×

கனடாவுடன் தொடக்க லீக் ஆட்டம்; 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்கா அபார வெற்றி: ஜோன்ஸ் கவுஸ் அதிரடி

டாலஸ்: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில், கனடா அணியுடன் மோதிய அமெரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. டாலஸ், கிராண்ட் பிரெய்ரி அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில் (ஏ பிரிவு), டாஸ் வென்ற அமெரிக்க அணி கேப்டன் மொனாங்க் படேல் முதலில் பந்துவீச முடிவு செய்தார். கனடா அணி தொடக்க வீரர்களாக ஆரோன் ஜான்சன், நவ்நீத் தலிவால் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்தது. ஜான்சன் 23 ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த பர்கத் சிங் 5 ரன்னில் ரன் அவுட்டாக… கனடா 8 ஓவரில் 66 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து சரிவை சந்தித்தது. இந்த நிலையில், நவ்நீத் தலிவால் – நிகோலஸ் கிர்டன் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்தனர். தலிவால் 61 ரன் (44 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), நிகோலஸ் கிர்டன் 51 ரன் (31 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் ஷ்ரேயாஸ் மொவ்வா, தில்பிரீத் பஜ்வா அதிரடில் இறங்க, கனடா ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. தில்பிரீத் 11 ரன் எடுத்து ரன் அவுட்டானார். கனடா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது.மொவ்வா 32 ரன் (16 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), திலான் ஹேலிகர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அமெரிக்கா பந்துவீச்சில் அலி கான், ஹர்மீத் சிங், கோரி ஆண்டர்சன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 195 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் அமெரிக்கா களமிறங்கியது.ஸ்டீவன் டெய்லர், கேப்டன் மொனாங்க் இணைந்து துரத்தலை தொடங்கினர். 2வது பந்திலேயே டெய்லர் டக் அவுட்டாகி வெளியேற, அமெரிக்காவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. மொனாங்க் 16 ரன்னில் அவுட்டாக, அமெரிக்கா 6.3 ஓவரில் 42 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. எனினும், ஆண்ட்ரீஸ் கவுஸ் – ஆரோன் ஜோன்ஸ் இணைந்து அதிரடியில் இறங்க, அமெரிக்க ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அரை சதம் விளாசி அசத்திய இருவரும் 3வது விக்கெட்டுக்கு 131 ரன் சேர்த்தனர். கவுஸ் 65 ரன் (46 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். அமெரிக்கா 17.4 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 197 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஆரோன் ஜோன்ஸ் 94 ரன் (40 பந்து, 4 பவுண்டரி, 10 சிக்சர்), கோரி ஆண்டர்சன் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கனடா பந்துவீச்சில் கலீம் சனா, திலான் ஹேலிகர், நிகில் தத்தா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆரோன் ஜோன்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அமெரிக்கா 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

 

The post கனடாவுடன் தொடக்க லீக் ஆட்டம்; 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்கா அபார வெற்றி: ஜோன்ஸ் கவுஸ் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Canada ,America ,Jones Gaus ,Dallas ,USA ,ICC World Cup T20 ,Grand Prairie Arena ,Dallas, USA ,Dinakaran ,
× RELATED இந்தியா – கனடா இடையே நீடிக்கும் உரசல்.....