×

திருக்குறுங்குடி அழகிய நம்பி ராயர் பெருமாள் ஆலயம்

சிற்பமும் சிறப்பும்
ஆலயம்: திருக்குறுங்குடி அழகிய நம்பி ராயர் பெருமாள் ஆலயம், திருநெல்வேலியிலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ளது.

காலம்: கிபி.10-ஆம் நூற்றாண்டில் இவ்வாலயத்தில் வழிபாடுகள் நடந்ததற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. இன்றுள்ள அழகிய சிற்பங்களுடன் கூடிய ஆலயக் கட்டுமானங்கள், நாயக்க மன்னர்கள் (15-16 ஆம் நூற்றாண்டு) ஆட்சியில் அமைக்கப்பட்டதாகும்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான அழகிய நம்பி பெருமாள் கோவில், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆகிய நான்கு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமை கொண்டது.

‘அறிவரிய பிரானை யாழியங்கையனை யேயலற்றி,
நறியநன் மலர்நாடி நன்குரு கூர்ச்சடகோபன் சொன்ன,
குறிகொளா யிரத்துள்ளி வைபத்தும் திருக்குறுங் குடியதன்மேல்
அறியக் கற்றுவல்லார் வைட்டணவராழ்கடல் ஞாலத்துள்ளே.’
– திருவாய் மொழி – நம்மாழ்வார்

இக்கோயிலின் தனிச்சிறப்பு இறைவன் தனித்தனி சந்நதிகளில், ‘நின்ற கோலம்’, ‘வீற்றிருந்த கோலம்’ (அமர்ந்த கோலம்) மற்றும் ‘கிடந்த கோலம்’ (படுத்த தோரணை) ஆகிய மூன்று தோற்றங்களில்
காட்சியளிக்கிறார். பிரமாண்டமான நுழைவு வாயில்களின் கூரை உட்புறங்களில் உள்ள சிறப்பான சிற்ப வேலைப்பாடுகள் ஒவ்வொரு அம்சத்திலும் வியப்பில் ஆழ்த்தும்.ஆனால், பெரும்பாலானோர் இவ்விதானங்களை அண்ணாந்து பார்க்கத் தவறி விடுகின்றனர்.

ஆலய வெளிப்புறச் சுவர்கள், கோஷ்டங்கள் ஆகியவற்றில் செதுக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்களின் பேரழகும், நுணுக்கமும் காண்போரைக் கவரும்.வைணவ ஆலயமாக இருந்தாலும், விஷ்ணு அவதார காட்சிகளுடன் (கஜேந்திர மோட்சம், ராமர், கிருஷ்ணர் அவதாரங்கள்), பல்வேறு சிவ வடிவங்களும் அற்புத சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி அவற்றில் குறிப்பிடத்தக்கது. நுண்ணிய சிற்பங்களின் பேரழகும், சிற்ப நுணுக்கமும் சிற்பிகளின் திறனைப் பறை சாற்றுகின்றன.சிற்பக்கருவூலமாக திகழும் இவ்வாலயத்தை, தமிழக ஆலயங்களிலே சிற்ப அற்புதங்கள் நிறைந்த ஆலயம் என்றால் அது மிகையல்ல.

மது ஜெகதீஷ்

The post திருக்குறுங்குடி அழகிய நம்பி ராயர் பெருமாள் ஆலயம் appeared first on Dinakaran.

Tags : Nambi Raya Perumal Temple ,Tirukurungudi ,Tirunelveli ,Tirukurungudi Beautiful Nambi Raya Perumal Temple ,
× RELATED கோடைமழை காரணமாக திருக்குறுங்குடியில் விவசாய பணிகள் மும்முரம்