×

பட்டப்பகலில் கர்ப்பிணியிடம் கத்தியை காட்டி நகை பறிப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த கர்ப்பிணியிடம் கத்தியக் காட்டி மிரட்டி நகை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகுமார்(34). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சுகன்யா(28). தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் பாலகுமார் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். கர்ப்பிணியான சுகன்யா வீட்டில் தனது குழந்தையுடன் தனியாக இருந்தார்.

அப்போது, சுகன்யாவின் வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர் பாபு இருக்கிறாரா? என்று கேட்டார். அதற்கு சுகன்யா அந்த பெயரில் இங்கு யாரும் இல்லை, என்று கூறினார். தொடர்ந்து, அந்த மர்ம நபர் குடிக்க தண்ணீர் கேட்டார். இதையடுத்து, சுகன்யா தண்ணீர் கொண்டு வர சமையலறைக்கு சென்றார். அப்போது, திடீரென்று வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் கர்ப்பிணியான சுகன்யாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டு 4 கிராம் தங்க கம்மலை பறித்தார்.

பின்னர், அந்த மர்ம நபர் சுகன்யாவிடம் பீரோவை திறக்குமாறு கூறி கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது, சுகன்யா கழிவறை செல்ல வேண்டும் என்று கெஞ்சி சாமார்த்தியமாக அங்கிருந்து தப்பித்து வெளியே வந்தார். மேலும், பொதுமக்கள் உதவியுடன் மர்ம நபரை பிடிக்க முயன்றார். பொதுமக்கள் வருவதைக் கண்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பித்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாலகுமார் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த கர்ப்பிணியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியது.

The post பட்டப்பகலில் கர்ப்பிணியிடம் கத்தியை காட்டி நகை பறிப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Patapagall ,Balakumar ,Malamayur ,
× RELATED பள்ளிக்கல்வித்துறை சார்பில்...