×

ரிஷபத்தால் தோன்றிய ரிஷபபுரீஸ்வரர்

ஆதியும், அந்தமும் அற்றுத் திகழும் சிவபெருமான், இம்மண்ணுலகில் எண்ணற்ற திருத்தலங்களில், எண்ணிலடங்காத திருவிளையாடல்களை நிகழ்த்தியுள்ளார். ஆதியில், ரிஷபபுரி (சே=ரிஷபம்) எனப் போற்றப்பட்ட மேல்சேவூரில், அவர் ஆற்றிய அற்புதங்களைப் பார்ப்போம். சஞ்சீவி நகரம் என்று முன்பு போற்றப்பட்ட இடமே, இன்று செஞ்சி நகரமாக உள்ளது. ஆதியில் இந்த நகரைத் தலைமையிடமாகக் கொண்டு, விருபாக்ஷன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். ஒருநாள், தனது அரசவைக்குட்பட்ட ஒர் வனத்திற்கு தனது படைகள் சூழ வேட்டையாடச் சென்றான். அங்கே அற்புதமான சிவாலயம் இருப்பதைக் கண்டு, வணங்கி அருகிலிருந்த ஆசிரமத்தை அடைந்தான். அங்கு தவம்புரிந்து வரும் தபோரிஷியை நமஸ்கரித்து, அவ்விடத்தைப் பற்றி விசாரித்தான். அம்மாமுனிவர் இந்த தலத்தின் மகிமைகளை விரிவாக எடுத்துக் கூறினார்.

துர்வாசரின் சாபம்

கயிலையில் ஒரு சமயம் பல தபோரிஷிகளுடன் கயிலையம்பதியை தரிசிக்க சென்றார் துர்வாச மகரிஷி. அப்போது ஈசனது உத்தரவின்படி யாரையும் உள்ளே அனுமதிக்காமல் தடுத்தனர். சிவதரிசனத்தை தடுத்ததால் கோபம் கொண்ட துர்வாசர், நந்திதேவர், சண்டிகேஸ்வரர் மற்றும் 24 சிவகணங்கள் உட்பட யாவரும் பூமியில் பிறக்க வேண்டும் என சாபமிட்டார். அதன்படி வராகநதிக்கரையில் புன்னை வனத்தில் காமதேனுவுக்கு சேங்கன்றாக (ரிஷபமாக) அவதரித்தார், திருநந்திதேவர். ஈசன் லிங்கமாக நாவல் மரத்தடியின் புற்றில் பிரதோஷ வேளையில் தோன்றினார். புற்றின் 24 கண்களில் இருந்து, 2 4சிவலிங்கங்கள் தேவ வைசியராய் தோன்றினர். அம்பிகை எட்டு வயது சிறுமியாய், 24 தேவ வைசியருக்கு சகோதரியாக குலசம்வர்த்தினி என்னும் பெயருடன் அவதரித்தாள். சண்டிகேஸ்வரர் கமலமுனியாக அவதாரம் செய்தார். வராகநதி என்னும் சங்கராபரணி நதிக்கரையில் ரிஷபபுரி என்னும் இத்தலத்தில் புன்னை மரத்தினிடையே ஆசிரமம் அமைத்து வாழ்ந்தார் கமலமுனிவர். இந்த ரிஷபபுரிக்கு ஒரு யோசனை, தூரத்தில் உலகமாபுரம் என்னும் பட்டினத்தில் சகோதரியுடன் இருந்து கொண்டு அரசு புரிந்திட, 24 மானசீக புத்திரர்களுக்கும் கட்டளையிடுகின்றார் கமலமாமுனிவர். அதன்படி, உலகமாபுரத்தில் மூத்தவனான குஞ்சலகனுக்கு பட்டாபிஷேகம் செய்விக்க, அவர்கள் நன்முறையில் அரசாட்சி புரிந்தனர். ரிஷபமான நந்திதேவர் தனது கொம்பினால் புற்றினை முட்டிட, அங்கு சுயம்புவாக வெளிப்பட்டார் ரிஷபபுரீஸ்வரர்.

நாரதர் திரு அவதாரம்

கமலமுனிவர் அனுதினமும் தடாகத்தில் ஸ்நானம் செய்வது வழக்கம். ஒருநாள் அந்த தடாகத்தில் ஸ்நானம் செய்துவிட்டு, திரும்புகையில் ஓர் அதிசய தாமரை புஷ்பத்தை காண்கின்றார். அதை பறித்துக்கொண்டு பிரம்மலோகம் சென்று பிரம்மனிடம் கொடுக்கின்றார். இதை பிரம்மா, பிரம்மநிஷ்டனாகிய (நிஷ்டன்=தியானத்தில் இருப்பவன்) ஓர் ரிஷி உண்டாக வேண்டும் என்று நினைத்து முகர்கின்றார். உடன் [நந்தி தேவரிடம் முன்பு சிவ பரம்பொருள் கூறியபடி] அதிலிருந்து நைஷ்டிக பிரம்மச்சாரியாய், தண்டு-கமண்டலத்துடன் ஆன நாரதமகரிஷி அவதரிக்கின்றார். அவரிடம் உபதேசம் பெற்று திரும்பினார் கமலமுனிவர்.

குலசம்வர்த்தினி கல்யாணம்

தேவியின் ஸ்வரூபமான குலசம்வர்த்தினி பருவ வயதை அடைந்தாள். தந்தை கமலமுனிவர் திருமணம் செய்து கொள்ளும்படி அறிவுறுத்துகின்றார். அதற்கு குலசம்வர்த்தினியோ, ஈசனைத் தவிர வேறு யாரையும் மணந்து கொள்ள மாட்டேன் என உறுதியாக கூறுகின்றாள். தவக்கோலம் ஏற்று தவம் புரிய தொடங்குகின்றாள். இதை அறிந்த ஈசன், கமலமுனிவர் ஆசிரமத்திற்கு வந்து விருப்பம் தெரிவிக்க, ரிஷபபுரியில் கோலாகலமாக நடந்தேறியது சிவன் – பார்வதி திருக்கல்யாணம். இங்கு இறைவனது திருக்கல்யாணம் இரவில் நடந்ததால், இன்றும் மாலையில் திருமணம் நடப்பது வழக்கமாக உள்ளது.

கிராம மக்களுக்காக வந்த வேதநாயகன்

சஞ்சீவி நகரை முன்னொரு சமயம் மணிபுத்திரன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். அவன் அழகிய மான் ஒன்றை வளர்த்து வந்தான். அதன் மீது அலாதி பிரியம் கொண்ட மணிபுத்திரன், அந்த மானுக்கு தங்க ஆபரணங்களை அணிவித்து, அழகு பார்த்தான். ஒருநாள் அந்த மான், அரண்மனையை விட்டு விலகிச் சென்று, மக்கள் வசித்த கிராமபுறப்பகுதிக்கு சென்று விளையாடியது. அப்போது அங்கிருந்த ஒருவன், அந்த மானின் ஆபரணங்களை கழற்றிக்கொண்டான். விளையாடி முடித்த மான், மீண்டும் அரண்மனைக்கு வந்து ஓய்வெடுக்க தொடங்கியது. மறுநாள், அந்த மானைக் கண்ட காவலாளிகள், மானின் கழுத்தில் இருந்த தங்க ஆபரணங்கள் களவாடப்பட்டுள்ளதை அரசனிடம் சென்று கூறினர். அரசன் விசாரித்தபோது, உண்மை நிலவரம் தெரியவந்தது. திருடிய நபர் யார் என்று புரியாது மன்னன் தவித்தான். அதனால், அந்த கிராம வாசிகள் அனைவரையும் அழைத்து விசாரித்தான். அவர்களோ.. நாங்கள் திருடுவதில்லை, பொய் சொல்வதில்லை, வியாபாரத்தில் அதிகலாபம் ஈட்டுவது இல்லை, தர்மத்திற்கு புறம்பானவற்றை செய்வதில்லை என பலவாறு கூறினர். மன்னன், மந்திரியை ஆலோசித்து, இன்றிலிருந்து எட்டாவது நாள் எடுத்த நகைகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும். தவறினால், கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் அனைவரும் கையைவிட வேண்டும் என உத்தரவிட்டான். இதனால், பயந்து தங்களை காத்துக் கொள்ள, ஈசனான ரிஷபபுரீஸ்வரருக்கும், குலதெய்வமான குலசம்வர்த்தினிக்கும் பிரார்த்தனை செய்து, திருக்கோயிலை புதுப்பிப்பதாகவும், உற்சவங்கள் செய்வதாகவும் வேண்டினர்.

மன்னனுக்கு பயந்து பலரும் ஊரைவிட்டு ஓடினர். மீதமுள்ளவர்கள், எட்டாம் நாள் அன்று அரசவைக்கு செல்லும் முன்னர், அவர்கள் முன், பதினாறு வயது இளம் குமாரனாக வேஷ்டி, ருத்ராட்சம், ஜபமாலை சகிதமாக மகா தவசியாக வந்தார் சர்வேஸ்வரன். அவருக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்து வணங்கினர். தானும் இந்த கிராமமக்களில் ஒருவன்தான் என அறிமுகம் செய்து கொண்ட அந்த தவசி, அவர்களை அழைத்துக் கொண்டு அரசவைக்குச் சென்றார். கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில், தான் முதலில் கைவிடுவதாகவும், பின்னர் நீங்கள் கையை விடுங்கள் எனவும் அறிவுறுத்தினார். அதன்படியே நடந்தது. அவர் கைவிடும்போது சந்தனக் குழம்பில் கைவிடுவது போன்று காட்சியளித்தது. இதைக் கண்டு அதிசயித்த மன்னன், வந்திருந்த மகாபுருஷர் பாதங்களில் சரணடைந்து எழ.. சிவபெருமான் ரிஷபாடரூடராக காட்சி தந்தருளினார்.

1008 சிவாலயங்களையும், 108 வைஷ்ணவ ஆலயங்களையும் தரிசித்த புண்ணியமும், சகல தீர்த்தங்களில் நீராடிய புண்ணியமும், ரிஷபபுரியென்னும் இத்தலத்தின் தீர்த்தமான சங்கராபரணி நதியில் நீராடி ரிஷபபுரீஸ்வரர் – மங்கலாம்பிகையை வழிபட்டால் கிடைக்கும் என்று நைமிசாரண்யத்தில் வேதவியாசரின் சீடரான சூதமாமுனிவர் அருளியுள்ளதாக “ரிஷபபுரி மகாத்மியம்’’ தெரிவிக்கின்றது. இந்த தலத்தினை சுந்தரர் வைப்புத்தலமாக பாடியுள்ளார். அருணகிரிநாதர் இத்தல கந்தன் மீது திருப்புகழ் பாடியுள்ளார். அம்பாள் மீது வீரமாலை சுவாமிகள் பாடிய 11 பாடல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. மேற்கு முகமாக அழகிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் நாற்புறமும் மதில்கள் சூழ, சங்கராபரணி ஆற்றங்கரையையொட்டி பிரம்மாண்டமாக அமையப் பெற்றுள்ளது ஆலயம்.

இரண்டு பெரிய திருச்சுற்றுகளைக் கொண்டுள்ளது. உள்ளே தென்கிழக்கு மூலையில் மடப்பள்ளியும், தென்மேற்கில் தலகணபதி சந்நதியும், வடகிழக்கில் வாகனக் கொட்டடியும் அமைந்துள்ளன. வடபிராகாரத்தில் பிரம்மாண்டமான வில்வமரமும் உள்ளது. ராஜகோபுரத்தின் நேராக துவார கணபதி சந்நதி ஒன்றுள்ளது. சுவாமி சந்நதி கிழக்கு முகமாக அமைந்துள்ளது. கிழக்குப்புற வாயில் அடைக்கப்பட்டுள்ளது. அங்கே நந்தி, கொடிமரம், பலிபீடம் என காணப்படுகிறது. சுவாமி சந்நதி முகமண்டபம், ஸ்நபன மண்டபம், அந்த்ராளம், மூலஸ்தானம் என்கிற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கருவறையுள் கருணைமிகு வடிவில் காட்சி தருகின்றார் ரிஷபபுரீஸ்வரர். புற்றினுள் இருந்து இந்த பெருமானை ரிஷபம் தனது கொம்பினால் முட்டி வெளிப்படுத்தியதால் இவருக்கு இந்த பெயர் வந்தது. இன்றும் இந்த லிங்கத்தின் சிரசில் ரிஷபம் முட்டிய அடையாளம் காணப் படுகிறது. வள்ளி – தெய்வானை சமேத ஷண்முகர் சந்நதி உட்பிராகத்தின் வடமேற்கு திசையில் அமைந்துள்ளது. வடக்கு பிரகாரத்தில் தென்முகமாக அமையப் பெற்றுள்ளது. அம்பிகையின் தனிச் சந்நதி. அம்பிகை மங்களாம்பிகை நின்றவண்ணம் அருள் சிந்துகின்றாள்.

குணசம்வர்த்தினி என்னும் பெயரும் இங்கு அம்பிகைக்கு உண்டு.

பல்லவர்கள் கலைத்திறன் கொண்ட சிம்மத் தூண்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. அனைத்து சிவாலய கோஷ்டங்களும் முறையே அமைந்துள்ளன. கி.பி.928-ல் முதலாம் பராந்தகச் சோழனால் நிர்மாணிக்கப்பட்ட இவ்வாலயத்தில் சோழர்காலக் கல்வெட்டுகள் உள்பிரகாரத்தின் வெளிப்புறச் சுவரில் அதிகம் காணப்படுகின்றன. ஸ்தலவிருக்ஷமாக புன்னை மரமும், ஸ்தல தீர்த்தமாக வராக நதி என்னும் சங்கராபரணி நதியும் திகழ்கிறது. கண்ணைக் கவரும் சிற்பங்களும், எழில் கூட்டும் கோயில் அமைப்பும் மகிழ்ச்சியை அதிகரிக்கின்றது. பங்குனியில் பிரம்மோற்சவம் மற்றும் ஆடி மாதம் மூன்று தினங்கள் உற்சவம் ஆகியன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இதில் அம்பாள் திருவீதி உலாவும் உண்டு. ஆடிக் கிருத்திகை, சிவராத்திரி, ஆருத்ரா போன்றவையும் இங்கு விசேஷமாக அனுசரிக்கப்படுகின்றன. திருமண வரம் அருளும் திவ்ய திருத்தலமாக திகழும் இங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடத்தினால், விரைவில் திருமணப் பிராப்தி ஏற்படும். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் செஞ்சி-திண்டிவனம் பேருந்து சாலையில் வல்லம் கூட்டுரோட்டில் இருந்து கொங்கரப்பட்டு வழியாக மேல்சேவூர் வரலாம். செஞ்சியிலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்திலும், விழுப்புரத்திலிருந்து 48 கிலோமீட்டர் தூரத்திலும் மேல்சேவூர் அமைந்துள்ளது.

The post ரிஷபத்தால் தோன்றிய ரிஷபபுரீஸ்வரர் appeared first on Dinakaran.

Tags : Rishabpureeswarar ,Taurus ,Lord Shiva ,Melsevur ,Rishapapuri ,Sanjeevi ,Senchi ,
× RELATED ரிஷபம்