×

மாஜி சாம்பியன் இத்தாலி வீரரின் `சேம்சைட்’ கோலால் ரவுன்ட் 16 சுற்றுக்கு ஸ்பெயின் தகுதி: டென்மார்க்-இங்கிலாந்து ஆட்டம் டிரா

கெல்சென்கிர்சென்: ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றுள்ள 17வது யூரோ கோப்பை கால்பந்து தொடர், ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்றிரவு 12.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் கடந்த 2021ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த யூரோ கோப்பை கால்பந்து தொடரில் கோப்பை வென்ற இத்தாலி அணியும் ஸ்பெயின் அணியும் மோதின. ஏற்கனவே யூரோ கோப்பையை மூன்று முறை முத்தமிட்ட ஸ்பெயின் நேற்றைய போட்டியில் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இந்நிலையில் ஆட்டத்தின் 2வது பாதியில் ஸ்பெயின் வீரர் நிக்கோ வில்லியம்ஸ் அடித்த பந்தை இத்தாலி வீரர் ரிக்கார்டோ கலபியோரி தடுக்க முயல அது எதிர்பாராதவிதமாக ‘சேம் சைட்’ கோலாக மாறியது.

அதன் பிறகு இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கணக்கில் நடப்பு சாம்பியன் இத்தாலி அணியை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஸ்பெயின் அணி ரவுன்ட் 16 சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்று இரவு 9.30 மணிக்கு ஃபிராங்க்பர்ட் கால்பந்து அரங்கத்தில் நடந்த சி பிரிவு ஆட்டத்தில் டென்மார்க் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஹேரி கேன் மற்றும் 34வது நிமிடத்தில் டென்மார்க்கின் மொர்டென் ஜுல்மான்ட் தங்கள் அணிக்காக தலா ஒரு கோல் அடித்தனர்.

அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது. முன்னதாக நேற்று மாலை மியூனிக் கால்பந்து அரங்கத்தில் நடந்த சி பிரிவு ஆட்டத்தில் ஸ்லோவேனியா மற்றும் செர்பியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் ஸ்லோவேனியா அணி வீரர் சேன் கார்னிக் கோல் அடித்து அசத்தினார். அதன் பிறகு ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இந்த நிலையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதை சரியாக பயன்படுத்திய செர்பியா அணி வீரர் லூகா ஜோவிக் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் இந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

 

The post மாஜி சாம்பியன் இத்தாலி வீரரின் `சேம்சைட்’ கோலால் ரவுன்ட் 16 சுற்றுக்கு ஸ்பெயின் தகுதி: டென்மார்க்-இங்கிலாந்து ஆட்டம் டிரா appeared first on Dinakaran.

Tags : Spain ,of 16 ,Italy ,Denmark ,England ,Gelsenkirchen ,17th Euro Cup football ,Germany ,2021 Euro Cup ,
× RELATED யூரோ கோப்பை பைனல் ஸ்பெயின் – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை