பல அறிஞர்களால் பாராட்டப்பட்டு இருபதிற்கும் மேற்பட்ட வாழ்த்துப் பாடல்கள் திருப்புகழுக்கும் தற்சிறப்புப் பாயிரமாக அமைந்துள்ளது அருணகிரி நாதரின் புலமைச் சிறப்பையும், ஆறுமுகப்பெருமானின் அளப்பருங் கருணையையும் தெள்ளத் தெளிவாக நமக்குத் தெரிவிக்கின்றது அல்லவா!
‘அறிவும் அறி தத்துவமும்
அபரிமித வித்தையும் அறி
என இமைப் போதில் வாழ்வித்த வேதியன்!’’

என கந்தபெருமான் தனக்கு அளித்த வரப்பிரசாத வாழ்வை திருப்புகழ் பாக்களில் பல இடங்களில் நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுகின்றார். அருணகிரியாரின் திருப்புகழ் திசை நான்கிலும் புகழ் பெற்று அவர் வாழ்ந்த காலத்திலேயே வரலாறு படைத்தது!

“பூர்வ, பட்சிம, தட்சிண
உத்தரதிக்குள் பக்தர்கள்
அற்புதம் என ஓதும்
சித்ர கவித்துவ சத்தம் மிகுத்த
திருப்புகழை சிறிது அடியேனும்
செப்பு எனனைத்து
உலகிற் பரவு தரிசித்த
அனுக்ரகம் மறவேனே’’

என்று திருச்செங்கோடு திருப்புகழில் தெரிவிக்கிறார். மண்ணுலகில் மட்டும் அல்ல! விண்ணுலகத் தேவர்களும் திருப்புகழ் முழக்கம் கேட்டு சிந்தை களிப்பதாக காவடிச் சிந்து அண்ணாமலை ரெட்டியார் தெரிவிக்கின்றார்.!

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

 

The post திருப்பம் தரும் திருப்புகழ் appeared first on Dinakaran.

Tags : Kandan ,Arunagirinath ,Ganesha ,Seipathi ,Vailur ,
× RELATED விஷச் சாராயம் பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு