×

நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த கோயில் பூசாரி கைது

* புகார் அளிக்காமல் இருக்க ரூ.40 லட்சம் வரை பேரம்

* கோயிலுக்கு வந்த 50க்கும் மேற்பட்ட விஐபி வீட்டு பெண்களை மயக்கி வீடியோ எடுத்ததும் அம்பலம்

* ஆபாச வீடியோவால் பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியல் எடுப்பு

சென்னை: தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கடந்த 10 நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.  அவரிடம் நடத்திய விசாரணையில் தன்னை பற்றி போலீசில் புகார் அளிக்காமல் இருக்க ரூ.40 லட்சம் வரை பேரம் பேசியதும், இதுபோல் கோயிலுக்கு வந்த 50க்கும் மேற்பட்ட விஐபி வீட்டு பெண்களை சீரழித்ததும் விசாரணை மூலம் அம்பலமாகியுள்ளது.

கோவையை சேர்ந்த 30 வயது பெண் பொறியாளர் ஒருவர், 2021ம் ஆண்டு வேலை தேடி சென்னைக்கு வந்தார். பிறகு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி கொண்டு சிறு சிறு வேடங்களில் நடித்து வந்துள்ளார். ஆன்மீகத்தின் மீது உள்ள பற்றால் பாரிமுனையில் உள்ள பிரபல காளிகாம்பாள் கோயிலுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்படி சென்று வரும் போது கோயில் பூசாரியான கார்த்திக் முனுசாமி என்பவர் பழக்கமானார்.

இந்த பழக்கத்தால்,‘அம்பாள் தீர்த்தம்’ என்று தண்ணீர் ஒன்று கொடுத்து நடிகையை குடிக்க கூறியுள்ளார். அதன்படி அவர் குடித்ததும், சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். பிறகு மயக்கம் தெளிந்து பார்த்த போது, அவர் படுக்கை அறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை தெரிந்து கொண்டு அழுதுள்ளார். பிறகு, திருமணம் செய்வதாக நடிகையை பூசாரி கார்த்திக் முனுசாமி சமாதானம் செய்துள்ளார். இதற்கிடையே ஒருநாள் பூசாரி தனது விஐபி நண்பரை வீட்டுக்கு அழைத்து வந்து, நடிகையிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய முயன்றுள்ளார்.

இதனால் நடிகைக்கும், கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு பூசாரி குறித்து நடிகை விசாரித்த போதுதான் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்று தெரியவந்தது. இதுகுறித்து நடிகை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் நேரடியாக கோயிலுக்கு சென்று பூசாரிகளிடம் விசாரணை நடத்தினார். இதனிடையே கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி தலைமறைவாகினார்.

இதைத்தொடர்ந்து கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி நடிகை நேற்று முன்தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தலைமறைவாக இருந்து வந்த பூசாரி கார்த்திக் முனுசாமியை விருகம்பாக்கம் உதவி கமிஷனர் கருணாகரன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று அதிகாலை பூசாரியை செல்போன் சிக்னல் உதவியுடன் கைது செய்தனர். பிறகு பூசாரியை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: கோயிலில் கைதுசெய்யப்பட்ட கார்த்திக் முனுசாமி, அவரது தந்தை என அவர்களின் குடும்பத்தார் வழிவழியாக பூசாரிகளாக உள்ளனர். காளிகாம்பாள் கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் கோயில் அறங்காவலர் குழுவில் கார்த்திக் முனுசாமி குடும்பத்தினர் ஆதிக்கம் அதிகளவில் இருந்துள்ளது. அந்த வகையில் தொலைக்காட்சிகளில் பிரபலமான நடிகை என்பதால் கார்த்திக் முனுசாமி அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

வெளி உலகத்திற்கு தெரியாமல் வீடிலேயே தாலி கட்டி குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்படி இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சியை பூசாரி தனது மற்றொரு செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார். அதன் பிறகு பூசாரி கார்த்திக் முனுசாமிக்கும் நடிகைக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு நடிகையை பல முறை அவர் அடித்து உதைத்துள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் அளிப்பேன் என்று கூறியதும், பூசாரி, நடிகைக்கு தெரியாமல் எடுத்து வீடியோ மற்றும் குளிக்கும் போது எடுத்த நிர்வாண புகைப்படங்களை காட்டி மிரட்டி கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதனிடையே செல்போனில் பல பெண்களுடன் ஒன்றாக இருக்கும் வீடியோக்களை பார்த்தது குறித்து வெளியில் தெரிந்தால் பெரிய பிரச்னை ஆகிவிடும் என்று பூசாரி கார்த்திக் முனுசாமி, தனது மனைவி பிரியா மற்றும் தோழி சுவேதா ஆகியோர் மூலம் நடிகையிடம் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்காமல் இருக்கவும், வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ ரூ.40 லட்சம் வரை பணம் தருவதாகவும் பேரம் பேசியுள்ளார். ஆனால் நடிகை புகார் அளிப்பதில் உறுதியாக இருந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நடிகையை கார்த்திக் முனுசாமி அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததால், நடிகை வேறு வழியின்றி பாதுகாப்புக்காக நடந்த சம்பவத்தை உரிய ஆவணங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தலைமறைவாக இருந்த நிலையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வாங்க முயற்சி செய்து வந்த நிலையில் போலீசார் கார்த்திக் முனுசாமியை பொறிவைத்து பிடித்தனர்.

அதேநேரம், காவல் நிலையத்தில் நடிகை கொடுத்த ஆதாரங்கள் அனைத்தும் பூசாரியின் செல்போனில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது செல்போன், ஆய்வுக்காக தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பூசாரி கார்த்திக் முனுசாமியால் பாதிக்கப்பட்ட அனைவரும் பெரிய இடத்துப் பெண்கள் என்பதால், போலீசார் ஆபாச வீடியோக்கள் எந்த வகையிலும் கசிந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக கையாண்டு வருகின்றனர்.

அதேநேரம், பூசாரியால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் ரகசியமாக எடுத்த வீடியோக்களை வைத்து அவர்களை மிரட்டி பணம் பறித்த நிலையில் அதற்கான வங்கி பரிவர்த்தனை ஆவணங்களையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். வங்கி பரிவர்த்தனை ஆவணங்களை கொண்டு பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். கோயிலுக்கு வந்த பெண்களை மயக்கி ரகசிய வீடியோ எடுத்த விவகாரத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த கோயில் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளதால், அதன் பின்னணி குறித்தும், அவருக்கு உடந்தையாக இருந்த சக கோயில் பூசாரிகள் குறித்தும் பல தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த கோயில் பூசாரி கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tirtha ,temple ,
× RELATED திருவேங்கடமுடையானின் தாகத்தை தீர்த்தவர்