×

நெல்லை அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புதிய 6 மாடி கட்டிடப்பணிகள் விறுவிறுப்பு: நவம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டம்

நெல்லை: நெல்லை அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் புதிய 6 மாடி கட்டிடத்தின் கட்டுமானப்பணிகள் 70 சதவீதம் நிறைவு பெற்ற நிலையில் நவம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி தென் மாவட்ட மக்களின் மருத்துவ தேவையை 60 ஆண்டுகளுக்கு மேலாக பூர்த்தி செய்து வருகிறது. 1965ல் மருத்துவக்கல்லூரியானது. கடந்த 2019ம் ஆண்டில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 20 ஆயிரத்து 64 சதுர அடி பரப்பளவில் 7 மாடி கட்டிடம் கொண்ட பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.

இதன் காரணமாக பழைய மருத்துவமனையில் 1717 படுக்கை வசதிகள், உயர் சிறப்பு மருத்துவமனையில் 330 படுக்கை வசதிகள் என மொத்தம் 2,047 படுக்கை வசதிகள் கொண்ட பெரிய மருத்துவமனையாக உருவெடுத்துள்ளது. இங்கு பொதுமருத்துவம், அறுவை சிகிச்சை, நுரையீரல், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், ரத்த மருத்துவம், ஊட்டச்சத்து மருத்துவம், தீக்காய சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், குழந்தை மருத்துவம், நரம்பியல், இதயவியல், சிறுநீரகவியல், இரைப்பை, குடலியல் துறை, ஊனமுற்றோர் மருத்துவம், மனநல மருத்துவம், புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பல தனியார் மருத்துவமனைகளில் முடியாத மருத்துவ சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து நெல்லை அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ மாணவ, மாணவிகள் 95 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்று வருகின்றனர். மருத்துவக் கல்வியிலும், மருத்துவ சேவையிலும் சாதித்து வரும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு தேவை கருதி கூடுதலாக மருத்துவமனை கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது.

இதையடுத்து பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடத்திற்கு அருகே ரூ.70 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் 6 மாடி கட்டிடம் அமைப்பதற்கான பணிகள், கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. 1 லட்சத்து 98 ஆயிரத்து 371 சதுர அடி பரப்பில் நடந்து வரும் கட்டுமானப் பணிகள், தற்போது 65 முதல் 70 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தரைத்தளம் மற்றும் 6 மாடிகள் கட்டப்பட்டு, ஒவ்வொரு தளத்திலும் ‘பால்ஸ் சீலீங்’ அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதோடு ஒவ்வொரு வார்டில் உள்ள படுக்கைக்கும் ஆக்சிஜன் சப்ளை செய்வதற்கான குழாய்கள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அதுபோல் லிப்ட் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணிகள் நவம்பர் மாதத்திற்குள் முழுவதுமாக நிறைவு பெற்றுவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவசர சிகிச்சை பிரிவு இடமாறுகிறது
பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நரம்பியல், இதயவியல், குடலியல் என பல்வேறு அதிநவீன சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் அவசர சிகிச்சைப்பிரிவு, பழைய மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்திலேயே அவசர சிகிச்சைப்பிரிவு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி தற்போது கட்டுமானப் பணிகள் நடந்துவரும் 6 மாடி புதிய கட்டிடத்திற்கு அருகே அவசர சிகிச்சைப்பிரிவு அமைக்க பணிகள் நடந்து வருகின்றன. அவசர சிகிச்சை தேவைப்படும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சையை உடனடியாக வழங்க வசதியாக இந்த பிளாக் அமைக்கப்படுகிறது. இங்கு எளிதில் காப்பாற்றப்படும் நிலையில் இருப்பவர்கள் பச்சை நிறம், ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் மஞ்சள் நிறம், மிக ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் சிவப்பு, காப்பாற்றக்கூடிய நிலையை கடந்தவர்கள் கருப்பு நிறம் என நிறங்கள் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் பிரிக்கப்பட்டு உயிர்காக்கும் சிகிச்சையை வழங்க வசதியாக கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன.

The post நெல்லை அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புதிய 6 மாடி கட்டிடப்பணிகள் விறுவிறுப்பு: நவம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Nella Government Multipurpose High Specialty Hospital ,Government Multipurpose High Specialty Hospital ,Nella Government Hospital Medical College South ,Government of Nella Government Multipurpose High Specialty Hospital ,Dinakaran ,
× RELATED 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்