×

அமெரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்: ஹோப் அதிரடி அரை சதம்

பிரிட்ஜ்டவுன்: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர்-8 சுற்று 2வது பிரிவு ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவை மிக எளிதாக வீழ்த்தியது. பார்படாஸ், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பாவெல் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஸ்டீவன் டெய்லர், ஆண்ட்ரீஸ் கவுஸ் இணைந்து அமெரிக்க இன்னிங்சை தொடங்கினர். டெய்லர் 2 ரன் மட்டுமே எடுத்து ரஸ்ஸல் வேகத்தில் சேஸ் வசம் பிடிபட்டார். கவுஸ் – நிதிஷ் குமார் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 48 ரன் சேர்த்தது. நிதிஷ் 20, கவுஸ் 29 ரன் (16 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் 11, கோரி ஆண்டர்சன் 7 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, ஹர்மீத் சிங் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

ஓரளவு தாக்குப்பிடித்த மிலிந்த் குமார் 19 ரன், ஷேட்லி வான் 18 ரன் எடுத்து அவுட்டாகினர். நோஷ்துஷ் கென்ஜிகே (1), சவுரவ் நேத்ரவால்கர் (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அமெரிக்கா 19.5 ஓவரில் 128 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
அலி கான் 14 ரன்னுடன் (6 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஆந்த்ரே ரஸ்ஸல் (3.5-31-3), ரோஸ்டன் சேஸ் (4-0-19-3) தலா 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினர். அல்ஜாரி ஜோசப் 2, குடகேஷ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 129 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது.

ஷாய் ஹோப், ஜான்சன் சார்லஸ் இணைந்து துரத்தலை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 67 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தது. சார்லஸ் 15 ரன் எடுத்து ஹர்மீத் சிங் பந்துவீச்சில் மிலிந்த் குமார் வசம் பிடிபட்டார். ஷாய் ஹோப் – நிகோலஸ் பூரன் ஜோடி அதிரடியாக விளையாடி ரன் சேர்க்க, வெஸ்ட் இண்டீஸ் 10.5 ஓவரிலேயே 1 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்து அபாரமாக வென்றது. ஹோப் 82 ரன் (39 பந்து, 4 பவுண்டரி, 8 சிக்சர்), பூரன் 27 ரன்னுடன் (12 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரோஸ்டன் சேஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அரையிறுதி வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் தக்கவைத்த நிலையில், சூப்பர்-8 சுற்றில் தொடர்ச்சியாக 2வது தோல்வியை சந்தித்த அமெரிக்கா வாய்ப்பை பறிகொடுத்தது.

The post அமெரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்: ஹோப் அதிரடி அரை சதம் appeared first on Dinakaran.

Tags : West Indies ,USA ,Bridgetown ,Super-8 round 2nd ,ICC World Cup T20 ,Kensington Oval, Barbados ,
× RELATED இன்று முதல் இங்கிலாந்துடன் 2வது டெஸ்ட்...