×

திருக்காவளம்பாடி ராஜகோபால சுவாமி

பூமிதேவிக்குப் பிறந்ததாலோ என்னவோ நரகாசுரன் இந்த பூமியில் உள்ளவை அனைத்தும் தனக்கே சொந்தம் என்று கருத ஆரம்பித்தான். வேட்கை அதிகரிக்க, அதிகரிக்க ஆசையின் எல்லையும் விரிவடைந்துகொண்டே போயிற்று. அதனால்தான் பூமி சார்ந்த சொத்துகள் அனைத்தையும் தன் ஆளுகைக்குள் கொண்டுவந்ததோடு, தேவருலகத்திலும் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சித்தான். அந்த நடவடிக்கையின் பிரதான கட்டமாக தேவருலகத்தையே தன் வசமாக்கிக்கொண்டான்.
வரம்பு மீறிய அவன் செயலால் அதிர்ந்து போனான் தேவேந்திரன். தன் ஆக்கிரமிப்பை, பூமியைத் தாண்டி வானுலகிலும் விஸ்தரிக்கும் அவனது கொடுங்கோன்மையால் கதிகலங்கிப் போனான்.

அராஜகத்தாலேயே தன் உலகைப் பறித்துக்கொள்ளும் கொடுமையை நிகழ்த்திய அரக்கனை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நேராக பகவான் கிருஷ்ணனை சரணடைந்தான். தன்னைக் காப்பதோடு, தான் இழந்து நிற்கும் பொக்கிஷங்களையும் தனக்கு மீட்டுத் தரவேண்டும் என்று அவரிடம்
கேட்டுக்கொண்டான். கிருஷ்ணன் சற்று யோசித்தார். ஒரே கல்லில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாங்காய்களை வீழ்த்தும் வல்லமை கொண்ட அவர், நரகாசுரனின் கொடுஞ்செயல்கள் எத்தனை பேருக்கு எவ்வளவு வலி கொடுக்கக்கூடியது என்பதையும், அந்தச் செயல்களை அவனைப் பெற்ற தாயாலேயே பொறுத்துக் கொள்ள முடியாது என்பதையும் உலகுக்கு எடுத்துச் சொல்ல விரும்பினார். ஆகவே, நரகாசுர வதத்திற்கு சத்யபாமாவையும் உடன் அழைத்துச் சென்றார்.

சத்யபாமாவுக்கும், நரகாசுரனுக்கும் என்ன சம்பந்தம்? இரண்யாட்சகன் என்ற அரக்கன் பூமியைப் பந்தாகச் சுருட்டி எடுத்துக்கொண்டுபோய், பாதாள உலகத்தில் ஒளித்துவிட்டான். அவனுடைய அந்த நடவடிக்கை, பிரம்மனின் சிருஷ்டியையே பழிப்பதுபோல இருந்தது. பிரபஞ்சத்திலிருந்து உலகம் மறையுமானால், பிற கோள்களின் செயல்பாடுகளும் ஸ்தம்பித்துவிடுமே என்ற கவலையும் அனைவருக்கும் ஏற்பட்டது. உடனே அவர்கள் அனைவரும் மஹாவிஷ்ணுவைத் துதித்தார்கள். பூமியை மீட்டு அருளவேண்டுமாறு கேட்டுக்கொண்டார்கள். பாதாள லோகத்தைத் தன் ஆட்சிக்குட்பட்டதாக வைத்திருந்த இரண்யாட்சகனை சந்திக்க வேண்டுமானால், தான் கொஞ்சம் மூர்க்கமான அவதாரம் எடுக்க வேண்டும் என நினைத்தார், மஹாவிஷ்ணு.

அந்த பாதாள லோகத்தையே குடைந்து சென்று பூமிதேவியை மீட்க வராக அவதாரம் சிறந்தது என்று கருதி, அப்படியே உருமாறினார். தான் எதிர்த்த அல்லது தன்னை எதிர்த்த யாரையுமே இப்படி ஒரு கோலத்தில் இரண்யாட்சகன் கண்டதில்லை. அந்த ஆரம்ப அதிர்ச்சியிலேயே அவன் நிலைகுலைந்து போனான். அது வராஹருக்கு மிகவும் சாதகமாகப் போயிற்று. வெகு எளிதாக அவனை வதம் செய்து பூமிதேவியை மீட்டுக் கொண்டுவந்தார். தான் மீட்கப்பட்டதில் பெரிதும் நிம்மதியடைந்த தேவி, வராகரை ஆலிங்கனம் செய்து மகிழ்ந்தாள். அவளுக்கு நரகாசுரன் மகனாகப் பிறந்தான். பல நாட்கள் இரண்யாட்சகனிடம் சிறைப்பட்டிருந்ததாலோ, அரக்கத்தனம் மிகுந்த சூழலை சுவாசித்ததாலோ என்னவோ, அவளுக்குப் பிறந்தவனும் கொடூரகுணம் கொண்டவனாகிப் போனான்.

அதுமட்டுமல்ல, அராஜக அசுரனை வராகர் வதைத்தபோது பொங்கி வந்த கோபாக்கினி முற்றிலும் தணியாத நேரத்தில் பூமிதேவியை அரவணைத்ததாலும் அந்த மூர்க்கமே நரகாசுரனாகத் தோன்றியிருக்கவும் கூடும்.  அந்த பூமிதேவிதான், கிருஷ்ணனின் மனைவியாக, சத்யபாமாவாக புது உருக்கொண்டாள். உலகோரைத் துன்புறுத்துபவன் சொந்த மகனே ஆனாலும் அவனை மன்னிக்கவோ, அவன் செயல்களை நியாயப்படுத்தவோ அந்தத் தாய்க்கு அதிகாரமில்லை; அவள் மனம் அதற்கு விழையாது என்ற பேருண்மையை உலகுக்கு நிலைநாட்ட, நரகாசுரன் வதத்திற்கு சத்யபாமாவையும் உடன் அழைத்துச் சென்றார் கிருஷ்ணர்.

இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. தன் தாயாரின் கரத்தால் மட்டுமே தனக்கு மரணம் நிகழவேண்டும் என்ற வரம் பெற்றிருந்தான் நரகாசுரன். அதனாலேயே சத்யபாமாவை அவர் உடன் அழைத்துச் சென்றார். அசுரனுடன் போரில் ஈடுபட்டு மயங்கினாற்போல கிருஷ்ணன் நடிக்க, அது உண்மை என்று கருதி, வெகுண்டு, நரகாசுரனை மாய்த்தாள் சத்யபாமா. (இது கர்ண பரம்பரை கதை. ஆனால், பாகவதம் கிருஷ்ணனே நரகாசுரனைக் கொன்றதாகச் சொல்கிறது) நரகாசுரனிடமிருந்து இந்திரலோகத்தை மீட்ட கிருஷ்ணர், அதை இந்திரனிடம் வழங்கினார். தனக்கு மீண்டும் தன் ராஜ்யத்தையும், தன் பதவியையும் மீட்டுத் தந்த கிருஷ்ணருக்கு நன்றி விழா எடுத்தான் இந்திரன்.

அதற்கு அவன் தேர்ந்தெடுத்த இடம், திருக்காவளம்பாடி என்ற இந்த திவ்யத்தலம்தான்! தான் அமர்ந்திருந்து, பிறகு நரகாசனின் ஆளுமையால் தோஷம் பிடித்து, மறுபடி தன்னை வந்தடைந்திருக்கும் சிம்மாசனத்தில் கிருஷ்ணனை அமரச் செய்து அவருக்குப் பட்டாபிஷேகம் நடத்தி மகிழ்ந்தான். கிருஷ்ணன் அமர்ந்த சிம்மாசனம், மீண்டும் முந்தைய பொலிவைப் பெற்றது. பிறகு கிருஷ்ணனைத் தன் இந்திர உலகத்துக்கு அழைத்துச் சென்று கூடுதலாக மரியாதை செய்தான் இந்திரன். அப்போது அங்கே பாரிஜாத மலர் சொரியும் மரத்தைப் பார்த்து வியந்தாள் சத்யபாமா. அதன் வெண்மை இதழ்களும், சிவந்த காம்பும், மனதை மலர்விக்கும் நறுமணமும் அவளைப் பெரிதும் கவர்ந்தன.

மண் தரையில் வெண் நட்சத்திரங்களாக உதிர்ந்து சிதறியிருந்த அந்த மலர்கள் தன் வாசத்தால் அந்த பிராந்தியத்தையே மயக்கிக் கொண்டிருந்தது. தனக்கு அந்த மலர்கள் வேண்டும் என்று கிருஷ்ணனிடம் கேட்டாள் சத்யபாமா. இன்றைக்கு இந்த மலர்கள் வேண்டும் என்று சிறு குழந்தை விருப்பமாக சத்யபாமா கேட்கிறாளே, இன்று மட்டும் இந்த மலர்கள் கிடைத்தால் இவளுக்குப் போதுமா; நாளை, நாளை மறுநாள் என்று மறுபடி இந்த மலர்களுக்காக அவள் ஏங்க மாட்டாளா; அப்படியானால் தினம் தினம் இந்த மலர்களைப் பெறும் வகையில் இந்த மரத்தையே துவாரகைக்குக் கொண்டு சென்று அங்கே நட்டுவிட்டால், அது அவளுடைய விருப்பத்தை நிரந்தரமாகப் பூர்த்தி செய்யாதா என்றெல்லாம் யோசித்தார் கிருஷ்ணர்.

அதோடு இந்திரனுக்காக அவனுடைய உலகத்தையே மீட்டுக் கொடுத்திருக்கிறோம், நாம் கேட்டால் இந்த மரத்தைத் தரமாட்டானா என்ன என்றும் சிந்தித்தார். ஆனால் இந்திரன் அதற்கு உடன்படவில்லை. பகவான் தனக்குச் செய்த உதவிக்குப் பிரதி உபகாரமாக அதை அவருக்கு அளிக்க அவன் தயாராக இல்லை. ஆனால் அவன் மறுத்தது கிருஷ்ணருக்குப் பெருத்த அவமானமாகப் போய்விட்டது. நரகாசுரனை வதம் செய்து, மொத்த தேவருலகத்துக்கே நன்மை அருளிய தனக்கு இந்த மரத்தை அளிக்க இவனுக்கு மனம் வரவில்லையே என்று கோபப்பட்டார். உடனே தன்னையும் மீறி, கிட்டத்தட்ட போர் சூழ்நிலையில் அவனை வென்று, அந்த மரத்தை எடுத்து வந்து துவாரகை பூமியில் பதித்துவிட்டார்.

இந்த சம்பவத்தை, ‘ஏவிளம் கன்னிக்காகி இம்னையவர்கோனைச் சென்று காவளம் கடிது இறுத்துக் கற்பகம் கொண்டுபோந்தாய்’ என்று திருமங்கையாழ்வார் தம் பாசுரத்தில் வர்ணிக்கிறார். அடுத்து துவாரகையில் தன் வீட்டில்தான் பாரிஜாத மரம் இருக்கிறது என்று சத்யபாமா கர்வப்பட்டு, ருக்மிணியிடம் பெருமைபட்டுக்கொண்டதும், அதைக் கண்ட கிருஷ்ணர், மரம் சத்யபாமா வீட்டில் இருந்தாலும், அது தன் கிளைகளை சாய்த்து, மலர்களனைத்தையும் ருக்மிணி வீட்டிலேயே சொரியும்படி செய்ததும், சத்யபாமாவின் ‘கர்வபங்க’ கதை. ஆனால், திருக்காவளம்பாடியில் கிருஷ்ணர் இந்தக் கதைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவராக, ருக்மிணி&சத்யபாமா சமேதராக, ராஜகோபாலனாக, புன்முறுவல் பூத்தபடி தரிசனம் தருகிறார்.

கையில் மாடு மேய்க்கும் சாட்டையுடன் இவர் திகழ்வது, தன்னை நாடிவரும் பக்தர்களின் மனதை எந்த சலனத்துக்கும் ஆட்படாதபடி கட்டுப்படுத்துவதைப் புரிய வைக்கிறது. வலது கரத்தில் சாட்டையைப் பற்றியபடி, இடது கரத்தை பசு மாட்டின் மீது வைத்து ஒய்யாரமாகக் காட்சியளிக்கிறார்.கருவறை மண்டபத்தின் மேல் விதானத்தில் கிருஷ்ண லீலைகள் ஓவியங்களாகப் பரிமளிக்கின்றன. பாரிஜாத மரமே இத்தலத்தின் விருட்சமாகவும் திகழ்ந்து, புராண சம்பவங்களை மெய்ப்பிக்கிறது.
இப்பெருமானைக் கண்டு களிக்கும் பேறு பெற்றவர்கள் இருவர்: ஒருவர், நீண்ட தவமிருந்து அப்பேற்றினைப் பெற்ற விஷ்வக்சேனர் என்ற சேனை முதலியார்; அடுத்தவர், மங்கை மன்னன் எனப்படும் திருமங்கையாழ்வார்.

இவ்விருவரின் வேண்டுகோளின்படி, துவாரகை போன்றே விளங்கிய இந்தத் தலத்தில் நிரந்தரமாக அர்ச்சாவதார சேவை சாதிப்பதாக பகவான் வாக்களித்தார்; அதை நிறைவேற்றவும் செய்தார். இதுவே அவருடைய வாழ்விடம் என்பதால், இந்தத் தலம் திருக்காவளம்பாடி என்றானது. தட்சன் சிவபெருமானை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே பிற அனைவரையும் அழைத்து, அவரை மட்டும் அழைக்காமல் யாகம் இயற்றினான். அதோடு நில்லாமல், அந்த நடவடிக்கைக்கு நியாயம் கேட்டு வந்த தன் மகளும், ஈசனின் மனைவியுமான தாட்சாயணியையும் அவன் மதிப்புக் குறைவாக நடத்தினான். இதைப் பொறுக்கமாட்டாத அம்பிகை அந்த யாக குண்டத்திலேயே வீழ்ந்து தன்னை மாய்த்துக்கொண்டாள். இது அறிந்து பெருங்கோபம் கொண்ட ஈசன், ருத்திர தாண்டவம் ஆடினார்.

அவரது சடைமுடி பூமியில் பட்ட இடமெல்லாம் அதில் தெறித்து விழுந்த கோபாக்கினி தனித்தனி சிவரூபமாக மாறி நின்றது. இப்படி அமைந்த சிவரூபங்கள் மொத்தம் பதினொன்று. இந்தப் பதினொரு உருவங்களும் அதே கோப ஜ்வாலையுடன் தனித்தனியே சினத்துடன் நடனமிட, பிரபஞ்சமே குலுங்கி, கலங்கியது. அனைவரும் மஹாவிஷ்ணுவை நாடி தங்களைக் காக்கும்படி கெஞ்ச, அவர் பதினொரு எம்பெருமான்களாக உருமாறி, பதினொரு சிவ ரூபங்களையும் அமைதியாக்கி, ஒரே உருவாக்கினார். தன் கோபம் தணிந்த ருத்ரன், தன்னுடைய பதினொரு ருத்ர ரூபங்களையும் சாந்தப்படுத்திய பதினொரு விஷ்ணு வடிவங்களும் தனித்தனியே கோயில் கொண்டு அருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

அதன்படி எம்பெருமான் கொலு விருக்கும் கோயில்களைத்தான் இந்த நாங்கூர் திவ்ய தேசத்தில் பதினொரு கோயில்களாக, ஒன்றன் பின் ஒன்றாக நாம் தரிசித்து வருகிறோம். அவற்றில் ஒன்றுதான் இந்தத் திருக்காவளம்பாடி. ருக்மிணி-சத்யபாமா ஒருங்கிணைந்த அம்சமாக, மடவரல் மங்கை என்ற செங்கமல நாச்சியாராக தாயார் தனியே தரிசனம் தருகிறார். கண்ணபிரானின் அருட்கடாட்சம் அவர்தம் பக்தர் மீது குறைவின்றி பொழிவிக்குமாறு கோரும் பாவனையில், தாயார் மங்கள ஜோதியாகப் புன்னகைக்கிறார். தலவிருட்சமான பாரிஜாத மலரின் மணத்தை நுகரும் அதே வேளையில், மானசீகமாக புல்லாங்குழலின் கிருஷ்ணகானமும் மனதை நிறைவிக்கும் பேருண்மையை, இக்கோயிலுக்கு வந்து, அனுபவித்துதான் புரிந்துகொள்ள முடியும்.

தியான ஸ்லோகம்

“ப்ரக்யாதே சிவகீத நாமநிபுரே ஸ்ரீ க்ருஷ்ண தேவ: ப்ரபு:
தத்தேவி ம்ருக சாப காந்த நயநா ஹேமாப்ஜ ராஜத்ஸர:
வேதா மோத விமாநராஜநிலய: பூர்வாப்தி ஸம்வீக்ஷண:
ஸாந்நித்யம் க்ருதவாந் ஸுதர்ஸன கணைஸ் ஸாகம் பவாநீபதே:’’

எப்படிப் போவது: சீர்காழி – பூம்புகார் பாதையில் 10 கி.மீ. தொலைவிலுள்ளது, திருக்காவளம்பாடி. வைத்தீஸ்வரன்கோயிலிலிருந்து 8 கி.மீ.; திருவெண்காட்டிலிருந்து 2 கி.மீ. பேருந்து, ஆட்டோ அல்லது வாடகைக் காரில் பயணிக்கலாம். கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 8 முதல் 11 மணி வரையிலும், மாலை 4 முதல் 6 மணி வரையிலும்.

முகவரி: அருள்மிகு ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில், காவளம்பாடி, கீழ்சட்டநாதபுரம் அஞ்சல், சீர்காழி வட்டம், நாகை மாவட்டம் – 609109.

The post திருக்காவளம்பாடி ராஜகோபால சுவாமி appeared first on Dinakaran.

Tags : Thirukkavalampadi Rajagopala Swami ,earth ,God ,Thirukavalampadi Rajagopala Swami ,
× RELATED இறைத்தேடலில் நிதானமே பிரதானம்!!